உள்ளத்தில் உருளும் வரிகள்

ஒரு வரி எண்ணங்கள்

  1. பணம் விரும்பிகள் உறவுகளை அணைக்கமாட்டார்களே!
  1. பிச்சை எடுத்தாலும் நம்பிக்கையைக் காப்பாற்றுபவரே நல்லவர்!
  1. அன்பும் காதலும் ஒன்றாயினும் வாழ்க்கை வேறாகிறதே!
  1. நல்லவராயினும் கெட்டவராயினும் பார்ப்பவர் பார்வையில் தானே!
  1. அன்பாலே மதிப்பளித்தோருக்குத் தானே ஊரே திரண்டு வருமே!

இரு வரி எண்ணங்கள்

1

ஊருக்குள்ள மழை வந்து வெள்ளம் பெருகி

ஏழைகளின் கொட்டில் வீடுகளைத் தின்கிறதே!

2

நாளுக்கு நாள் கடலலைகள் கரையைத் தேடி

கரையோர மண்ணைக் கடலுக்கு இரையாக்குகிறதே!

3

அழகை, அறிவைப் பேணும் வாலைகள் கூட

காளைகள் கேட்கும் கொடுப்பனவுக்கு வழியின்றி சாவு!

4

தமிழருக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றி

தமிழினமே தலைநிமிர வழியின்றி சீரழிகின்றதே!

5

கரைகின்ற காலமும் நேரமும் மீளக் கிடைக்காது

மீளக் கிடைக்காத பொழுதிற்குள் வாழ்ந்திடணுமே!

Advertisements

உளநோய்க்கு மருந்து உள்ளமே!

உள/மன நோய் வரலாம்!

அடிக்கடி நடைபேசியைச் சொறிவதும்

ஓய்வின்றி இணையத்தில் உலாவுவதும்

தொலைக்காட்சித் தொடரில் தலைகாட்டுதலும்

செய்யும் பணிகளில் ஒழுங்கின்மையும்

குடும்பத்தில் அன்பும் பண்பும் இல்லாமையும்

தோல்விகளைக் கண்டு துயருறுவதும்

வெற்றிகளைக் கண்டு பிறரை மதிக்காமையும்

பணத்தைக் கண்டதும் சேமித்து வைக்காமையும்

பணம் இல்லையென்றால் பிறரை நாடுவதும்

வாழ்வில் போதிய மகிழ்வைத் தராமையால்

உள/மன நோய்கள் எட்டிப் பார்க்குமே!

வழமையான வாழ்வில் தான் – எவருக்கு

பயன் மிக்க வழியில் நேரம் செலவழிக்காமை

பெறுமதியோடு பொழுதுகளை போக்காமை

நல்ல உறவுகளை அணைக்காமை

திட்டமிட்டுச் செயலில் இறங்காமை

வேண்டாத எதையும் எண்ணித் துயருறலும்

விரும்பியதை அடைய முடியாமல் துயருறலும்

உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தாத வேளையில்

உள/மன நோய்கள் வரலாம் தானே!

கிட்டாதாயின் வெட்டென மறந்தும்

கைக்கெட்டியதை நிறைவோடு ஏற்பதும்

கைக்கெட்டியதைக் கையாளப் பயில்வதும்

உள்ளம் அமைதியுற நல்லதை நினைப்பதும்

உள/மன நோய்கள் வருவதைத் தடுக்குமே!

உளநோயை உருவாக்காதீர்!

வீட்டுக்கு வீடு வாசல்படி தான்

உரிமையாளர் ஒப்புதல் இன்றி

உள் நுழைய இயலாதே!

ஒப்புதல் ஏதுமின்றி வீட்டிற்குள் நுழைந்தால்

உடமைகளைக் களவெடுக்கலாம் – அங்கே

கடிநாய்கள் இருப்பின் கடிவேண்டிச் சிக்கலாம்!

ஆளுக்கு ஆள் உள்ளம் தான்

உள்ளத்தின் விருப்பம் இன்றி

உள்ளத்தில் இடம் பிடிக்கேலாதே!

ஒப்புதல் இன்றி உள்ளத்தில் நுழைந்தால்

எதிர்ப்பும் வெறுப்பும் வெளியேற்றுமே

உள்ளத்தின் விருப்புக்கு இசைந்து விட்டால்

உண்மையிலே உள்ளத்தையே களவெடுக்கலாம்!

வீட்டின் உடமைகளைக் களவெடுத்தோர்

வாழ்வில் எப்போதும் எதிரியே!

உள்ளத்தைக் களவெடுத்தவர் எவரோ

அவரே வாழ்வில் அன்புக்கு உரியவர்

எவராச்சும் இந்த உண்மையை அறிவாரோ!

வீட்டின் உடமைகளைக் களவு கொடுத்தோர்

இழப்பை எண்ணி துயர் தாங்காமல்

உள்ளமும் உடலும் நோவுற வாழ்வாரே!

உள்ளத்தில் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திய

வாழ்வின் எதிரியை எண்ணி எண்ணி

உள்ளம் நொந்தவர் வாழ்வும் துயரே!

நம்மவர் வீடுகளிலும் சரி

நம்மவர் உள்ளங்களிலும் சரி

பாதிப்பும் வெறுப்பும் மலிந்து விட்டால்

உள்ளம் புண்ணாகக் கூடும் – அந்த

உளப்புண் நோக நோக உளநோயே!

மாற்றார் உள்ளங்களைப் புண்ணாக்கி

மாற்றாருக்கு உளநோயை உருவாக்குவோர்

உலகின் மாபெரும் கெட்ட உள்ளங்களே!

பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!

எனது ‘உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் (https://plus.google.com/u/0/communities/110989462720435185590)’ குழும உறுப்பினர்களுக்கும் ‘தமிழ் வலைப்பதிவகம்’ வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களுக்கும் ஏனைய குழும உறுப்பினர்களுக்கும் எனது வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் தந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியதோடு அறிவூட்டிய அறிஞர்களாகிய வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. என் அன்புக்குரியவர்களே! நான் “அலைகள் ஓய்வதில்லை” என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்!

2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த எண்ணியுள்ளேன். பொத்தக உருவாக்கத்தை (அச்சிடும் பணி) தமிழகம்-திருச்சி இனிய நந்தவனம் சஞ்சிகை குழுமம் செய்து தருகிறது. நான் வெளியிடவுள்ள எனது பொத்தகத்தில் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களிடம் இருந்து ‘எனது படைப்பாக்கத் திறன்’ பற்றிய சிறு குறிப்பினைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

விரும்பும் உள்ளங்களே! P.P.Size படம், புனைப் பெயர், இயற் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைப்பக்க முகவரி ஆகியவற்றுடன் ‘எனது படைப்பாக்கத் திறன்’ பற்றிய தங்கள் எண்ணங்களை சிறு குறிப்பாக 02/11/2018 இற்கு முன்னதாக wds0@live.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள். வலைவழி நமது தமிழ் இலக்கிய உறவு தொடரும். தொடரவே நானும் விரும்புகின்றேன்.

நான் 1986 இலிருந்து எழுதினாலும் இதுவரை பொத்தகமேதும் வெளியிடாமைக்கு பொருண்மியும் ஏதுவாகலாம். அச்சடித்த பொத்தக வெளியீட்டில் வேறு சில சிக்கலும் வரலாம். எனது மண்ணில் (யாழில்) கண்டவற்றைக் கீழே பதிவு செய்துள்ளேன்.

முழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/10/blog-post_13.html

கவிதை எழுதப் பழகலாம் வாங்க!

tamillanguage-l

நல்ல தமிழ் சொல்களாலான வரிகள், உணர்வு வீச்சாக அமைய,
ஓசை நயம் வந்தமர, எதுகையும் மோனையும் கூடிவர, வாசிப்பவர் மீள மீள வாசிக்கத் தூண்டும் வரிகளாக அமைந்தால் கவிதை எனலாமென நண்பர் ஒருவர் எனக்கு மதியுரை கூறினார். அதன்படிக்குக் கீழ் வரும் பகுதியைக் கவிதையாக்க முனைகின்றேன்.

கவிதைக்கான சூழல்:
கடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில் சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர, அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும் சட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார். வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர். பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க; பிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே தமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும் செய்கின்ற நற்பணியாகும்.

இச்சூழலுக்கு ஏற்ற கவிதை எது?
1.
கடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில்
சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர,
அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும்
சட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார்.
வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு
அப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர்.
பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க;
பிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
அதுவே
தமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும்
செய்கின்ற நற்பணியாகும்.

*இப்படிக் கட்டுரை வரிகளைத் துண்டு துண்டாக எழுதினால் கவிதை அமைந்துவிடாதே!

2.
பகலவன் எரிந்தெரிந்து ஒளி தருவது போல
அப்பாவும் கடுமையாக உழைத்து
வருவாயோடு வருகையில் தான்
அரைப் பட்டினியோடு கிடந்த அம்மா
அடுப்பில உலை வைத்துச் சமைப்பார்!
வறுமையின் தாக்கமும் குடும்பத் துயரும்
பிள்ளைகளறியா வண்ணம் உணவூட்டி வளர்த்த
பெற்றோருக்குப் பிள்ளைகள் படித்து அறிஞராகணுமே!
இன்றைய படிக்கிற பிள்ளைகளை நம்பியே
நாளைய நம்நாடு முன்னேறக் காத்திருக்கிறதே!

*எனது நண்பர் சொன்னபடி கவிதை ஆகவில்லையே! ஒரு படி முன்னேறினாலும் கவிதை அமைய முயல வேண்டும்

3.
281 நாள் எம்மைச் சுமந்த அம்மா
அரைப் பட்டினியாக முழுப் பட்டினியாக
தான் நொந்தும் பிள்ளை நோகாமல்
பகலவனைப் போல எரிந்தெரிந்து உழைத்தே
பணமீட்டிச் சமையல் பொருளோடு வர
வீட்டில சமையல் சாப்பாடு நிகழுமே!
வறுமையும் துயரமும் பிள்ளைக்குத் தெரியாமல்
நாளும் தப்பாமல் பட்டினி போடாமல்
அன்பும் அறிவும் ஊட்டி பிள்ளைகளை
வளர்த்தெடுப்பதில் பெற்றோர் பங்கு உயர்வானதே!
பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பணிக்கு
பிள்ளைகள் தம் அறிவைப் பெருக்கி
ஊருக்கும் நாட்டுக்கும் நற்பணி ஆற்றலாமே!

*இதெல்லாம் கவிதையென்றால், உண்மையான கவிதையை என்னவென்று சொல்லலாம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.
………………………………..

முழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/10/blog-post_6.html

நான் எழுதியது கவிதை இல்லையே!

write2vanakkam

உள்ளச் சுமைகளைக் கொஞ்சம் இறக்கி வைக்க
கள்ளமில்லாமல் பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.
நான் எழுதுவது எல்லாம் எழுத்தானாலும்
கவிதையெனச் சொல்வதற்கில்லை என்பேன்!

புதுப்பாவலர் மூ.மேத்தாவின் புதுப்பா போல
கிறுக்கிப் பார்க்க முனைந்தாலும் கூட
பாவரசர் கண்ணதாசனைப் போலத் தான்
நானும் மின்ன வேணுமென எண்ணியே
எதுகை, மோனை இருந்தாலும் கூட
*கோட்பாட்டை நுழைத்து விளக்கப் போய்
என்னெழுத்தில் கவித்துவம் இழந்திருக்க
நான் எழுதியது கவிதை இல்லையே!

மேற்கோள் குறியீட்டிற்கு உள்ளே தான்
திருக்குறளையும் ஆத்திசூடியையும் தான்
நுழைத்து வைத்து அழகு பார்த்து
அறிவுரை கூறிட எழுதினாலும் கூட
அசை, சீர், தளை எட்டிப் பார்க்கினும்
உரைநடை போல அடிகள் அமைய
என்னெழுத்தில் கவிதைநடை இல்லையே!

கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கலந்தே
படித்ததும் சுவைத்ததும் பட்டறிந்ததும்
கதை சொல்லும் பாணியில் உரைத்திடவே
அடி, தொடை, பிணை வந்தாலும் கூட
கட்டுரை வரிகளை உடைத்துப் போட்டதாக
எழுத்து நடை நொருங்கிக் கிடப்பதால்
என்னெழுத்தும் கவிதை போல அமையாதே!

திரையிசைப் பாடலடிகளைச் சுட்டிக்காட்டி
திருப்புகழ் இசைக்கூட்டை உள்வாங்கி
துக்ளக் சோ, மனோரமா ஆச்சி சொன்ன
நகைச்சுவையும் கலந்து எழுதிக் கிறுக்கிய
விளம்பரப் பாணியில் அடிகள் அமைந்த
கவிதை வீச்சின்றிய என்னெழுத்தில் பாரும்
மேடைப் பேச்சாக வாடை வீசுகிறதாமே!

“வறுசட்டியில் துள்ளும் சோளப்பொரி போல
வானில் பூத்த வெள்ளிகள் மின்னுதே!” என
மீள மீள இசைத்துப் படிக்க வல்ல
செவிமொழியாம் நாட்டார் பாடல் போலாவது
வாசிக்கும் போதே இசை மீட்டாத
என்னெழுத்தில் கவிதையழகு இல்லையாமே!

எழுதுவதால் உள்ளச் சுமைகள் குறையுமென
பெரும் கதையைக் கூட சுருங்கக் கூறவல்ல
கவிதை வடிவத்தை விரும்பினாலும் கூட
ஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்று
கவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்
வாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளை
நானும் தொகுத்துப் பகிர்ந்தேன் – இனியாவது
கவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென!

*கோட்பாடு – தத்துவம்

முழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/10/blog-post.html

பிறர் சொல்லைக் கேட்க மாட்டார்களே!

கடன் கடனாக வேண்டும் உறவுகளே!
கடைசியிலே
தூக்குக் கயிற்றில தொங்குவீர்!
கடனை நாடாமல் தேடாமல்
கைக்கெட்டியதைக் கையாள முற்பட்டால்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கலாம் வா!
கடன்பட்டவர் சாவின் பின்னே தான்
கடன்கொடுத்தவனே
தன் நிலையை எண்ணிப் பார்க்கிறான்!
அன்பான கடன்கொடுப்போரே!
மாற்றாருக்குக் கடன்கொடுப்பதை விட
சேமிப்பகத்தில் வைப்பிலிட்டால்
வட்டி குறைந்தாலும் முதலுக்குச் சேதமில்லையே!
ஆனால், ஒரு உண்மை
கடன்கொடுத்தோரும் கடன் பெற்றோரும்
எவர் புத்திமதியும் கேட்டதாக
தகவல் ஏதும் கிடைக்கவில்லையே!

முழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/09/blog-post_23.html

அலைகள் ஓய்வதில்லை!

எழுதுகோலும் எழுதுதாளும்
என் கையில் சிக்கிவிட்டால்
என்னென்னமோ எழுத வருகிறதே!
எழுதிக்கொண்டே இருக்கும் வேளை
இல்லாள் கண்டுவிட்டால்
“அரைச் சதம் வருவாய் தராத எழுத்தால
உலகை உருட்டலாமென எழுதும்
முட்டாளைக் கட்டிப்போட்டு அழுகிறேனே!” என
ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுவாள்!
(மிகுதி முதன்மைப் பக்கத்தில்…)

ஓயாத அலைகள்

உள்ளத்தில் குந்தி இருக்கும்
எண்ண அலைகள்
அடிக்கடி மீட்டுப் பார்க்கத் தூண்டுமே!
மீட்டுப் பார்க்கத் தூண்டிய
எண்ணங்களைப் பாவண்ணங்களாக
எழுத முயன்று கொண்டிருப்பேன்!
நான் எழுதும் வேளை
அத்தான் கண்டார் என்றால்
எழுது தாள் கிழிந்து விடாமல்
எழுது கோல் தேய்ந்து விடாமல்
ஓயாத எண்ண அலைகளை
அழகாக எழுதிக் கொள்வதால்
உள்ளம் ஆறுமென ஆதரவு தருவாரே!
(மிகுதி முதன்மைப் பக்கத்தில்…)

முழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/09/blog-post_15.html

 

%d bloggers like this: