போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணத் தமிழ் சார்ந்த போட்டிகள் நடாத்துவது தேவை. தமிழறிவை வெளிப்படுத்தப் போட்டிகள் ஓர் ஊடகமாக அமையும். தமிழனாகப் பிறந்து தமிழைப் பேச, எழுத, வாசிக்க முடியாதோர் எல்லோரையும் தமிழைப் பேச, எழுத, வாசிக்கத் தூண்ட வேண்டும். அதற்கு இப்போட்டிகள் உதவவேண்டும். அதாவது, பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கிப் போட்டியில் பங்கெடுப்போரைப் பெருக்கவேண்டும். இதனை மேற்கொள்ள இவ்வாறான போட்டி நடாத்துவோர் எல்லோருடனும் நன்கொடையாளர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

போட்டியென்பது திரட்டிய அறிவில் இருந்து சுழியோடிப் பொறுக்கிய அறிவை அரங்கேற்றுவதே ஆகும். தேர்வுகள் என்பதும் அவ்வாறே! நாம் படித்தோம் என்பதை விட, எத்தனை தேர்வுகள் எழுதினோம்; எத்தனை போட்டிகளில் கலந்துகொண்டோம் என்பதே பெரிது. தேர்வுகளில் குறிப்பிடத்தக்க புள்ளிகள் எடுத்தே ஆகவேண்டும். ஆயினும், போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பது முக்கியமல்ல; வெற்றி பெற முயற்சி எடுத்தே ஆகவேண்டும். அதேவேளை போட்டிகளில் கலந்துகொண்டு தோல்வியைக் கண்டாலும் வெற்றி பெறத் தேவையானதைக் கற்றுக்கொள்கிறோம். அடுத்த வெற்றிக்கு முந்தைய தோல்வியே வழிகாட்டி!

உலகெங்கும் அறிவாளிகள் தங்கள் கல்வித் திறமையை வெளியிட வலைப்பூக்களை (Blogs) நடாத்துகின்றனர். உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களும் தங்கள் தமிழறிவை வெளியிட வலைப்பூக்களை (Blogs) நடாத்த முன்வந்திருப்பது “இனி மெல்லத் தமிழ் சாகாது” என்பதையே உணர்த்தி நிற்கிறது. இந்நிலையில் இருந்து கொஞ்சம் முன்னேறிய நிலை தான் வலைப்பதிவர்களிடையே நாடாத்தப்படும் போட்டிகள்! இப்போட்டிகள் சிறந்த தமிழறிஞர்களை அடையாளப்படுத்துதோடு புதிய வலைப்பதிவர்களை உருவாக்கவும் உதவ வேண்டும். இதற்குப் போட்டியில் பங்கெடுப்போரின் எண்ணிக்கையே அடித்தளம் ஆகின்றது.

போட்டியில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் தேர்வுகள், போட்டிகள் நாடாத்துவோரிடம் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணத் தேவையான வகையில் போட்டிகள் நடாத்த ஒத்துழைப்பை நாடலாம். நானறிந்த வகையில் கோபாலசுவாமி ஐயா நடாத்தும் சிறுகதை திறனாய்வுப் போட்டி, தம்பி ரூபன் அவர்கள் நடாத்தும் தமிழர் சிறப்பு நாள் போட்டிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவர்களை விட பிறரும் போட்டிகள் நடாத்தலாம். ஆயினும் போட்டிகள் நடாத்த உதவும் நன்கொடையாளர்களையும் நினைவூட்டுவோம். உண்மையில் போட்டியில் பங்கெடுப்போரின் எண்ணிக்கையே இவ்வாறானவர்களுக்கு நாம் வழங்கும் ஒத்துழைப்பாகும். எம்மால் முடியாவிட்டாலும் எமது உறவுகளையாவது போட்டியில் பங்கெடுக்கத் தூண்டுவோம்.

போட்டியென்று வந்துவிட்டால்
அடுப்படியில் உறங்கும் பூனையாகாதே
போட்டியென்று வந்துவிட்டால்
நானோ சிங்கமென்று பாடாதே
போட்டியென்று வந்துவிட்டால்
பாயும்புலியாக செயலில் இறங்கு
நன்றே வெற்றிகளை அள்ளிக் குவிக்கலாம்
இன்றே செயலில் இறங்கு தமிழா!

வலைப்பதிவர்களே! 2014 தீபாவளி நாளன்று மாபெரும் கவிதைப் போட்டி இடம்பெற இருக்கிறதாம். நீங்கள் எல்லோரும் அதில் பங்கு பற்ற முன்வரவேண்டும். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

Advertisements