இலங்கைப் படைப்பாளிகளும் இலக்கியச் சூழலும்

வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.com/2014/07/indhu-samuththiraththin-muththukkal.html) சிகரம் பாரதி (http://newsigaram.blogspot.com/2014/06/valaicharaththil-kalam-kaangiradhu-sigaram.html) ஆசிரியராக இருந்த வேளை தெரிவித்த கருத்துகளில் இருந்து சிலவற்றைப் பொறுக்கி அலச விரும்புகிறேன்.

“இலங்கையைப் பொறுத்த வரை மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உண்டு.” என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும், இந்திய வழித்தோன்றல் (வம்சாவளி), இலங்கை வழித்தோன்றல் (வம்சாவளி) என்ற வேறுபாட்டை நான் எதிர்க்கிறேன்.

“சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த உறவுகள் தான் இன்றைய இந்திய வம்சாவளி மக்கள் என குறிப்பிடப்படும் மலையகத் தமிழர்கள். தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள்கொடி உறவைக் கொண்டது மலையகம்.” என்ற கருத்தை ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான விளக்கத்தைக் கீழே தருகின்றேன்!

இலங்கை, இந்திய நாடுகள் ஒன்றாய்த் தமிழரின் நாடாய் இருந்தது. மேலும் ஆய்வு செய்தால் ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை இந்து சமுத்திரப் பக்கமாய் குமரிக்கண்டம் என்ற இடமும் தமிழருடையதே! கடற்கோள் வந்து எல்லாவற்றையும் உடைத்துவிட்டது. இந்தியாவில் கிந்திக்காரரும் ஈழத்தில் சிங்களவரும் சோழராட்சியில் நிகழ்ந்த ஆரியப் படையெடுப்பின் பின் நுழைந்தவர்கள்.

“தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள் கொடி உறவைக் கொண்டது மலையகம்.” என்பது பின்னைய வரலாற்றுச் செய்தி. ஆயினும் “இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே” என்ற தமிழரும் தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவைக் கொண்டவர்கள் என்பது முன்னைய வரலாற்றுச் செய்தி. எப்படியோ மலையகத்தாரும் ஈழவரும் இலங்கை வாழ் மக்களே! எனவே, நாம் தமிழரென்று ஒற்றுமையாய் நிற்போம்.

எனது பாட்டனுக்கு சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை மடம் சொந்தமாக இருந்தது. சிதம்பரக் கோவிலுக்கான வருவாய்களை இலங்கையிலிருந்து திரட்டி வழங்கும் பணியையே செய்து வந்தார். அப்படியாயின் நானும் ஒரு இந்தியனே! எனவே தான் என்னவோ இந்தியத் தமிழரையும் ஈழத் தமிழரையும் தொப்புள் கொடி உறவுகள் என்கிறோம்.

ஐம்பதாண்டு காலப் போர் ஈழவர் துயரங்களை உலகறியச் செய்தளவுக்கு மலையகத்தார் உண்மைகள் (லயன் வாழ்க்கை) உலகறியச் செய்யவில்லை என்பதில் நானும் கவலை அடைகின்றேன். ஈழவர், மலையகத்தார் பிரிவு புவியியல் அடிப்படையில் அமைந்ததை சிகரம் பாரதி அவர்களும் தெரிவித்திருந்தார். ஆயினும், மலையக மக்கள் இலங்கையின் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்.

எழுத்தை ஆள்பவருக்கு அதாவது எழுத்தாளருக்கு நாடு, இனம், மதம், சாதி, மொழி எதுவும் கிடையாது. இலங்கையின் வடகிழக்குப் படைப்பாளிகளும் மலையகப் படைப்பாளிகளும் சம அளவிலேயே உலகறியச் செய்யப்பட்டுள்ளனர். வீரகேசரி பத்திரிகையிலும் சம அளவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். படைப்பாளிகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கக்கூடாது. அதனை எல்லோரும் இணைந்து சீர்செய்ய வேண்டும்.

மலையகம், வடக்கு, கிழக்கு, கொழும்புத் தமிழரென இலங்கைப் படைப்பாளிகள் இருக்கின்றனர். அவர்களது இலக்கியச் சூழல் என்பது அவர்கள் வாழுமிடங்களே! அதனடிப்படையிலேயே இலங்கை இலக்கியங்கள் காணப்படுகின்றன. அதாவது, அவ்வவ் ஊர்ப் பேச்சு வழக்கிலும் பண்பாட்டிலும் வாழ்விடச் சூழலையும் உள்வாங்கி இருக்கும்.

மலையகப் படைப்பாளிகளை, மலையகத்தார் உண்மைகளை எனது தளங்களிலும் பகிர விரும்புகிறேன். மலையகம், வடகிழக்கு, கொழும்புத் தமிழரென எமக்குள் பாகுபாடின்றிப் பேண வேண்டும். எனது நோக்கம் தமிழர் என்ற அடையாளத்தில் உலகெங்கிலும் வாழும் தமிழரை ஒன்றிணைப்பதே! ஒற்றுமை பேணி ஒன்றுபடுவோம் என்பதற்காக இவ்வுண்மையைப் பகிர்ந்தேன். இவ்வாறான ஆய்வுகளில் இறங்கியுமுள்ளேன்.

 

Advertisements