தமிழறிஞர்களே!

போர்த்துக்கல், நெதர்லாந்து, ஐக்கிய ராச்சியம் போன்ற இடங்களில் தமிழின் தொன்மைக்கான சான்றுகள் உள்ளனவாம். உங்களுக்கு இதில ஐயமுண்டோ? போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் தானே இந்தியா, ஈழம்(இலங்கை) போன்ற நாடுகளை அடக்கிப் பிழிந்து ஆண்டமையால் அவர்களிடம் தமிழின் தொன்மைக்கான சான்றுகள் இருக்கலாம் தானே!

அன்று தமிழர் மேற்காணும் ஆதிக்க வெறியர்களுக்கு உழைத்துக் கொடுக்க வேண்டியதாயிற்று. மேலும், அவர்களது மொழியையும் மதங்களையும் பின்பற்ற வேண்டியதாயிற்று. இதனால், பலர் தமிழை மறந்து பிற மொழிக்காரர் ஆயிட்டினம். அக்கால கட்டத்திலிருந்தே தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறதே!

ஆனால், இன்றைய கதைவேறு. இந்தியாவிலிருந்து தொழில் நோக்கில் வெளியேறும் தமிழரும் ஈழத்திலிருந்து போர்ச்சூழல் காரணமாக வெளியேறும் தமிழரும் உலகில் பரந்து வாழ்கின்றனர். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் தமது அடையாளமாகிய மொழியை மறந்து பிற மொழிகளைத் தழுவிக் கொள்வதை அறிவீர்கள்.

இந்தியரும் ஈழவரும் புலம் பெயர்ந்து அவ்வவ் நாடுகளுக்கு உழைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், எதைச் செய்தாலும் அவ்வவ் நாட்டு மொழிகளில் செய்வதால் தமிழை மறந்து விட்டார்கள் போலும். இது இன்றைய அதாவது 2000 ஆம் ஆண்டிற்குப் பிந்திய செய்தி.

தமிழை ஆய்வு செய்ய முனைந்தால் அதற்குரிய வரலாற்று இடமான சிந்து வெளிச் சூழலான மொகஞ்சாதாரோ, ஹரப்பா இன்று பாகிஸ்தானுக்குள்ளே ஒளிந்திருக்கிறது. அம்புலிமாமா சிறுவர் இதழில் வெளியான விக்கிரமாதித்தன் கதைச் சூழல் கூட இன்று அப்கானிஸ்தானுக்குள்ளே ஒளிந்திருக்கிறது. இத்தளத்தில் குமரிக்கண்டம் என்ற பதிவையும் படித்துப் பாருங்கள். இவை 2000 ஆம் ஆண்டிற்குப் முந்திய செய்தி.

ஆனால், “தமிழரில்லாத நாடுகளுமில்லை (இத்தளத்தில் உலகெங்கும் தமிழர் என்ற பதிவையும் படித்துப் பாருங்கள்), தமிழருக்கென்று நாடுமில்லை” என்று நம்மாளுகள் இன்று பேசிக்கொள்கின்றனர். “அடடே! இன்றைய உலகில் எங்கட தமிழர் வாழச் சொந்த நாடொன்று இல்லையே! இவ்வாறே தமிழும் தனது அடையாளத்தை இழந்து விடும் போல இருக்கே.” என்று பேசிக்கொள்வதில் நன்மையேதுமுண்டோ?

உலகில் புழக்கத்தில் இருந்த 7500 மொழிகளில் ஆகக்குறைந்தது 800 மொழிகளாயினும் முழுமையான புழக்கத்தில் இன்றில்லை. உலகிலிருந்த மொழிகளின் விரிப்பை அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://ta.wikipedia.org/wiki/அகரவரிசையில்_மொழிகளின்_பட்டியல்

4500 ஆண்டுகளுக்கு முன்னைய எகிப்திய மொழியும் 3000 ஆண்டுகளுக்கு முன்னைய மாபெரும் இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வடமோழி(சமஸ்கிருதம்)யும் 2800 ஆண்டுகளுக்கு முன்னைய இலத்தீன் மொழியும் 2600 ஆண்டுகளுக்கு முன்னைய புத்தர் பெருமான் பேசிய பாலி மொழியும் 2300 ஆண்டுகளுக்கு முன்னைய கிரேக்க மொழியும் 2006 ஆண்டுகளுக்கு முன்னைய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் அழிந்து போயிற்று என்றே கூறுமளவுக்குப் புழக்கத்தில் இல்லையே!

தாய் மொழிக்குள் பிற மொழிகள் வந்து குந்தியதால்; தாய் மொழி சீர்கெட்டு குந்தியிருந்த பிற மொழி வலுவடைவதாலே ஒவ்வொரு மொழியும் தனது அடையாளத்தை இழந்து வந்திருக்கிறது. அதாவது புதிய வழித்தோன்றல்கள் தாய் மொழியில் நாட்டம் காட்டாமையே அடிப்படைக் காரணம். மேலும் சில மொழிகள், சில நிலப்பகுதிப் (வட்டார, பிரதேச) பேச்சு வழக்குகள் இணைந்து புதிய மொழிகள் உருவாவதும் ஒரு மொழி தன் அடையாளத்தை இழக்கக் காரணமாகிறதாம்.

ஒரு மொழி அழிந்தால் அதனுடன் கணக்கிடற்கரிய எத்தனையோ நுணுக்கங்கள்/ நுட்பங்கள் மனித உணர்வுகள் அதன் நிறங்கள், நடத்தைகள்(நளினங்கள்), கலைகள், பண்பாடுகள், வரலாறுகள் என அம்மொழியைப் பேசியோரின் எல்லாவற்றையுமே இழக்கின்றோம். இன்னும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளின் விரிப்பில்(List) தமிழ் மொழியும் இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அப்படியாயின், தமிழின் நிலை என்ன? தமிழரின் நிலை என்ன? இது பற்றி எமது புதிய வழித்தோன்றல்கள் எண்ணிப் பார்க்கிறதா?

இந்நிலையை மாற்றிக்கொள்ள எனது தீர்வாக இத்தளத்தினூடாக தூய தமிழ் பேண உதவும் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியமாகத் தரவும் கணினி, இணைய வழிகளில் தமிழைப் பரப்ப உதவும் செயலிகளைத் தரவும் புதிய வழித்தோன்றல்கள் இலக்கியங்களை எழுதப் படைக்கக் கற்றுக்கொள்ள உதவும் பதிவுகளைத் தரவும் முயற்சி செய்கிறேன்.

எனது முயற்சிகள்:

இத்தளத்தின் ஒரு பகுதியாக “யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்” என்ற தொடரை http://paapunaya.blogspot.com எனும் தளமூடாக வழங்குகிறேன்.

சுட்டெலியால் தட்டச்சு செய்ய http://devkjeevan.webs.com என்ற மாதிரித் தளத்தையும் பேணுகிறேன். இதன் மேம்படுத்தப்பட்ட பகுதிகளுடன் புதிய செயலிகளின் விரிப்பைப் பின்னர் தருகின்றேன்.

மதிப்புக்குரிய தமிழறிஞர்களே! இது பற்றிய உங்கள் எண்ணக் கருத்துகளை இத்தளத்தினூடாகப் பகிர முன்வாருங்களேன். இன்றைய சூழ்நிலை, வரலாற்றுச் சீரழிவு, மொழிகள் வழக்கொழிந்தமை ஆகிய மூன்றையும் கருத்திற் கொண்டால் தமிழ் இனி மெல்லச் சாகலாம். நாம் அழிந்தாலும் தமிழை அழியாமல் பேண நல்வழி கூறுங்களேன்.

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.