தமிழா! எழுச்சி கொள்! – பாரதிதாசன் + காசிஆனந்தன்

எது வடமொழி எது தமிழ்மொழி என்றறியாத நம்மாளுங்க பெருகும் வேளை, பாவலர் பாரதிதாசனின் வடமொழி (சமஸ்கிருதம்) எதிர்ப்பு வரிகளாகக் கீழ்வரும் பாடலைப் பகிர விரும்புகிறேன். அவரிட்ட பாடலின் தலைப்பு ‘எழுச்சி’. வடமொழியென்ன பிறமொழியென்ன நம்ம தமிழிற்குள் சேர்க்காது (தேவைப்படின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம்) தமிழையே முதன்மைப்படுத்தி தூய தமிழாக உலகெங்கும் பரப்பிப் பேணுவோமென நம்மாளுங்க எழுச்சி கொள்ள வேண்டும்.

எழுச்சி

https://www.youtube.com/watch?v=XY6–kB-gto&index=2&list=FL4GrenMOzLV1IZIRc3KB0CQ

தமிழனே இது கேளாய்-உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்.

கமழும் உன் தமிழனை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம் உரிமைதனைக் கடித்த பாம்பு
தமிழனே இது கேளாய்…

தனித்தியங் கும் தன்மை தமிழினுக் குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு
தமிழனே இது கேளாய்…

வஞ்சகர், வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; அந்நாள் அவரஞ்சி விழித்தார்
தமிழனே இது கேளாய்…

எது தமிழ்மொழி எது பிறமொழி என்றறியாத நம்மாளுங்க பெருகும் வேளை, பாவலர் காசிஆனந்தனின் பிறமொழி எதிர்ப்பு வரிகளாகக் கீழ்வரும் பாடலைப் பகிர விரும்புகிறேன். அவரிட்ட பாடலின் தலைப்பு ‘தமிழா! நீ பேசுவது தமிழா?’. பிறமொழி எதுவானாலும் நம்ம தமிழிற்குள் சேர்க்காது (தேவைப்படின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம்) தமிழையே முதன்மைப்படுத்தி தூய தமிழாக உலகெங்கும் பரப்பிப் பேணுவோமென நம்மாளுங்க எழுச்சி கொள்ள வேண்டும்.

தமிழா! நீ பேசுவது தமிழா?

https://www.youtube.com/watch?v=xCmxJCdSPuo&index=1&list=FL4GrenMOzLV1IZIRc3KB0CQ

தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை ‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்…

தமிழா! நீபேசுவது தமிழா?

உறவை ‘லவ்’ என்றாய் உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய் அறுத்தெறி நாக்கை…

தமிழா!நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் ‘லெப்ட்டா? ரைட்டா?
‘வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ‘பைட்டா?
‘துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை ‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் ‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில ‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டியின் உதட்டிலே ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின் தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

முடிவாக:

பாட்டு வரி படித்து – அதனை
கேட்டு நீ புரிந்து – என்றும்
ஏட்டில் நீ எழுது – நல்ல
தமிழ் உலகெங்கும் வாழ!

ஆம்!, உண்மையில் இந்தப் பாடல்களைப் பகிருவதன் மூலம் நம்மாளுங்க உள்ளத்தில எள்ளளவேனும் மாற்றம் வந்து பிறமொழி எதுவானாலும் நம்ம தமிழிற்குள் சேர்க்காது தமிழையே முதன்மைப்படுத்தி தூய தமிழாக உலகெங்கும் பரப்பிப் பேணவே!
ஒரு பதிவில் பிறமொழி வரவேண்டிய தேவை இருப்பின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம். அதாவது, வணக்கம் (Welcome) அல்லது நன்றி (Thanks) என்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனது அன்பு நிறைந்த பதிவர்கள் எல்லோரும் முன்மாதிரியாக; நாம் பதிவில் பிறமொழிகள் வரவேண்டிய தேவை இருப்பின் எடுத்துக்காட்டாக நகைச்சுவை (தமாஸ்), குடிநீர் (Water)
என்றவாறு பயன்படுத்தி வெளியிட முன்வாருங்கள். இவ்வாறு முன்மாதிரியாக வெளியிடும் பதிவர்கள் எல்லோரும் இணைந்து உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணும் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்.

Advertisements

14 thoughts on “தமிழா! எழுச்சி கொள்! – பாரதிதாசன் + காசிஆனந்தன்

 1. தமிழோடு பல மொழிகள் கலந்து புரண்டு வந்தது இத் தமிழ் அலை.
  சென்ம சென்மங்கள் கடந்தாலும் சுத்த தமிழைக் காண்பது சிரமம்.
  அப்படிப் பாடுபட்டாலும் தமிழை விட்டுப் பலர் தூரமாகுவார் என்பது என் எண்ணம்.
  தமிழை நேசிக்கும் எனது கருத்து இது.
  மூக்கிலும் முகத்திலும் காயமே வரும்..
  எது தமிழ் எது பிறமொழி என்று பேதம் காண்பதே சிரமமான நிலையில் கலப்பு உள்ளது.
  முயலுங்கள!…முயலுங்கள்!….

  • எந்த மொழியையும்
   தேவை ஏற்படும் வேளை
   தமிழ் பதிவுகளில் சேர்க்கலாம்
   ஆனால் – அவற்றை
   அடைப்புக்குள் அடைத்துப் பாவிப்பதால்
   வேற்றுமொழியை வேறுபடுத்தி
   தமிழை முதன்மைப் படுத்தலாம்!

 2. முடிந்தவரை தாங்கள் கூறியதை நான் செயல்படுத்திவருகிறேன். தவிர்க்கமுடியாத இடங்களிலோ மயக்கத்தை தரும் நிலையிலோ பிறமொழிச்சொல்லைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் அது நான் பெற்ற பணி அனுபவம். ஒருகாலகட்டத்தில் தமிழையே முழுக்க முழுக்க பயன்படுத்தும் ஒருவரிடம் பணியாற்றும் சூழல் அமைந்தது. நாங்கள் பணியாற்றியது பதிப்புத்துறை. என்னை அழைத்து அவர், ஒருவர் வந்துள்ளார், அவர் நம்மவர் அதிகமாக நூல் கழிவினைத் தரவும் என்றார். நான் உடனே அச்சகப்பிரிவிற்குச் சென்று அதிகமான நூல் கழிவினை எடுத்துத் தந்தேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். வந்தவரும் அப்படியே. பின்னர்தான் தெரிந்தது அவர் நூல் வாங்க வந்துள்ளார். அதிகாரி கூறிய நூல் கழிவு (discount for book), நான் நினைத்ததோ வேறு நூல் கழிவு (cotton waste).

  • எந்த மொழியையும்
   தேவை ஏற்படும் வேளை
   தமிழ் பதிவுகளில் சேர்க்கலாம்
   ஆனால் – அவற்றை
   அடைப்புக்குள் அடைத்துப் பாவிப்பதால்
   வேற்றுமொழியை வேறுபடுத்தி
   தமிழை முதன்மைப் படுத்தலாம்!

 3. முதலில் ஆங்கிலத்தை நீக்கி பின் பிற மொழிகளை நீக்க முயலலாம். பல பதிவர்கள் ஆங்கிலத்தை தமிழில் எழுதுகிறார்கள். தாங்கள் கூறியதைப் போன்று வேற்றுமொழி வார்த்தைகளை வேறுபடுத்திக்காட்டினால் நன்றாக இருக்கும்.

  • எந்த மொழியையும்
   தேவை ஏற்படும் வேளை
   தமிழ் பதிவுகளில் சேர்க்கலாம்
   ஆனால் – அவற்றை
   அடைப்புக்குள் அடைத்துப் பாவிப்பதால்
   வேற்றுமொழியை வேறுபடுத்தி
   தமிழை முதன்மைப் படுத்தலாம்!

 4. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் “குழலின்னிசை”க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  “குழலின்னிசை” என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, “குழலின்னிசை” வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  http://www.kuzhalinnisai.blogspot.com

  • தமிழை விரும்பும் ஒவ்வொருவரையும்
   தமிழைப் பரப்பும் ஒவ்வொருவரையும்
   தமிழே அடையாளப்படுத்தும் – என்னையும்
   குழல் இன்னிசை! ஈர்த்தது என்றால் – அந்த
   தமிழை தாங்கள் வெளிப்படுத்தும் அழகு தான்!
   தொடருங்கள் உங்கள் பணி – நம்
   ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!
   வலை வழி தமிழ் பேணும்
   தங்களுக்கு எனது வாழ்த்துகள்!

  • தமிழைப் பேணும்
   தங்கள்
   முகநூல் பக்கத்தைப் பார்வையிட்டேன்.
   தமிழைப் பேணும்
   தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.