கதைகள் புனையலாம் வாருங்கள்!

 

முதலாம் பகுதி:

கடுகுக்கதை, சிறுகதை, குறும் தொடர்கதை, நெடும்கதை எனப் பல கதைகள் இருக்கின்றன. இவற்றில் நகைச்சுவை அதிகம் சேர்க்கப்பட்டிருந்தால் நகைச்சுவைக் கதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பாவால் எழுதப்படும் கதைகள் (கவிதைக் கதைகள்) பாக்கதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கதைகள் புனையும் போது தன்கூற்று, பிறர்கூற்று, மூன்று காலங்கள், குறியீடுகள் போன்ற தொடக்க இலக்கணம் போதும். பாப்புனைய எப்படி எண்ணமிடுகிறோமோ (கற்பனை செய்கிறோமோ) அது போல இதற்கும் தேவை. கதைகள் புனையும் போது தான் சொல்வதாகவோ தான் பார்த்ததைச் சொல்வதாகவோ இன்னொருவரிடம் கேட்டறிந்ததைச் சொல்வதாகவோ எழுதலாம்.

தேவைப்படும் போது கதையில் எடுத்துக்காட்டுக்களாக ”திருக்குறள் வரிகள், திரையிசைப் பாடல் வரிகள்” என எதையும் பாவிக்கலாம். ஆனால் அதனை எந்தக் குறள், எத்திரைப் பாடல், யார் எழுதியது என்பன சேர்க்கப்பட வேண்டும். ஆயினும் கதையென்பது ஒரு பரப்புரையாக (பிரச்சாரமாக) அமையக் கூடாது. நமது வழமையான வாழ்வின் சில மணித்துளி நிகழ்வுகளாக இருக்கும் போது தான் வாசகன் கதையை வாசிக்கும் போது மகிழ்வடைகின்றான். கதைக்குள்ளே உரையாடல்கள் வரலாம், ஆனால் நீண்டதாக இருக்கக் கூடாது.

கதைகளைப் புனையும் போது (யாவும்) முற்றிலும் கற்பனை, முற்றிலும் உண்மை, கற்பனை கலந்த உண்மை என முடிப்பது வழக்கம். முடிவில் கதையில் வரும் பெயர்கள், நிகழ்வுகள் யாவும் கதாசிரியரின் கற்பனை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவ்வளவையும் கணக்கில் எடுத்தால் கதை புனைய முடியாதென நீங்கள் வெறுப்பு அடையாமல் கதை புனைவோம் வாருங்கள்.

எடுத்துக்காட்டு 01 :-

நல்ல நித்திரையில் என் கையால் தலைமாட்டில் கிடந்த மண்ணெண்ணை விளக்குத் தட்டுப்பட்டுட்டுது. கை குளிர்ந்த போது வௌ்ளம் வீட்டிற்குள் புகுந்துவிட்டதோ என எண்ணி, நான் எழும்பி தலையணைக்குள் கிடந்த தீப்பெட்டியைப் பற்ற வைத்து விளக்கைத் தேடுகையில் எண்ணெய் பற்றிக் கொண்டது. தீ பரவி என்னைத் துரத்த முன் நானோடி முற்றத்துக்கு வந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் தீ ஓலை வேய்ந்த மண் வீட்டை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. மண்ணெண்ணை விளக்கை பாதுகாப்பாக வைத்திருந்தால் இப்படி இழப்பு வந்திருக்காது என உணர்ந்தேன். என்றாலும் “காலம் கடந்து ஞானம் வந்தென்ன பயன்” என எண்ணி எனது வீட்டை அண்டை அயலுடன் சேர்ந்து புதிதாகக் கட்டி முடித்து விட்டேன்.

இக்கதையில் நான் பட்டறிந்ததை நானே சொல்லி முடித்திருக்கேன். உறங்கும் போதும் குழந்தைகள் இருக்குமிடத்திலும் மண்ணெண்ணை விளக்கைப் பாதுகாப்பாக வைக்க வேணும் என்பதே இக்கதையில் வரும் செய்தியாகும். இவ்வாறு உங்கள் வீட்டில் நிகழ்ந்த படிப்பினையைக் கதையாகப் புனைந்து பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு :- 02

இரவு 8 மணியிருக்கும் சாந்தி படித்துக்கொண்டிருக்கும் வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்நேரம் அவளது காலை உரசிய படி எலி ஒன்று ஓடியது. “ஜயோ! அம்மோய்!” என்று கத்தினாள் சாந்தி. அதைக் கேட்ட தாய் பதறியடித்துக் கொண்டு அவளது அறைக்கு ஓடினாள். அவ்வேளை தாய் கதவில் மோதி பலத்த அடி, செந்நீர் வெளியேற அட கடவுளே! என்னைக் காப்பற்று என்று ஒப்பாரி வைத்தாள்.

“கை மின் விளக்கைப் பிடியடா, கொம்மாவுக்கும் கொக்காவுக்கும் என்ன நடந்தது என்று பாரடா” எனத் தகப்பன் மகனை அதட்ட மின்சாரம் வந்து விட்டது. “மின்சாரம் இருந்தாலும் ஆளுக்காள் கை மின்விளக்கை வைச்சிருங்கோ என்று சொன்னால் கேட்கிறேல்ல; எலிக்குப் பொறி வையென்றால் அதுவும் செய்யுறேல்ல; தாயும் மோளும் ஒப்பாரி வைத்து ஊரே கூடி வந்து நிற்குது” என்று தகப்பன் பொரிந்து தள்ளிப்போட்டு வந்தவர்களுக்கு நடந்ததை விளக்கத் தொடக்கினார்.

தகப்பன் வாயாலே இக்கதையில் செய்தி தெரிவிக்கக்கூடியதாகவும் எதற்கும் படபடப்பின்றி அமைதியாகச் செயற்பட்டால் சாந்தியின் தாய்க்கு இவ்வாறு நிகழாதென்பதை வாசகன் ஊகிக்கக் கூடியதாகவும் எழுதியவர் தானே நேரில் கண்டதாகவும் புனையப்பட்டுள்ள இக்கதை போன்று நீங்களும் பார்த்த நிகழ்வொன்றைக் கதையாகப் புனைந்து பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு :- 03

நடைபேசி நட்புக்காரணமாக ராமன், சீதையின் பேச்சை நம்பி ஜந்து நட்சத்திர விடுதிக்குப் போயிருந்தானாம். மூக்கு முட்ட விழுங்கிப் போட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனராம். உணவு பரிமாறியவர் 1500 உரூபா கட்டணம் செலுத்துமாறு பணித்தராம்.

சீதையிடம் பணம் இல்லையாம் “அப்ப ஏன் இந்த விடுதிக்கு அழைத்தாய்” என ராமன் திட்டிப் போட்டு என்னட்டையும் காசு இல்லையே என்றானாம். “நீ அழைத்து நான் வந்தமையால் உன் தங்க நகையைக் கொடுத்துத் தப்புவோம்” என ராமனே சொன்னானாம். “நான் போட்டிருப்பது போலியாக மின்னும் நகை” என்றாளாம் சீதை.

காலம் கடந்தால் காவற்றுறை வந்துவிடுமென அஞ்சி ராமன் தன் மின்பண அட்டையைப் பாவித்துக் கட்டணத்தைச் செலுத்தினானாம். பிறகென்ன விடுதியை விட்டு வெளியேறிய இருவரும் பிரிந்தனராம். இன்று வரை இருவரும் சந்திக்காமல் இருப்பதாக ராமனின் மனைவி சூர்ப்பனகை, தனது மைத்துனி மண்டோதரிக்குச் சொல்லி முடித்தாள்.

உள்ளத்தைப் புண்படுத்தும் செயலால் அல்லது துக்கத்தால், நொந்த உள்ளத்தால் வெறுப்பு ஏற்படப் பிரிவு நிகழ்கின்றதைச் செய்தியாகவும்; மணமுடிக்க முன் ஈடுபட்ட தமது முந்தையச் செயற்பாடுகளை கணவன், மனைவி பகிர்ந்து கொள்வதால் மகிழ்வாக இருக்கலாம் என்பதை வாசகன் உணரவும் கணவனின் கதையை மனைவி மைத்துனிக்குச் சொல்வதாக இக்கதை புனையப்பட்டுள்ளது.

இம்மூன்று எடுத்துக்காட்டுக்களில் கதை புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியுமென நம்புகிறேன். கடுகுக் கதையென்பது ஒன்று தொடக்கம் நான்கைந்து பக்கங்களில் எழுதலாம். சிறுகதை என்பது ஆறு தொடக்கம் பன்னிரண்டு பக்கங்களில் எழுதலாம். இவை வாழ்க்கையின் குறுகிய பகுதியையோ சிறு நிகழ்வையோ கதைக் கருவாகக் கொண்டிருக்கலாம்.

நெடும் தொடர்கதை என்பது கடுகுக்கதை, சிறுகதையிலிருந்து சற்று வேறுபடும். இதன் கதைக்கரு ஒரு தலைமுறைக் காலம் (25 ஆண்டுகள்) சார்ந்து இருக்கும். பெற்றோர் மணம் முடித்துப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து காதலில் சிக்கி பெற்றோர் விருப்பமின்றி ஓடிப்போய் தனித்துக் குடும்பம் நடாத்துகின்ற வரையான காலப்பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

குறும் தொடர்கதை என்பது நெடும் தொடர்கதையை ஒத்திருக்கும். மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் பிள்ளைகள் காதலித்து பெற்றவர் விருப்பமின்றி ஓடிப்போய் திருமணம் செய்கின்ற காலப்பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். குறைந்தது ஜந்து தொடக்கம் பத்து ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்ததாகப் புனையலாம்.

கதைகள் புனைவதென்றால் இன்னும் எத்தனையோ இலக்கணங்கள், கோட்பாடுகள் தேடிப்படிக்கலாம். என் அறிவிற்கெட்டியவரை இத்தனையும் சுருங்கக்கூறியதைச் சிறு குறிப்பாகக் கருத்திற்கொண்டு நீங்களும் கதைகள் புனையலாம் என நம்புகின்றேன். மேலும் நாடகத் தொடர்கதை ஒன்றும் உள்ளது. எனது அடுத்த படைப்பான “நாடக, திரைக் கதைகள் புனையலாம் வாருங்கள்” என்ற படைப்பில் சேர்த்துக்கொள்வேன்.

இரண்டாம் பகுதி:

கதை எழுதப் புகுமுன்
http://wp.me/pTOfc-6T
மறக்காமல் இவ்விணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்

Advertisements

4 thoughts on “கதைகள் புனையலாம் வாருங்கள்!

  1. எடுத்துகாட்டுடன் கதையை எழுத கற்றுத் தந்த விதம் அருமை ,ஆர்வமுள்ளோருக்கு நல்ல வழிகாட்டி !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.