தேர்தலில் பரப்புரை செய்யக் கற்றுக் கொள்வோம்

தேர்தல் வந்தால் போதும் அரங்குகள் (மேடைகள்) ஆங்காங்கே தலையைக் காட்டும். முன், பின் முகம் அறியாப் புதுமுகங்கள் அவ்வவ் அரங்குகளிலே பேசுவாங்கள். ஆளுக்காள் தாக்கிப் பேசுவாங்களே தவிர, தங்களைப் பற்றியோ தங்களது நல்லது கெட்டதையோ சொல்லவும் மாட்டாங்கள்… இதனால் எவர் எவரைத் திட்டினாலும், திட்டு வேண்டியவர் வெற்றி பெறுகின்றார். இதிலிருந்து மக்கள் என்ன முடிவு எடுத்திருப்பார்கள் என்றால், பிறரைத் திட்டுபவர்களிடம் சிறந்த மக்கள் நலத் திட்டங்கள் கிடையாது என்பதையே!

எனவே, தேர்தலில் பரப்புரை செய்ய இறங்க முன் தமது பக்கத்தில் உள்ள மக்கள் நலத் திட்டங்களையும் அவற்றை எவ்வாறு நிறைவேற்றும் ஆளுமை தங்களிடம் இருப்பதையும் தங்கள் பக்கத்து ஆட்களின் நன்னடத்தை, சொத்து விரிப்பு, வரவுக்கு மீறிச் சொத்துச் சேகரிக்க மாட்டோமென்ற உறுதிப்பாடு ஆகியவற்றைத் தொகுத்து மக்கள் முன் பணிவன்புடன் முன்வைப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக எதிர்ப் பக்கத்தைப் பற்றி ஓரெழுத்துக் கூட உச்சரிக்கக் கூடாது. தங்கள் பக்கத்துக்கு வலுச்சேர்க்கக் கூடிய நம்பிக்கையூட்டல்களையே வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கவும் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் தாய் மொழியாம் தமிழப் பேணவும் வேண்டிய ஒத்துழைப்பைத் தருவதாகவும் உறுதியளிக்கலாம். அதன் மூலமே மக்கள் தெளிவு பெற முடியும்.

அரங்கிலேறி இவ்வாறு பேசக் கற்றுக்கொண்ட அரசியல் ஆள்களே! மக்களிடம் இப்படித் தமிழைப் பேணலாம் என்று கூறிப்போட்டு நாடாளுமன்றம் சென்றதும் தமிழாலே பேசுங்கள். அங்குள்ள மொழிபெயர்ப்பாளர்கள் உங்கள் கருத்தை மொழிபெயர்ப்பார்களே! சென்ற இடமெல்லாம் தலைவர்கள் தமிழாலே பேசினால் தானே, தொண்டர்களும் தமிழில் பேசுவார்கள். அப்போது தானே மக்கள் மத்தியில் நல்ல தமிழ் உலாவும்.

Advertisements