என்னை நீ அறி

ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த பண்டிதர் இராமலிங்கம் செல்லமுத்து இணையர்களின் மூத்த மகன் காசிராசலிங்கம் அவர்களுக்கும் அதே இடத்தைச் சேர்ந்த உடையார் விநாயகமூர்த்தி வள்ளியம்மை இணையர்களின் மூத்த மகள் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.

ஆறு ஆசிரியர்களிடம் தொடக்கக் கல்வி (அரிவரி) யைத் தொடர்ந்தேன். பின் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதலாம் தவணை வரை படித்தேன். பின் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் தவணை இலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் சித்தன்கேணி வட்டு. இந்துக் கல்லூரியில் பதினோராம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன்.

பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆயினும், திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொடக்கநிலை வகுப்பில் ஓராண்டு படித்தேன். ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அதனைத் தொடர முடியவில்லை. பின் கணினித் தொழில்நுட்ப அறிவில் பல டிப்புளோமாக்கள் படித்தேன். கணினி விரிவுரை, மென்பொருளாக்கம், இணையத்தள வடிவமைப்பு போன்ற தொழில்களில் பணியாற்றுகிறேன். மேலும் இதழியல், உளவியல் டிப்புளோமாக்களும் படித்தேன்.

என்னைப் பற்றி மேலுமறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://kayjay.tk

1987 இல் இருந்து கட்டுரை, கவிதை, கதை, நகைச்சுவை, நாடகமென இலக்கியத் துறையில் எல்லாப் பகுதிகளிலும் எனது புனைவு ஆக்கங்களை எழுதி வருகின்றேன். எனது அப்பாவின் அப்பா (எனது பேரனார்) ஒரு தமிழ்ப் பண்டிதர். அவரைப் போல என்னால் தமிழ்ப் பண்டிதராக முடியவில்லை. ஆயினும் தமிழைப் பேணும் பணியில் என்னை ஈடுபடுத்த விரும்பினேன். அதன் விளைவே “தமிழ் இனி மெல்லச் சாகாது” என உலகெங்கும் தூயதமிழ் பரப்பிப் பேணும் பணியை wordpress வலைப்பூ மூலமாக நடாத்த முயற்சி எடுத்தேன்.

“எப்படி ஐயா! உலகெங்கும் தூயதமிழ் பரப்பிப் பேணப் போகின்றீர்?” என்று தான் எல்லோரும் என்னைக் கேட்டனர். பேசும் தமிழில் கூட பேசுவது தமிழ் சொல்லா பிறமொழிச் சொல்லா என்றறியா நம்மாளுகளிடம் தூயதமிழ் பற்றிப் பேசுவதில் பயனில்லை எனப் பலரும் எனக்கு அறிவுரை கூறினர். இல்லை! இல்லை! பேரறிஞர்கள் பலர் தூயதமிழ் பேணும் பணியில் ஈடுபட்டு உள்ளனரே… நான் அறிவில் சின்னப் பொடியன் என்றாலும் எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இப்பணியைத் தொடர விரும்புகிறேன்.

இணைய வழியில் என்னத்தைப் பண்ணிக் கிழிக்கப் போறாய் என நீங்கள் கேட்கலாம். வெளிநாட்டவர் தங்கள் பிள்ளைகள் தமிழைப் படிச்சுப் பேண நூல்கள் இல்லை என்றனர். அதற்கு மின்னூல் களஞ்சியத்தில் ஓரளவு (550 இற்கு மேல்) நூல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இணையத் தளங்களில் தமிழில் தட்டச்சுச் செய்ய எழுத்துப்பலகை என்றொரு இணையப் பக்கத்தை நடாத்துகிறேன்.

தமிழைப் பேணும் வழிகளை எடுத்துக் கூறுவதோடு, அதற்கு வழிகாட்டும் பதிவுகளை, செய்திகளை, அறிஞர்களின் அறிவுரையை எனப் பலவற்றை இத்தளத்தில் தர எண்ணியுள்ளேன். மேலும் படைப்பாளிகளை உருவாக்கி அவர்கள் மூலமாக தமிழைப் பேண உதவும் வகையில் அவர்களுக்கான பயிற்சிப் பதிவுகளையும் இதழியல் அடிப்படை எண்ணக் கருக்களையும் இத்தளத்தில் பதிவு செய்யவுள்ளேன்.

wordpress இல் கவிதையைத் தவிர்த்து ஏனைய இலக்கிய ஆக்க முயற்சிகளை எப்படிப் புனையலாம் எனத் தரவுள்ளேன். கவிதையைச் சிறப்பாக google blogger இல் “யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்” என்றழைத்து எப்படிக் கவிதை புனையலாம் என விளக்கும் பதிவுகளைத் தரவுள்ளேன். அதாவது

அந்தத் தெருப் பக்கமாக
இந்த ஆளுகள் போகையிலே
சொந்த மூக்கை மூடுறாங்க
எந்த ஆளுக்குமிது தெரியாதோ
வந்து பார்த்தால் புரியாதோ
முந்துவது வாக்கு வேண்ட
பிந்துவது தெருவோரத்துக் கழிவுகளை அகற்றவா?

“நம்மவூர்த் தெரு அழுகிறதே!” என்று இப்படி எல்லோரும் பாபுனையும் (கவிதை ஆக்கும்) போது கருத்திற் கொள்ள வேண்டிய இலக்கணங்களை google blogger இல் தரவுள்ளேன்.

மேலும், தூயதமிழ் பரப்பிப் பேண உதவும் இணையத்தளச் செயலிகளையும் கணினி மென்பொருள்களையும் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன். தூயதமிழ் பரப்பிப் பேணும் பணியில் இறங்கியுள்ள அறிஞர்களுடன் இணைந்து கூட்டுச் செயற்பாடுகளில் பங்கெடுக்கவும் எண்ணியுள்ளேன். நாம் தமிழரென முழங்குவதை விட நம் தமிழ் வாழ்கிறது என்பதில் பெருமை கொள்வோம். உலகெங்கும் தமிழ் வாழ்கிறது என்றால் அங்கெல்லாம் தமிழர் வாழ்கின்றனர் என்று பொருள் கொள்வோம்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்