‘பா’ நடையில புனைகிறேன்!

முயன்று பார்!

நான் ஒரு செல்லாக் காசென
நறுக்கிவிட்ட எல்லோரும்
என்னை நாடுவதேன்? – அப்ப
என்னிடம் ஏதோ இருக்கலாம்!
என்னை நறுக்கிவிட முன்னே
குப்பையிலே போட்ட பண்டமும்
ஒருவேளை தேவைப்படலாமென
நினைக்கத் தவறினர் போலும்!
நானோ தனிமைப்படுத்தப்பட்டதால்
எனக்கு வேண்டிய எல்லாம்
நானே ஆக்க முனைந்ததால்
தன்னிறைவு பெற்றவனாக
நானும் உயர்ந்து விட்டேன்!
உறவுகளே! – உங்களை
எவரும் ஒதுக்கி வைக்கலாம்
எவரும் தனிமைப்படுத்தி விடலாம்
எவரும் உதவாமல் ஒதுங்கலாம்
அதற்கு அஞ்ச வேண்டியதில்லையே!
எதற்கும் தன்கையே தனக்குதவியென
நெஞ்சை நிமிர்த்தி நடைபோடுங்கள்!
விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்
துணையாக இருக்கும் வரை
தோல்விகள் தொடரப் போவதில்லையே!
விலகிச் செல்லும் வெற்றிகளைக் கூட
நெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்!
தன்நம்பிக்கையோடு நடைபோடு
உனக்குப் பின்னே கடவுள் கூட வருவாரே!

‘பா’  நடையில  புனைகிறேன்!

நான் எழுதுவது எல்லாம்
பா/ கவிதை இல்லை என்பேன்!
பா நடையில தான் – என்
உள்ளத்தை உரசிய / உறுத்திய தகவலை
எழுத முயற்சி எடுப்பதாகச் சொல்வேன்!
நான் பாவலனோ / கவிஞனோ இல்லை!
பாவலனாக எண்ணினாலும் கூட
எழுதிய எதுவும் பா / கவிதை ஆக
புனைவு (கற்பனை) ஊற்றுப் போதாதென
வாசகர் கருத்துக் கணிப்புத் தெரிவிப்பதால்
பா நடையில புனைந்து தான்
நானும் எழுதுவதைத் தொடருகிறேன்!
படித்தவை கொஞ்சம் தான்
பட்டறிந்தவை அதிகம் தான்
அன்பு காட்டியோர் கொஞ்சம் தான்
வெறுப்புக் காட்டியோர் அதிகம் தான்
உதவி செய்தோர் கொஞ்சம் தான்
உதவி செய்யாதோர் அதிகம் தான்
மொத்தத்தில் வாழ்ந்தது கொஞ்சம் தான்
வாழ்ந்ததில் நொந்தது அதிகம் தான்
மகிழ்ச்சியை விடத் துயரம் தான்
நான் சுமப்பதிலே அதிகம் தான்
நான் சுமப்பதைத் தான்
கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கவே
பா நடையில எழுதிப் பார்க்கிறேன்!

முழுமையான பதிவைப் படிக்க, கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக. http://www.ypvnpubs.com/2018/07/blog-post_14.html

Advertisements

தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்!


திறமையாகப் படிப்பித்ததால தான் – எனக்கு
சிங்கள மாணவர்கள் பெருகியதால தான்
சிங்கள ஆசிரிய நண்பர்கள் – சிலருக்கு
என் மீது பொறாமை பொங்கியதாம்!

தமது சிக்கல்களைத் தாமே தீர்க்காமல்
நாட்டு மக்கள் கண்டு களிக்கவே – நடு
வழியே என்னை வாட்டி வதைத்தே – என்
திறனை எல்லோரும் உணர வைத்தனரே!

சிந்திக்க மறந்த சிங்கள ஆசிரிய நண்பர்கள்
“நீயொரு வெங்காயம் உன்னை உரித்தால்
உனக்குள்ளே ஒன்றும் இருக்காது!” என
எனது செயல்களைச் செயலிழக்க வைத்தனரே!

கற்பித்தல் கருவிகளைக் களவாடியும் தான்
கற்பித்தல் பணியை முடக்கினால் தான்
சிங்கள மாணவர் எண்ணிக்கை – எனக்கு
குறையுமென நம்பி ஏமாந்தனர் போலும்!

இயலாது போகவே இழிவுபடுத்தியே
கற்பித்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றியே
கொழும்பு வீதிகளில் வாட்டி வதைத்துமே
என்னை யாழ்ப்பாணத்திற்கு விரட்டி விட்டனரே!

சிங்கள மண்ணில் இருந்து விரட்டியதால்
என்னைப் போலப் பலர் லங்காராணியில்
யாழ்ப்பாணம் வந்திறங்கிய 1983 நிகழ்வுகள்
அடிக்கடி தமிழரின் உள்ளத்தில் உருளுமே!

யாழ்ப்பாணம் திரும்பிய நாள் தொட்டு
நம்மவர் நிலை பரவவும் நற்றமிழ் பேணவும்
தமிழுக்காக என் குரல் ஒலிக்கட்டுமென
இலக்கியம் படைப்பதோடு ஊரிலே முடங்கினேன்!

தமிழரின் உயிரைக் காப்பாற்றிய சிங்களவரை
மதித்துப் போற்றும் தமிழரும் இருக்க
தமிழரைக் கொன்ற சிங்களவரால் ஏற்பட்ட
ஆறாத புண்களைத் தமிழரும் சுமக்கின்றனரே!

கேளுங்க சிங்கள உறவுகளே! – உங்களால்
தமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள் தான்
வாழ்நாள் சொத்தாக இருக்கும் வரை
தமிழர் – சிங்களவர் நல்லுறவு மலருமா?

கேளுங்க சிங்கள உறவுகளே! – உங்கள்
சொல்கள், செயல்கள் எல்லாம் உலகறியுமே!
உங்களால் புண்பட்ட எங்கள் தமிழருக்கு
உங்களால் தீர்வும் வாழ்வும் தரவியலாதே!

தீர்வும் வாழ்வும் தரவியலாத உங்களால்
தமிழர் – சிங்களவர் நல்லுறவுக்கு இடமுண்டோ?
கேளுங்க சிங்கள உறவுகளே! – உங்கள்
உள்ளத்து மாற்றத்தில் தான் அமைதியுண்டே!

லங்காராணி: 1983 இல் கொழும்பில் இருந்து உயிர் தப்பிய தமிழரை யாழ்ப்பாணம் ஏற்றி வந்த கடற்கப்பலின் பெயர்.

மூலம்: http://www.ypvnpubs.com/2018/07/blog-post_13.html

 

 

என் பா/ கவிதை நடை

என் பா/ கவிதை நடை

இலக்கியம் என்றுரைப்போர்
இலக்கு + இயம்புதல் என்றிவார்!
அது போலத் தான் – எனது
எண்ணங்களைப் பகிரும் வேளை
என் கைவண்ணங்களில்
குறும் செய்தியைக் கலந்திருப்பேன்!
கைக்கெட்டிய சொல்லும்
உள்ளம் தொட்ட செய்தியும்
கைவண்ணங்களைக் காட்டும் வேளை
கையாள முனைகின்றேன் – அதில்
மூ.மேத்தாவின் அமைப்பும் மின்னலாம்…
என்னுள்ளம் தொட்ட பாவரிகளைப் போல
எத்தனையோ பாவரிகளும் மின்னலாம்…
பாவரசர் கண்ணதாசனைப் போல
பட்டறிந்ததில் சுட்டுணர்ந்ததைச் சொல்லத் தான்
சொல்ல முயன்று தோற்றுப் போகின்றேன் – அதுவே
என் பா/ கவிதை நடை என்பேன்!

யாப்பில் ஆறு உண்டாம்!

Related image

எழுத்துகள் அத்தனையும் ஆங்காங்கே
எழுதும் வேளை ஒழுங்கில் வர
அசைந்து அசைந்து அசை வர
சீராகச் சீரமையத் தளை தட்டாதே!
சீர்களைத் தளை தட்டாது இணைக்க
அடி, தொடை துணைக்கு வந்திணைய
யாப்பமையப் பாபுனைய என்றும் மகிழ்ச்சியே!
யாப்பறிந்து பாப்புனைந்தால்
நல்ல பாவலராகலாம் என்றுரைப்பர் – அந்த
யாப்பில் ஆறு உறுப்புகளாக உலாவும்
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என
கற்றுப் பாப்புனைந்தாவது – நான்
பாவலராக முயலும் பணி செய்கிறேன்!
நான்
பாவலரா? இல்லையா? – அதை
என் வாசகர்களே பரப்புவார்!

இப்பதிவை முழுமையாக நிறைவோடு படிக்க: http://www.ypvnpubs.com/2018/07/blog-post_8.html

நல்லவரும் கெட்டவரும்

முதன் முதலில் – நாம்
எங்கே தவறு செய்கின்றோம்?
அலசிப் பார்த்தீர்களா?  – அது தான்
மாற்றாரோடு உறவு வைக்கும் போது தான்!

வெளுத்ததெல்லாம் வெள்ளை போல
பார்த்த எல்லோரும் நல்லவரென
பழகிய உறவுகளில் கெட்டவர் எத்தனை ஆள்?
அத்தனை கெட்டவரோடும் உறவைப் பேணுவதே
நாம்
முதன் முதலில் விட்ட தவறு என்பேன்!

“என்னண்ணே!
இப்படிச் சொல்லிப் போட்டியள்!
நல்லவர் போல நடிப்பவரும் உண்டு.
நல்லவராகவே வாழ்வோரும்  உண்டு.
இவர்களுக்குள்ளே
கெட்டவரை எவரென்று கண்டுபிடிப்பது?
இப்படிக் கேட்கின்ற
தம்பி, தங்கைகள் இருக்கக் கூடும்!

அடே! சின்னப்பொடியா!
உன்ர பேச்சுச் செல்லாக் காசடா!
நடுத் தெருவில விழுந்து விட்ட வேளை
நல்லவரையும் கெட்டவரையும் – நாம்
கண்டுபிடிப்போமடா? – அதற்காக
தெருத் தெருவாக விழுந்து நொருங்கிச் சாகலாமோ?
இப்படிக் கேட்கின்ற
அண்ணன்மாரும் அக்காமாரும் இருக்கக் கூடும்!

எமது
சொல், செயல், பாவனைகளைக் கண்டு
பிழை சுட்டுவோர் எல்லோரும்
கெட்டவர்கள் தான் உறவுகளே!
பிழையைச் சுட்டிச் சரியானதைக் காட்டி
வழிகாட்டும் அறிவாளிகள் தான்
நாம் தேடவேண்டிய நல்லவர்கள் என்பேன்!

ஒரு குற்றிக் காசின்
பக்கங்கள் இரண்டையும் போலவே
நல்லதும் கெட்டதும்
நம் வாழ்வில் இருக்கக் கூடும் உறவுகளே!
எங்கள் கெட்டதை எடை போடுவோர்
எல்லோரும் கெட்டவர்கள் தான் உறவுகளே!
நமது நல்லது எல்லாவற்றையும்
பொறுக்கித் தூக்கிக் காட்டித் திரிந்து
இலைமறை காய்களைக் காட்டுவது போல
மக்கள் முன் வைக்கும் அறிஞர்களே
நாம் தேடவேண்டிய நல்லவர்கள் என்பேன்!

மொத்தத்தில முழுமையாக அலசினால்
நமக்கோ நம்மைச் சூழவுள்ளோருக்கோ
பயன்தரும் – தமது
சொல், செயல், பாவனைகளைக் காட்டும்
உயர்ந்த மனிதர்களே நல்லவர்கள் என்பேன்!
எஞ்சிய எல்லோருமே  – எமக்கு
எப்போதும் கெட்டவர்களாக இருக்கக் கூடும்!

உறவுகளே! உறவுகளே!
சின்னப் பொடியன் நானென்றாலும்
சொல்லக் கூடியது ஒன்றுண்டு! – அது
நல்லவரும் கெட்டவரும் நம்மை நாடுவதில்லையே!
சாவுற்றாலும் நாலு தோள் தேவையென
நாம் தான்
தேடிச் சென்று உறவு வைத்த பின்
கடைசியிலே கெட்டவரெனக் கழித்து விடலாமோ?
கெட்டவரையும் நல்லவராக்க முயன்றிடு – அப்ப தான்
எம்மையும் நாலாள் நல்லவரெனச் சொல்வார்கள்!

2019 வைகாசி இல் வெளிவர இருக்கும் எனது நூலின் தலைப்பு “சனியன் பிடிச்சுப் போட்டுது!”  . அத்தலைப்புக்கான பதிவுகளைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

சனியன் பிடிச்சுப் போட்டுது! – 1
http://www.ypvnpubs.com/2018/06/blog-post_29.html 

சனியன் பிடிச்சுப் போட்டுது! – 2
http://www.ypvnpubs.com/2018/07/2.html

சனியன் பிடிச்சுப் போட்டுது! – 2

இப்பதிவைப் படிக்குமுன் “சனியன் பிடிச்சுப் போட்டுது! – 1” ஐhttp://www.ypvnpubs.com/2018/06/blog-post_29.html படியுங்கள். அதன் பின் தொடருங்கள்.

வழுக்கைத் தலையான வேளை
இளமைக் கால நினைவுகளை
வழமை போல நினைவில் மீட்க
வாழ்க்கைத் துணை வந்தமைந்த
இனிய கதையைச் சுவையாகச் சொல்லி
“சனியன் பிடிச்சுப் போட்டுது!” என எழுதினேன்!

எந்தன் எழுதுகோல் எழுதி முடித்த
அந்தக் கதை எந்தன் கைவண்ணமே! – அது
என் நாவண்ணமா? பாவண்ணமா? – எதுவோ
என் வாசகர்கள் சாற்றும் தீர்ப்பே அது! – அதற்கு
“சனியன் பிடிச்சுப் போட்டுது!” எனப் பெயரிட்டதேன்?
எதற்கும் இக்கேள்விக்கு பதில் தாவென்பீரே!

திருமண நிகழ்விற்குச் சென்றவர்கள் அறிவீர்…
“நல்லதொரு சனியன் உன்னைப் பிடிச்சிருக்கே!” என
மணமகனைப் பார்த்துச் சொல்வோரைக் கண்டிருப்பீர்!
நல்லதொரு இல்லாள் எனக்குக் கிட்டியதை
“சனியன் பிடிச்சுப் போட்டுது!” எனப் பாடியதில்
தவறொன்றும் இல்லையென் வாசக உள்ளங்களே!

இளைய அகவையிலே இனிய அழகியை
காளை உள்ளம் தேடியலைவதைப் போல
வாலை உள்ளம் காளையைத் தேடுமே!
ஆணொருவர் தன்னைத் தேடி அலைந்தால்
பெண்ணுக்குக் கிட்டும் மதிப்போ உயர்வென
எந்த ஆணையும் பெண்கள் ஒதுக்குவரே!

அழகியொருத்தி மாட்டினால் போதுமென்றலையும்
ஆணுக்குத் தாயும் மகளும் ஒரே மாதிரியா?
காலத்தின் கோலத்தால் பெண்களில் மாற்றமா?
ஏமாற விரும்பாத பெண்களின் உள்ளம்
ஆணின் உழைப்பையும் வருவாயையும் கேட்குமா?
துள்ளும் இளமை உள்ளங்கள் இவைதானே!

காளைகளுக்குப் பின்னே வாலைகள் அலைந்தாலும்
வாலைகளுக்குப் பின்னே காளைகள் அலைந்தாலும்
கலியாணப் பைத்தியம் பிடிச்சலையுது என்பார்களே!
பெத்ததுகள் பார்த்துப்பேசிச் செய்துதரச் சுவைக்காதென
தெருத்தெருவாய் அலையும் இளசுகளின் நிலையை
மென்மையாக இளையோட விட்டுப் பாப்புனைந்தேன்!

சனியனைப் போல கறுப்பி ஆனாலும் கூட
வலியவந்த சீதேவியை உதைத்து விடாமல்
வரவேற்று வாழத் துணிந்தவரே ஆணென்றும்
பெண்ணின் விருப்புக்கு இசைந்திட மறுத்தால்
ஆணுக்கு, அவளோ சனியன் மாதிரித் தான்
ஆட்டுவித்தால் ஆடவேண்டி வருமென்பேன்!

“இந்தக் கறுப்பி எனக்கு வேண்டாம்!” என்றிருந்தால்
எந்தப் பெண்பிள்ளைச் சனியனும் வந்துசேராதே!
எந்தப் பெண் பின்னும் அடிக்கடி அலைந்தாலும்
இந்த ஆண்பிள்ளைச் சனியன் வேண்டாமென்பாள்!
இயல்பை மீறி இணைய முயன்றாலும்
இயற்கையும் இணைத்து வைக்க வேண்டுமே!

ஆணுக்குப் பெண் தேடும் பணியும்
பெண்ணுக்கு ஆண் தேடும் பணியும்
இடம்பெறக் காதல் வந்து இணைக்குமோ?
இந்தப் பழம் பொல்லாத புளி என்றோ
இந்தச் சனியன் பிடிச்சாத் தொல்லை என்றோ
இருந்து விட்டால் கடைசிவரை தனிக்கட்டையே!

முழுப் பதிவையும் முழுமையாகப் படிக்க: http://www.ypvnpubs.com/2018/07/2.html

சனியன் பிடிச்சுப் போட்டுது!

29205779018_e8a305f1b0_o

நான் தான்
அவளைத் தான் கேட்டேன்
“தாலி கட்ட விருப்பமா?” என்று – அவளோ
தோளைத் தட்டி “அண்ணன் போல இரு” என்றாளே!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
“திருமணம் செய்வோமா?” என்று – அவளோ
“அப்பா போல இருக்கிறியளே!” என ஒதுங்கினாள்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
“கலியாணம் கட்டுவோமா?” என்று – அவளோ
“தன்ர தம்பி போல இருக்கிறியே!” எனப் பறந்தாள்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
“மணமுடிக்க விருப்பமா?” என்று – அவளோ
தன்ர கணவனைக் கேட்டுச் சொல்வதாக
போனவள் போனவள் தான்!
நான் தான்
இன்னொருவளைத் தான் கேட்டேன்
மணமுடிக்க விருப்பம் – ஆனால்
“தங்கள் விருப்பம் தான்…” என்னவென்றேன்!
“ஒழுங்காக உழைக்கத் தெரியவில்லை
என்னோட பிழைக்க விருப்பமோ?” என
“போடா! – உன்
முகத்தை கண்ணாடியில பாரடா” என
அவளும் ஓடி மறைந்தாள்!
எவளோ ஒருத்தி
என்னை நாடி வந்தாள் – நானும்
தலை, கால் தெரியாமல் தடுமாறினேன்
என்ன உழைப்பு? வருவாய் எவ்வளவு?
என்றெல்லாம் கேட்ட பின்னே…
அழகி ஒருத்தி நானிருக்க
“தாலி கட்ட விருப்பமா?” என்று
என்ர அம்மாட்ட போய்க் கேட்கிறியே
உனக்குக் கலியாணப் பைத்தியம் பிடிச்சிருக்கா?
என்றெல்லோ சொல்லெறிந்து சென்றாளே!
இன்னொரு எவளோ ஒருத்தி
என்னை நாடி, ஓடி வந்தாள் – நானும்
தட்டுத் தடுமாறித் தரையில விழுந்திட்டேன்!
மொட்டைத் தலையிலே குட்டிப் போட்டு
சட்டென்று எழும்பென்றாள் – நானும்
“சனியன் வந்து பிடிச்சிட்டுதோ?” என
எப்பன் முயன்று எழும்பி நிற்க
“மணமுடிக்க விருப்பமா?” என்று
ஆளை ஆள் கேட்டால் – உன்னை
“பைத்தியம்” என்று
பறை தட்டிப் பரப்புவாங்களே! – இனி
நானிருக்க எவரையும் கேட்காதேயென
என் வீட்டுக்கு வந்திட்டாள் – அந்த
சனியன் போல கறுப்பி ஒருத்தி!

முழுப் பதிவையும் முழுமையாகப் படிக்க: http://www.ypvnpubs.com/2018/06/blog-post_29.html

 

உங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே!

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் பார்க்கலாம்.
https://drive.google.com/file/d/1TTDRx3wDiMqiql4a7O5nDcM-91iVujMi/view

இப்பதிவினைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்தும் உதவலாம்.

மூலம்: http://www.ypvnpubs.com/2018/06/blog-post_22.html

%d bloggers like this: