உளநோய்க்கு மருந்து உள்ளமே!

உள/மன நோய் வரலாம்!

அடிக்கடி நடைபேசியைச் சொறிவதும்

ஓய்வின்றி இணையத்தில் உலாவுவதும்

தொலைக்காட்சித் தொடரில் தலைகாட்டுதலும்

செய்யும் பணிகளில் ஒழுங்கின்மையும்

குடும்பத்தில் அன்பும் பண்பும் இல்லாமையும்

தோல்விகளைக் கண்டு துயருறுவதும்

வெற்றிகளைக் கண்டு பிறரை மதிக்காமையும்

பணத்தைக் கண்டதும் சேமித்து வைக்காமையும்

பணம் இல்லையென்றால் பிறரை நாடுவதும்

வாழ்வில் போதிய மகிழ்வைத் தராமையால்

உள/மன நோய்கள் எட்டிப் பார்க்குமே!

வழமையான வாழ்வில் தான் – எவருக்கு

பயன் மிக்க வழியில் நேரம் செலவழிக்காமை

பெறுமதியோடு பொழுதுகளை போக்காமை

நல்ல உறவுகளை அணைக்காமை

திட்டமிட்டுச் செயலில் இறங்காமை

வேண்டாத எதையும் எண்ணித் துயருறலும்

விரும்பியதை அடைய முடியாமல் துயருறலும்

உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தாத வேளையில்

உள/மன நோய்கள் வரலாம் தானே!

கிட்டாதாயின் வெட்டென மறந்தும்

கைக்கெட்டியதை நிறைவோடு ஏற்பதும்

கைக்கெட்டியதைக் கையாளப் பயில்வதும்

உள்ளம் அமைதியுற நல்லதை நினைப்பதும்

உள/மன நோய்கள் வருவதைத் தடுக்குமே!

உளநோயை உருவாக்காதீர்!

வீட்டுக்கு வீடு வாசல்படி தான்

உரிமையாளர் ஒப்புதல் இன்றி

உள் நுழைய இயலாதே!

ஒப்புதல் ஏதுமின்றி வீட்டிற்குள் நுழைந்தால்

உடமைகளைக் களவெடுக்கலாம் – அங்கே

கடிநாய்கள் இருப்பின் கடிவேண்டிச் சிக்கலாம்!

ஆளுக்கு ஆள் உள்ளம் தான்

உள்ளத்தின் விருப்பம் இன்றி

உள்ளத்தில் இடம் பிடிக்கேலாதே!

ஒப்புதல் இன்றி உள்ளத்தில் நுழைந்தால்

எதிர்ப்பும் வெறுப்பும் வெளியேற்றுமே

உள்ளத்தின் விருப்புக்கு இசைந்து விட்டால்

உண்மையிலே உள்ளத்தையே களவெடுக்கலாம்!

வீட்டின் உடமைகளைக் களவெடுத்தோர்

வாழ்வில் எப்போதும் எதிரியே!

உள்ளத்தைக் களவெடுத்தவர் எவரோ

அவரே வாழ்வில் அன்புக்கு உரியவர்

எவராச்சும் இந்த உண்மையை அறிவாரோ!

வீட்டின் உடமைகளைக் களவு கொடுத்தோர்

இழப்பை எண்ணி துயர் தாங்காமல்

உள்ளமும் உடலும் நோவுற வாழ்வாரே!

உள்ளத்தில் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திய

வாழ்வின் எதிரியை எண்ணி எண்ணி

உள்ளம் நொந்தவர் வாழ்வும் துயரே!

நம்மவர் வீடுகளிலும் சரி

நம்மவர் உள்ளங்களிலும் சரி

பாதிப்பும் வெறுப்பும் மலிந்து விட்டால்

உள்ளம் புண்ணாகக் கூடும் – அந்த

உளப்புண் நோக நோக உளநோயே!

மாற்றார் உள்ளங்களைப் புண்ணாக்கி

மாற்றாருக்கு உளநோயை உருவாக்குவோர்

உலகின் மாபெரும் கெட்ட உள்ளங்களே!

%d bloggers like this: