சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்.

ஈழத்து, யாழ்பாணத்து, மாவிட்டபுரம் பாவலர் க.சச்சிதானந்தன் அவர்களின் தமிழ் பற்றை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். கட்டையிலே சாகையிலே பாரும் “சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்று பாடிய பாவலனின் எண்ணத்தைப் பகிர முனைகிறேன். பாவலர்களே! இப்படி உங்களாலும் தமிழ் பற்றை வெளிப்படுத்தும் தமிழைப் பேணும் எண்ணங்களைப் பகிரும் பாக்களைப் படைக்க முன்வாருங்கள்.

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா.
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை.
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்
காயும கிழங்குகளை தின்று மகிழ்வேன்.

மாடமிதிலை நகர் வீதிவருவேன் – இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்.
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து – அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்.
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா – என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா – கவிக்
கள்ளைக் குடித்தவெறி யேறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை.
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.

குறிப்பு: யாழ்ப்பாணத்து மூத்த எழுத்தாளர் வரதர் அவர்களின் ‘அறிவுக் களஞ்சியம்’ நூலில் படித்ததை வைத்துத் தொடக்கக் குறிப்பு எழுதியும் இப்பாடலை ‘நன்றி: தும்பை இதழ் 1 – 15-5-2005’ எனத் தமிழம் வலையில் (http://www.thamizham.net/ithazh/suvai/su/su040-u8.htm) இருந்ததைக் கண்டு பொறுக்கியும் அறிமுகம் செய்கிறேன். மேற்காணும் பாவிற்கான ஆசிரியரின் குறிப்பை அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilspeak.com/?p=11387

Advertisements

6 thoughts on “சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 1. தித்திக்கும் பொருட் சுவையும்
  தேன் பாயும் சொற் சுவையும்
  அத்தனவன் உள்ளத்தில்
  அலை பாயக் கண்டு மகிழ்ந்தேன் !

  இத்தரையில் தமிழ் வாழும்
  ஈசனவன் முடி சேரும்
  முத்தமிழைக் குடிப்பவனே
  மூவுலகமும் உனை வாழ்த்தும்

  செத்த மனம் சேமிக்கும்
  செழுமையான முத்தமிழால்
  பக்தை இவள் வாழுகின்றாள்
  பல சமைய இருள் போக்கி

  வித்தகனே உனதருமை
  விழி பார்க்க ஏங்குகின்றேன்
  எத்தனை நாள்க் காத்திருந்தேன்
  இனிய தமிழ்ப் பா பருக !!

  உள்ளக் கமலத்தை மகிழ வைத்த தமிழ்
  உணர்வாளர் உங்களுக்கும் என் மனமார்ந்த
  நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
  தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா .

  • பாவாலே பகிர்ந்த பொன்னான கருத்து
   நாவாலே படிக்க நல்ல பாவென
   தங்கள் பாராட்டு பாபுனைந்த புலவருக்கே
   எங்கள் உறவுகள் படித்து மகிழ
   அறிஞர்களின் சுவை மிகுந்த பதிவுகளை
   அறியத் தருவதே எனது பணியாகுமே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.