தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர்

உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேண உழைத்தவர்கள் பலர் இருந்துள்ளனர். அந்த வகையில் தேவநேயப் பாவாணர் என்ற அறிஞரைப் பற்றி சில வலைப் பதிவுகளைப் படித்துப் பொறுக்கிய தகவலைக் கீழே தருகின்றேன்.

“தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.” என்று தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் பற்றி தினமணி தளத்தில் (http://www.dinamani.com/specials/kalvimani/2013/12/22/தமிழ்-அறிஞர்கள்-அறிவோம்-தே/article1959314.ece) குறிப்பிடப்பட்டிருந்தது.

“தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.” என்றும்

“தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார்.” என்றும்

தமிழ்நேசன் தளத்தில் (http://tamilnation-tamilmani.blogspot.com/2011/07/blog-post_23.html) குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் நாற்பதிற்கு மேற்பட்ட நூல்களை ஆக்கியுள்ளார். இவரது வேர்ச் சொல் விளக்கம் பயன்தரும் ஒன்றாகும். அத்தனை நூல்களும் தமிழ்மொழி ஆய்வு நூல்களாகும். இவை தூய தமிழைப் பேண உதவும் நூல்களே! இவர் தமிழைப் பேண எடுத்த முயற்சிகளுக்கு மதிப்பளித்து தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்தியா அஞ்சல் தலை (முத்திரை) வெளியிட்டது.
தேவநேயப் பாவாணர் பற்றி மேலுமறிய: http://ta.wikipedia.org/s/3f1

மேலேயுள்ள கருத்துகளைப் படிப்பதோடு நின்றுவிடாமல், தரப்பட்ட இணைப்புகளைச் சொடுக்கித் தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் பற்றிய முழு விரிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். நாளைய தலைமுறைக்குத் தமிழை உலகெங்கும் பரப்பிப் பேண உழைத்த தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கவேண்டியது இன்றை பெற்றோர்களின் கடமை தானே!

 

Advertisements

4 thoughts on “தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.