பாரதியாரின் பா வரிகள் உண்மையாகுமா?

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றியது எங்கள் தமிழ்க்குடி என அறிஞர்கள் அடிக்கடி நினைவூட்டுகின்றனர். அப்படியென்றால் உலகம் முழுவதும் தமிழர் வாழ்ந்து இருக்க வேண்டுமே! நானோ சின்னப் பொடியன் ஆகையால் கூகிழ் இணையத் தேடுபொறியில் தேடியும் இதற்குச் சான்றுகளைப் பொறுக்க முடியவில்லை.

குமரிக்கண்டம் (Lumeria continent) என்று ஒரு கண்டம் இருந்ததாம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆகிய தமிழரே ஆட்சி செய்ததாகவும் முன்னோர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் கூகிழில் தேடிய போது விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் தமிழ்ப்பதிப்பில் “இது வெறும் கட்டுக்கதை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் குமரிக்கண்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது ஆக்கியோனின் புனைவுக்(கற்பனைக்) கதை எனக்கூறி இவ்வுண்மையை மறுத்திருப்பது வேடிக்கையானது.

2000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றிய கடற்கோளாலேயே குமரிக்கண்டம் துண்டங்களாக பிரிந்ததாம் என சில ஏடுகளில் நான் படித்திருக்கின்றேன். இதனாலாயே இந்தியாவும் ஈழமும் இரண்டாகியதாம். இதனை வைத்தே ஈழ மக்களும் இந்திய தமிழக மக்களும் தொப்புள் கொடி உறவுகள் என சான்றுப்படுத்துகின்றனர்.

இது இவ்வாறிருக்க செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆய்வாளர்கள் அனுப்பிய ஒடத்தில் அங்கு உயிரினங்கள் இருப்பின் பேசும் மொழி எதுவென அறிய ஆறு மூத்த முதல் மொழிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அதற்குள் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டில் வாழும் நண்பர் ஒருவர் குறிப்பிடுகிறார். இதனை வைத்துக்கொண்டு தமிழ்தான் மூத்த மொழியென்றும் தமிழர் தான் மூத்த குடிமக்கள் எனவும் குறிப்பிட முடியாது.

அப்படியாயின் உலகை ஆண்ட தமிழரும் மொழிமாறி நாட்டுக்கு நாடு குடி பெயர்ந்து அழிந்து போகலாம். தமிழ் மொழியும் அழிந்து போகலாம். பாரதியாரின் பா வரிகள் உண்மையாகுமா? தமிழும் தமிழரும் அழிவது உண்மையாகுமா? சான்றுகளுடன் உங்கள் கருத்துக்களைக் கூறுங்களேன் பார்ப்போம்.

உலகில் முதலில் தமிழர் இருந்திருக்கலாம், தமிழும் தோன்றியிருக்கலாம். ஆயினும் குமரிக்கண்ட வரலாற்றை உண்மையென நிரூபித்தால் மட்டுமே அதற்கு முந்தைய வரலாற்று உண்மைகளை அறிய முடியும். ஆயினும் இதனை நிரூபிக்கப் போதிய சான்றுகள் தேவை. குமரிக்கண்டத்திற்குப் பின் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தக்கூடச் சான்றுகள் தேவை.

எப்படியோ உலகின் பெரும்பாகம் தமிழர் பக்கம் இருந்திருக்கிறது. பின்னர் இந்தியா, ஈழம், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளில் தமிழர் வாழ்வதாகக் கூறமுடியும். குமரிக்கண்டத்தின் முதுகெலும்பான இந்தியாவில் தமிழர் மட்டும் தமிழகத்திற்குள் குறுகியது எப்படியெனத் தெரியவில்லை.

ஆயினும் தமிழர் வாழ்ந்த இலங்கை இன்று சிங்கள பௌத்த நாடென இலங்கையரசு கூறுகிறது. கம்பன் வடித்த இராமாயணத்தில் இலாங்காபுரியை இராவணன் என்னும் தமிழ் மன்னன் ஆண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இலங்கை முழுவதும் தமிழர் வாழ்ந்திருக்கலாம்.

இந்தியாவில் புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றியவர்கள், இலங்கைக்குள்ளும் பரப்ப இலங்கைத் தமிழர் அதனைப் பின்பற்றினர். சோழ மன்னன் ஆட்சியில் இந்தியாவில் புத்தரின் வழிகாட்டலைச் சிங்களத்தில் பயன்படுத்த இலங்கைத் தமிழரும் சிங்களத்தில் பயன்படுத்தினர். இவ்வாறே இலங்கைத் தமிழர் சிங்களவராக மாறியிருக்கலாம் எனக் கூறினாலும் நம்புவதற்குச் சான்றுகள் இல்லை.

ஆயினும் பௌத்தம் (புத்தரின் வழிகாட்டல்) பேணிய தமிழர் என இலங்கைப் பத்திரிகையான வீரகேசரி கட்டுரைத் தொடர் ஒன்று வெளியிட்டிருக்கிறது. எனவே தமிழரே இலங்கையில் பௌத்தத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

தமிழ் ஆயுதக்குழுக்களும் அரசியல் கட்சிகளும் தமக்குள்ளே ஒற்றுமையின்றிச் சாக ஆட்சியிலிருந்த எல்லாச் சிங்களத் தலைவர்களும் இலங்கையைச் சிங்கள நாடாக்கி வந்துள்ளனர். போர் நடந்தமையால் தமிழர் வெளிநாடுகளுக்குச் சென்றமை இதற்கு பின்னூட்டியாக இருந்திருக்கலாம். விரைவில் தமிழர் அருகிச் சிங்களவர் பரந்து வாழும் இலங்கையைக் காணமுடியும்.

அன்று பாரதியார் கூறிய “சிங்களத் தீவினில் பாலம் அமைப்போம்” என்ற பா வரிகள் உண்மையாகலாம். ஈழத் தமிழருக்கும் இந்தியத் தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவு முறிந்து போகலாம். இந்திய மத்திய அரசும் இலங்கைச் சிங்கள அரசும் கை குலுக்கலாம்.

தமிழின் தாயகம்
இந்தியத் தமிழ்நாடு என்பதை
நானும் ஏற்றுக்கொள்கிறேன்…
ஆனால்,
ஈழம், மொறீசியஸ் போன்ற
தமிழரின் தாயகங்களை
பிறமொழிக்காரரின் நாடாக
எவராலும்
ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
மொறீசியஸ் தமிழர்
தமிழையே மறந்து போக
ஈழமும் சிங்கள மயமாக
“சிங்களத் தீவினில் பாலம் அமைப்போம்” என்ற
பாரதியாரின் பா வரிகள் உண்மையாகுமா?

Advertisements

6 thoughts on “பாரதியாரின் பா வரிகள் உண்மையாகுமா?

 1. அப்படிப்பட்ட எண்ணத்துடன் தான் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களப் பெயர் சூட்டப் பட்டு ,சிங்கள இனத்தவர் வலுக்காடாயமாக குடி அமர்த்த ப்படுவதாக அறிகிறோம் ,ஐ நா .சபை என்று ஒன்று இருந்தும் இந்தக் கொடுமைக்கு ஒரு விடிவு இல்லையே !

  • ஈழத் தமிழரின் இந்நிலை எதுவரை செல்லுமோ எனக்குத் தெரியவில்லை.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

  • அதாவது, தமிழகத் தமிழரும் ஈழத் தமிழரும் இணைவதற்கான பாலம் அமையட்டும். தமிழரின் இலங்கை சிங்களத் தீவானால் தமிழின் அடையாளம் அற்றுப்போகலாமே!
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
   மிக்க நன்றி.

 2. “சிங்களத் தீவினில் பாலம் அமைப்போம்” என்ற
  பாரதியாரின் பா வரிகள் உண்மையாகுமா?
  சரியான கேள்வி…..ஆனால் பதிலலுக்குக் …..

  வேதா. இலங்காதிலகம்.

  • அதாவது, தமிழகத் தமிழரும் ஈழத் தமிழரும் இணைவதற்கான பாலம் அமையட்டும். தமிழரின் இலங்கை சிங்களத் தீவானால் தமிழின் அடையாளம் அற்றுப்போகலாமே!
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
   மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.