தூய தமிழ் பேணுவது இயலாத பணி

யாழ்பாவாணன் ஆகிய நான் அறிவில் சின்னப்பொடியன் என்றாலும் படித்த அறிஞர்கள் வெளிப்படுத்திய அறிவைப் பொறுக்கித் தருவதில் எனக்கு விருப்பம். அப்படித் தான் தூய தமிழ் பேணுவது இயலாத பணி எனச் சிலர் சொன்னாலும் “தூய தமிழ் பேணும் பணி” என இவ்வலைப்பூவை நடாத்துகிறேன். இதற்குத் துணையாக தூய தமிழ் பேண உதவும் நூல்களைத் திரட்டி களஞ்சியப்படுத்தி உள்ளேன். (பட்டியைச் (Menu) சொடுக்கிப் பார்த்துப் பதிவிறக்கலாம்.) மேலும், தூய தமிழ் பேணுவது எப்படியென அறிஞர்கள் கூறும் மதியுரைகளையும் இணைத்து வருகிறேன்.

ஆயினும், தூய தமிழ் பேணுவது இயலாத பணி எனத் தான் சிலர் சொல்கின்றனர். “அதெப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம்” என்கிறீர்களா? அதற்கு அவர்கள் கூறும் சாட்டையும் ஏற்றுத் தான் ஆகவேண்டுமே! அதாவது, தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொல்கள் எதனையும் நம்மாளுகளுக்குத் தெரியாமை தான் அவர்களது முதல் சாட்டு. இதனைச் சரிப்படுத்த மணவை முஸ்த்தபா எழுதிய அகரமுதலி ஒன்றைப் படித்தேன். தமிழில் பேசப்படும் ஆங்கிலச் சொல்களுக்கான தமிழ் சொல் காணப்பட்டது. பிறிதொரு பதிவில் (இங்கே http://wp.me/pTOfc-9s சொடுக்குக) பிறமொழி-தமிழ் அகரமுதலியை அறிமுகம் செய்துள்ளேன்.

உறவுகளே உங்களுக்குத் தெரிந்த நூல்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இப்பேற்பட்ட அகரமுதலி மின்னூல்கள் உங்களிடம் இருப்பின் yarpavanan@hotmail.com மின்னஞ்சலூடாக எனக்கு அனுப்பி உதவினால் எனது மின்னூல் களஞ்சியத்தில் இணைத்துக் கொள்ளமுடியும். http://wp.me/PTOfc-58 என்ற இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியம் செல்லலாம். எத்தனை எத்தனை நூல்கள் இருந்தென்ன நம்மாளுகளும் விருப்புடன் அதனைக் கற்று தூய தமிழ் பேண விரும்பவேண்டும்.

தமிழின் அடையாளமே வேர்ச் சொல்லிருந்து பிறந்த சொல்களே! தமிழ் எழுத்துகள் எல்லாம் மனித உணர்வின் பிறப்பே! மொத்தத்தில் தமிழ் உலகின் முதன்மை மொழி மட்டுமல்ல இயற்கையாய்த் தோன்றிய மொழியும் கூட.

உணர்வின் பிறப்பே தமிழ் எழுத்துகள்!

மேற்காணும் படத்தை கூகிள்+ இல் நண்பர் ஒருவர் பதிவுசெய்திருந்தார். அதனைப் பொறுக்கி இங்கிணைத்துள்ளேன். மேலும், வேர்ச் சொல் ஆய்வில் இறங்கிய தேவநேயப் பாவாணர் அவர்களைப் படிக்க http://ta.wikipedia.org/s/3f1 என்ற இணைப்பைச் சொடுக்கலாம்.

“வேர்ச் சொல் அறியாத, தெரியாத நம்மாளுகள் எப்படித் தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களைக் கழட்டித் தூக்கி வீசப்போகிறார்கள்.” என்பது தூய தமிழ் பேணுவது இயலாத பணி எனச் சொல்வோர் கூறும் அடுத்த சாட்டு. இதில் உண்மையும் இருக்கத் தானே செய்கிறது. அதாவது, எந்த மொழிச் சொல்லுக்கும் தமிழில் இருப்பது போன்று வேர்ச் சொல் கிடையாது; வேர்ச் சொல் அறிந்தால், தெரிந்தால் தானே பிறமொழிச் சொல்களைக் கழட்டித் தூக்கி வீசலாம். வேர்ச் சொல் பற்றிய அறிவைத் தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அடியேனின் சில பொறுக்கல்களைக் கீழே படிக்கவும்.

வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்.

எடுத்துக் காட்டாக வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம் போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச் சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும்.

வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன.
மூலம் : http://ta.wikipedia.org/s/4rs

தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக:
‘போ’ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் ‘வ்’ என்ற எதிர் கால இடைநிலையும், ‘ஆன்’ என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து,

போ + வ் + ஆன் = போவான்

என்று ஒரு சொல் உருவாகிறது.
மூலம் : http://tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211114.htm

வேர்ச் சொல், வேர்ச் சொல்லிலிருந்து தமிழ் சொல் எப்படி உருவாகிறது என்பதை விளக்க மேற்படி தளங்களில் பொறுக்கிய பகுதி உதவலாம்.

வேர்ச் சொல் அறிந்து, தெரிந்து தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களைக் கழட்டித் தூக்கி வீசுவதனாலேயே தூயதமிழ், நற்றமிழ் பேண வாய்ப்பு உண்டு. வேர்ச் சொல் கொண்டு உருவான சொல்கள் புழங்கும் தமிழ் மொழியை, நாம் வேர்ச் சொல்லறிந்து தமிழ் சொல்களால் பேண முயல்வோம். பிறமொழிச் சொல்களைத் தூக்கியெறிந்த பின், வேர்ச் சொல் கொண்ட தமிழ் பேண முடியாவிட்டால் தூய தமிழ் பேணுவது இயலாத பணியே! அப்படியாயின், தமிழரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த இயலாமல் போகலாம்.

தமிழ் அறிஞர்களே! தமிழ்ப் பதிவர்களே! தமிழ் ஆசிரியர்களே! தூய தமிழ் பேண இயலாத வேளை, தமிழரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த இயலாமல் போகலாம் எனவுணர்ந்து வலைப்பூக்களை நீங்கள் நடத்தலாம்; நடாத்த வேண்டும். ஏற்கனவே, வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) என்ற தொகுப்பைப் பேணுகிறேன். மேலும், “தமிழ் மொழி ஆய்வுப் பதிவுகள்” என்றொரு தொகுப்பைப் பேணலாம் என எண்ணியுள்ளேன்.

“தமிழ் மொழி ஆய்வுப் பதிவுகள்” என்ற தொகுப்பில் தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் பதிவர்கள், தமிழ் ஆசிரியர்கள் தாம் நாடாத்தும் வலைப்பூக்களில் பதிந்த தமிழ் மொழி ஆய்வுப் பதிவுகளின் இணைப்பைத் (URL ஐத்) தொகுத்தால் நன்மை கிட்டுமென நம்புகிறேன். அதாவது, அத்தொகுப்பைச் சுட்டிக்காட்டி உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேணும் பணியை ஊக்குவிக்கலாம் என நம்புகிறேன். இது பற்றிய தங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவுங்கள்.

Advertisements

8 thoughts on “தூய தமிழ் பேணுவது இயலாத பணி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.