தேர்தலில் பரப்புரை செய்யக் கற்றுக் கொள்வோம்

தேர்தல் வந்தால் போதும் அரங்குகள் (மேடைகள்) ஆங்காங்கே தலையைக் காட்டும். முன், பின் முகம் அறியாப் புதுமுகங்கள் அவ்வவ் அரங்குகளிலே பேசுவாங்கள். ஆளுக்காள் தாக்கிப் பேசுவாங்களே தவிர, தங்களைப் பற்றியோ தங்களது நல்லது கெட்டதையோ சொல்லவும் மாட்டாங்கள்… இதனால் எவர் எவரைத் திட்டினாலும், திட்டு வேண்டியவர் வெற்றி பெறுகின்றார். இதிலிருந்து மக்கள் என்ன முடிவு எடுத்திருப்பார்கள் என்றால், பிறரைத் திட்டுபவர்களிடம் சிறந்த மக்கள் நலத் திட்டங்கள் கிடையாது என்பதையே!

எனவே, தேர்தலில் பரப்புரை செய்ய இறங்க முன் தமது பக்கத்தில் உள்ள மக்கள் நலத் திட்டங்களையும் அவற்றை எவ்வாறு நிறைவேற்றும் ஆளுமை தங்களிடம் இருப்பதையும் தங்கள் பக்கத்து ஆட்களின் நன்னடத்தை, சொத்து விரிப்பு, வரவுக்கு மீறிச் சொத்துச் சேகரிக்க மாட்டோமென்ற உறுதிப்பாடு ஆகியவற்றைத் தொகுத்து மக்கள் முன் பணிவன்புடன் முன்வைப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக எதிர்ப் பக்கத்தைப் பற்றி ஓரெழுத்துக் கூட உச்சரிக்கக் கூடாது. தங்கள் பக்கத்துக்கு வலுச்சேர்க்கக் கூடிய நம்பிக்கையூட்டல்களையே வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கவும் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் தாய் மொழியாம் தமிழப் பேணவும் வேண்டிய ஒத்துழைப்பைத் தருவதாகவும் உறுதியளிக்கலாம். அதன் மூலமே மக்கள் தெளிவு பெற முடியும்.

அரங்கிலேறி இவ்வாறு பேசக் கற்றுக்கொண்ட அரசியல் ஆள்களே! மக்களிடம் இப்படித் தமிழைப் பேணலாம் என்று கூறிப்போட்டு நாடாளுமன்றம் சென்றதும் தமிழாலே பேசுங்கள். அங்குள்ள மொழிபெயர்ப்பாளர்கள் உங்கள் கருத்தை மொழிபெயர்ப்பார்களே! சென்ற இடமெல்லாம் தலைவர்கள் தமிழாலே பேசினால் தானே, தொண்டர்களும் தமிழில் பேசுவார்கள். அப்போது தானே மக்கள் மத்தியில் நல்ல தமிழ் உலாவும்.

Advertisements

அரங்கில் (மேடையில்) பேசுவதற்குக் கற்றுக் கொள்வோம்

நம்மாளுகள் எங்களோட இருக்கையிலே ஊமையாகக் கிடப்பாங்க, அரங்கிலேறி ஒலிவாங்கியைப் (mic) பிடித்ததும் என்னென்னவோ எல்லாம் பேசிப்போடுவாங்களே… வாய்க்குள்ளாலே கொட்டியதைக் காதிற்குள்ளே உள்வாங்கிய அரங்கில் கூடிய மக்களிடம் கேட்டால் “குடிகாரங்க பேச்சுப் போல இருந்திச்சுங்க…” என்பாங்க…

பேச்சு என்பது வாய்க்கு வந்தபடி பேசுவதல்ல, வணக்கம் கூறி, தலைப்புச் சொல்லி, விரிப்பைக் கூறத் தொடங்கலாம். விரித்துச் சொல்லும் வேளை திருக்குறள் வரிகள், இனிய கருத்துள்ள பாடல் வரிகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றுடன் கையை அசைத்துக் காட்டி, முகத்தில் மாற்றம் காட்டிப் பார்வையாளர்களைத் தனது பக்கம் ஈர்த்தவாறு, வாழைப்பழத்தில குண்டூசி ஏற்றினாற் போல தனது பேச்சை அரங்கில் கூடியோரின் உள்ளங்களில் ஏறும் வகையில் பேச்சைத் தொடரலாம். இறுதியாக நன்றி கூறிப் பேச்சை முடித்துக் கொள்ளலாம்.

பேச்சில் நம்பக்கூடிய, சான்றுப்படுத்தக்கூடிய அதாவது சான்றுக்கான எடுத்துக்காட்டுகளுடன் உண்மைகளைத் தொகுத்துக் கொள்ள வேண்டும். சொல்ல வந்த கருத்துக்களுக்கு வெளியே செல்லாமல் பேசுவதே சிறப்பு. முன்கூட்டியே பேச்சின் படிகளை எழுதிவைத்துப் பேசுவதே மேலும் சிறப்பு. ஒருவரது பேச்சைக் கேட்கையிலே விருப்புடன் கூடியிருந்தோர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தால், அதுவே சிறந்த பேச்சு எனலாம்.

இதெல்லாம் எதற்குச் சொல்ல வந்தேன் என்றால்… அது… அதுதான்… நீங்களும் ஒரு நாள் மேடையில் ஏறலாம்… மேடையில் ஏறிய பின்னர் நடுங்காமல் தளராமல் பேசலாம் என்று தான்! “மேடையில் பேசலாம் வாங்க” என்றொரு நூலும் வெளிவந்திருக்கிறது. அதையும் தேடிப் படிக்கலாம். எந்த மேடையில் எந்தத் தலைப்பெடுத்துப் பேசினாலும் இடையிலே “தூய தமிழ் பேண முன்வாருங்கள்” என்று நுழைத்து விடுங்கள். அதனால், நாம்மாளுகள் தூய தமிழ் பேணும் எண்ணத்தைப் பின்பற்றலாம்.

அதெப்படி முடியும் என்கிறீர்களா? அதற்குப் பெயர் இளையோடுதல் எனலாம். இது கதைகள் புனையும் போது கையாளப்படும் நுட்பம். இதனைப் பேச்சிலும் கையாளலாம். திண்டுக்கல் லியோனி அவர்களின் பட்டிமன்றம் ஒன்றில் “சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லாமல் எங்கை ஐயா சுத்துறாய்?” என லியோனி அவர்கள் கேட்க “மக்களுக்குச் சொல்ல நல்ல எடுத்துக்காட்டாக இருக்குமென அங்க இங்க பாய வேண்டியதாக இருக்கிறதே!” என்று பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர் சொன்னார். அவ்வாறு இதனைக் கையாளலாம்.

பேச்சாளர் ஒருவரின் திறமை என்பது கேட்போரைக் கட்டிப்போடுதலிலே தங்கியிருக்கிறது. அதாவது, சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லும் வேளை சுவையாகச் சொல்வதோடு, எளிதாக இளையோடி எடுத்துக்காட்டுகளைச் சுட்டிச் சொல்ல வேண்டிய கருத்தை நம்ப வைத்தலிலே சாத்தியப்படுகிறது. அவ்வாறு முயற்சி எடுங்க, அப்போது அரங்கில் (மேடையில்) பேசுவதற்குக் இலகுவாயிருக்கும்.

வாசகர் உள்ளம் நிறைவடைய…

உங்கள் படைப்புகள் எளிதில் வாசகரைச் சென்றடைய, அதன் தரத்தை உயர்த்த, அதனை வாசித்த பின்னர் வாசகர் கூறும் கருத்துக்கள் பெரிதும் உதவும். எனவே, உங்கள் படைப்புகளுக்கு எவரும் கருத்துத் தெரிவத்திருந்தால், அதற்குத் தெளிவான பதிலைக் கூறுங்கள். அப்போது தான் வாசகர் உங்கள் படைப்புகளை உயர்வாக மதிக்க வாய்ப்பிருக்கும்.

அதேவேளை, மாற்றாரின் படைப்புகளை நீங்கள் வாசித்த பின்னர் கூறும் கருத்துக்களை வைத்தும் உங்களைச் சிறந்த படைப்பாளியாகக் கருதமுடியும். அதாவது, உங்கள் கருத்துகள் உங்களை அடையாளப்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம். ஆக மொத்தத்தில் வாசகரைக் களிப்பூட்ட எழுதுகின்ற நாம், வாசகர் உள்ளம் நிறைவடைய ஆவன செய்ய வேண்டும்.

மாற்றாரின் படைப்புகளுக்கு, கருத்துக் கூறும் போது வாழ்த்தினால் போதாது குறை, நிறைகளைக் கூறிச் சிறந்த படைப்பாளியாக உயர்வடைய ஊக்கப்படுத்துங்கள். மாற்றாரின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்துத் தெளிவான விளக்கத்தை வழங்கினால் உங்கள் படைப்புகளுக்கு உரிய வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

நாங்கள் அனைவரும் வாசகர்களை மகிழ்வூட்டச் சிறந்த படைப்புகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த ஒன்றுபடுவோம். நண்பர்களின் படைப்புகளைப் படிப்போம்; நன்றாகத் தாக்குரை செய்வோம்; நண்பர்களது படைப்புகளைத் திறனாய்வு செய்வோம். எல்லாம் வாசகர்கள் மகிழ்வடையக் கூடியதாக அமைய வேண்டும். அப்போது தான் உலகெங்கும் தமிழைப் பேணிப் பரப்பும் பணியைச் செய்யலாம்

இலக்கியக் களவு (திருட்டு)

ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெறுகின்ற போது அடைகின்ற நோக்களையும் வலிகளையும் நீங்கள் பட்டறிந்திருப்பீர்கள் அல்லது கேட்டறிந்திருப்பீர்கள். அது போலத்தான் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்கும் போதும் எத்தனையோ நோக்களையும் வலிகளையும் அடைகின்றான். இந்நிலை அவர் அப்படைப்பை வாசகரிடம் கொண்டு செல்லும் வரை தொடருகிறது.

அப்படியிருக்கையில், ஒரு படைப்பாளியின் ஓரிரு வரிகளையேனும் பிறிதொருவர் உரியவரின் உரிமையின்றிப் பயன்படுத்துவது தான் இலக்கியக் களவு (திருட்டு) என்று வரையறை செய்யமுடியும். இதனால், உண்மைப் படைப்பாளியின் திறமையைப் போலிப் படைப்பாளி தனதாக்க முனைகின்றார். இந்நிலை எழுதுகோல் ஏந்தியோரிடம் இருக்கக் கூடாது.

எடுத்துக்காட்டாக:
“நானென்று பேர்சொல்லி நடைபோடு
ஏனென்று கேட்போரை எடைபோடு!” என்ற அடிகளை உங்கள் யாழ்பாவாணன் தனது பதிவுகளில் இணைத்திருந்தால்; அவர் இலக்கியக் களவு (திருட்டு) செய்தார் என்று பொருள் கொள்ளலாம்.

யாழ்பாவாணன் இலக்கியக் களவு (திருட்டு) செய்யவில்லை என்றால் பின்வருமாறு பாவித்திருக்க வேண்டும்.
“நானென்று பேர்சொல்லி நடைபோடு
ஏனென்று கேட்போரை எடைபோடு!” என்று பாவரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தூய தமிழை உலகெங்கும் பரப்பிப் பேண எத்தனையோ பேரறிஞர்கள் சொன்ன வழிகாட்டலை நாம் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. எனவே, எழுதுகோல் ஏந்திய எல்லோரும் இலக்கியக் களவு (திருட்டு) பற்றிய தெளிவைப் பெற்றிருத்தல் வேண்டும்.

இலக்கியக் களவு (திருட்டு) இன்றிய பதிவை மேற்கொள்ள:
எடுத்துக்காட்டாக நூலொன்றில் இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கிப் பாவித்திருந்தால்; அவ்வரிகள் உள்ள பக்க இலக்கம், நூலின் பெயர், ஆக்கியோன் பெயர், நூலை வெளியிட்டோர் பெயரும் முகவரியும் ஆகியன குறிப்பிடுதல் வேண்டும். ஆகக்குறைந்தது நூலின் பெயர், ஆக்கியோன் பெயர் மட்டுமாவது குறிப்பிடவேண்டும்.

எடுத்துக்காட்டாக அச்சுஏடு (பத்திரிகை/ சஞ்சிகை) ஒன்றில் இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கிப் பாவித்திருந்தால்; அச்சுஏட்டின் பெயர், வெளியிட்ட நாள்(திகதி), ஆக்கியோன் பெயர் ஆகியன குறிப்பிடுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக இணையத் தளமொன்றில் இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கிப் பாவித்திருந்தால்; பதிவின் தலைப்பு, பதிவின் இணையப் பக்க முகவரி, ஆக்கியோன் பெயர் ஆகியன குறிப்பிடுதல் வேண்டும். இவ்வாறு ஏனைய மின்னூடகங்களில் (வானொலி/ தொலைக்காட்சி) இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கினாலும் குறிப்பிடவேண்டும்.

இவ்வாறு இலக்கிய நேர்மையுடன் பதிவுகளை மேற்கொண்டு, சிறந்த படைப்பாளி என்ற நற்பெயரைப் பேணிக்கொண்டே உலகெங்கும் தூய தமிழை பரப்பிப் பேண முயற்சி செய்யலாம். இதே கோட்பாட்டுடன் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு முயற்சி செய்வோம்.

பாபுனையத் தான் விருப்பம் வருமே!

பொழுது போகாத போதுதான்
எழுது ஏதாவது என்றால் பாரும்
எண்ணத்தில் எதுவும் பிறப்பதில்லையே!
எண்ணத்தில் ஏதாச்சும் வந்துவிட்டால் – கை
வண்ணத்தில் எழுதிவிடத் தடைகள் வருமா?
எழுத எழுதத்தான் தடைகள் உடையுமே!
பழகப் பழகப் பாலும் புளிக்குமா?
எழுத எழுதக் கையும் உளையுமா?
வாசிக்க வாசிக்க அறிவும் மங்குமா?
விருப்பம் வரும்வேளை விரும்பி வந்ததை
உள்ளத்தை விட்டோட முன்னரே எழுதினால்
பாபுனையத் தான் விருப்பம் வருமே!
உலகெங்கும் தமிழைப் பரப்ப விரும்புங்கள்
உலகெங்கும் தமிழைப் பேண விரும்புங்கள்
உள்ளத்தில் தமிழறிவைப் பெருக்க விரும்புங்கள்
உண்மையில் தூயதமிழ் பரப்பிப் பேணவே
எண்ணங்கள் எல்லாம் எழுதத் தூண்டவே
பாபுனையத் தான் விருப்பம் வருமே!