தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்

“தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்” என்று எழுத முன் உலகம், மனிதன், பின் மொழி என்று தான் எழுதத் தொடங்கலாம் என எண்ணினேன். அப்படியாயின் உலகம் எப்போது தோன்றியது? அதற்குப் பதில் கூற எனக்குத் தெரியாது. அடுத்து மனிதன் எப்போது தோன்றினான்? உலகம் தோன்றிய பின் மனிதன் தோன்றியிருப்பான் என எல்லோரும் தானே சொல்லுகினம். அடுத்து மொழி எப்போது தோன்றியது? தாயின் வயிற்றிலிருந்து தாய்மண்ணைக் காண வந்ததும் குழந்தை பேசும் மொழி அழுகை தானே!

குழந்தை அழுத போது எழுந்த ஒலி தான் முதல் மொழி என்று சொல்ல முடியாது. அதாவது, குழந்தை தன்நிலையை (பசி, தண்ணீர் விடாய், தனிமை என … ) வெளிப்படுத்த அழுகையைப் பாவித்தமையால் மொழிக்கு முதற்காரணம் ஒலி ஆகலாம். குழந்தை எழுப்பிய ஒலிகளின் மாற்றமே அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ என அமைந்திருக்கலாம். மேலும், குழந்தை வளர, வளர ம், அம், ஆ, அம்மா எனச் சொல்ல முயன்றிருக்கலாம். இவ்வாறே ப், அப், ஆ, அப்பா எனச் சொல்லியிருக்கலாம். இப்படித்தான் மனித உணர்வுகள் எழுத்தாகவும் மனித வெளிப்பாடு சொல்லாகவும் தோன்றத் தமிழ் மனிதப் பிறப்போடு தோன்றிய உலகின் முதன் மொழி என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படித்தான் தமிழ் மனிதப் பிறப்போடு தோன்றிய உலகின் முதன் மொழி என்று என் எண்ணத்தை உங்களுடன் பகிர்ந்தாலும், நீங்கள் ஒரு போதும் நம்பப்போவதில்லை. புறப்பொருள் வெண்பா மாலையிலே ஐயனாரிதனார் என்கின்ற புலவர் தமிழர் தொன்மையையும் தமிழர் வீரத்தையும் கீழ்வரும் பாடலொன்றில் குறிப்பிடுகிறார்.

“பொய் அகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

இந்தப் பாடலை வைத்துக்கொண்டு தான் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி; எங்கள் தமிழ்க்குடி” என்றும் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழி; எங்கள் தமிழ் மொழி” என்றும் முழங்கி இருக்கிறாங்க… ஆனால், தற்காலத் தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருப்பதை நம்மாளுகள் முழங்காமல் இருக்கிறாங்களே!

உலகிலே முதன் முதலில் தோன்றிய மொழிகளில் ஆறு மொழிகளை நாசா விண்வெளி அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய நாசா விண்வெளி அறிவியலாளர்கள் அனுப்பிய ஆய்வுக் கருவியில் முதலில் தோன்றிய ஆறு மொழிகளையும் புகுத்தி இருந்தனர். பூவுலகில உள்ளோர் செவ்வாய்க் கோளில் இருந்து வந்திருக்கலாம் என்றோ செவ்வாய்க் கோளில் நம்மாளுகள் உள்ளனர் என்றோ இம்முயற்சியை நாசா செய்திருக்கலாம். நான் சொல்ல வந்த செய்தி என்னவென்றால்; ஆய்வுக் கருவியில் புகுத்திய ஆறு மொழிகளில் நம்ம தமிழும் உண்டென்பதைத் தான்.

எவை அந்த ஆறு மொழிகளென கீழ்வரும் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழி தமிழ் என்கிறார்கள். உலகில் முதல் மூன்று இடங்களில் சீன மொழி, ஸ்பானிஸ் மொழி, ஆங்கில மொழி பேசப்படுகிறது. நம்ம தமிழ் மொழி பதினேழாம் இடத்தில் இருப்பதாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் பார்க்க முடிந்தது. மேலும், ‘ஆசியாவில் மட்டும் 2200 மொழிகளும், ஆப்பிரிக்காவில் 2000 மொழிகளும், பசுபிக் பகுதியில் 1300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன’ என ஓர் இணையத்தளத்தில் படிக்க முடிந்தது.

“முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… பின் மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்… 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும் குறைந்த மொழிகள் இருக்குமாம்…” என்றொரு தகவலை 2000ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.

“இவை எல்லாவற்றையும் ஏன் சொல்ல வேண்டும்?” என நீங்கள் கேட்கலாம். நான் சொல்வது என்னவென்றால், இவற்றின் அடிப்படையில் பார்த்தால் எங்கள் தாய்த் தமிழ் மொழியும் அழிய வாய்ப்பு உண்டென்பதையே!

இப்படி மொழிகள் அழியக் காரணமென்ன? ஒரு மொழி எப்ப தன் அடையாளத்தை இழந்து நிற்கிறதோ, அப்ப அம்மொழி அழிகிறது அல்லது சாகிறது எனலாம். அப்ப மொழியின் அடையாளம் என்றால் என்ன? மொழியின் வரலாற்றுப் பின்னணி (தொன்மை), மொழி கொண்டுள்ள பரப்பு (எல்லை), எழுத்து, சொல் (வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை), இலக்கண, இலக்கியமென ஒரு மொழிக்குப் பல அடையாளங்கள் இருக்கிறது.

மேற்படி பார்த்தால் தமிழ் மொழி தன் அடையாளத்தை இழக்கவுமில்லை; சாகவுமில்லை என நீங்கள் கூறலாம். ஆனால், நான் அப்படிக் கூறமாட்டேன். கணினி நுட்பத் தேவை கருதி எழுத்துச் சீர்திருத்தம் செய்த போது தமிழைச் சாகவைக்கத் தொடங்கியாச்சே! இப்ப என்னவென்றால் பிறமொழிப் பாவனை, மொழிபெயர்ப்புத் தேவை என மீண்டும் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமென முனகுவது தமிழின் சாவுக்கு நாள் குறிக்கும் செயலே.

“தமிழா! நீ பேசுவது தமிழா!” என உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன் கேட்பது சரிதானே! தற்காலத் தமிழில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட மொழிகள் கலந்துள்ளன. எடுத்துக்காட்டாக தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம் என்ற புதுமொழியே தமிழர் வாயால் பேசப்படுகிறது. தமிழ் ஊடகங்களும் தமிங்கில ஊடகங்களாகவே மின்னுகின்றன. தொல்காப்பியம், நன்னூல் கால இடைவெளியிலே தமிழுக்குள் வடமொழி (சமஸ்கிருதம்) நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பின் உலகெங்கும் தமிழர் பரவி வாழ, ஏனைய மொழிகள் தமிழுக்குள் வந்து குந்திவிட்டன.

தற்காலத் தமிழின் நிலையைக் கீழ்வரும் ஒளி/ஒலிப் பதிவைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

எழுத்து, பேச்சு இரண்டும் கெட்டால் இலக்கண, இலக்கியங்களைச் சொல்லவும் வேண்டுமா? வேர்ச் சொல் மறந்து பிற சொல் பேசுவதோடு, இலக்கணமற்ற இலக்கியம் படைக்கத் தொடங்கியதும் தமிழின் சாவுக்கான நாள் நெருங்கிவிட்டதே. வரிக் (வசன) கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் ஓரளவு இலக்கணம் பேசப்பட்டாலும் ஏனைய இலக்கியங்களில் தமிழைச் சுழியோடித் தான் தேடவேண்டும். யப்பானியக் கவிதை (கைக்கூ, கசல், … என), தமிங்கிலிஸ், தமிங்கிலப் படைப்புகள் எதிலும் தமிழைக் காணவில்லை.

“ஊதாக் கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்” என்றும்

“எக்ஸ்கியூஸ் மீ மிஸ்ரர் கந்தசாமி” என்றும்

இன்றைய திரைப்பாடல் எல்லாமே தமிங்கிலிஸ், தமிங்கிலப் பாடல்களாகவே ஊளையிடப்படுகிறது.

“ஹாய் பியூட்டி கேர்ள்
கௌவ் ஆர் யூ?
கியர், யுவர் லவ்வர்!” என்றும்

“ஹலோ, நைட்டில
தூக்கமே வரேல…
வையிட்டில போட்ட சேட்
கனவில
என் கண்ணைப் பறிக்குதே!” என்றும்

இன்றைய படைப்புகள் எல்லாமே தமிங்கிலிஸ், தமிங்கிலப் பதிவுகளாகவே மின்னுகிறது.

“அந்த ஆசாமிக்கு, ஆயாவைப் பற்றித் தெரியாது. ஏதோ அட்வைஸ் பண்ணியிருக்கிறார். முதலில ‘மக்கரான உங்க வண்டியைத் திருத்துங்க’ என்று ஒதுங்கிவிட்டாள்.” இதில பாருங்கோ:
மக்கர் (அரபி மொழி) = இடக்கு/பழுது(தமிழ்)
அட்வைஸ்(ஆங்கிலம்) = அறிவுரை(தமிழ்)
ஆயா(போர்த்துக்கீசம்) = செவிலி/பணிப்பெண்
ஆசாமி(உருது மொழி) = ஆள்(தமிழ்)
ஆகிய பிறமொழிச் சொல்கள் இருக்கே. இனியாவது இவற்றை நீக்கிய பின் பேசுகிற தமிழே தூய தமிழ் என்போம்.

தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும் இப்படித் தான் என் எண்ணத்தில் தோன்றியது. தமிழை வாழ வைக்க முன்வராவிட்டாலும் தமிழைச் சாகவாவது இடமளிக்காமல் பேண முன்வாருங்கள். தமிழிலுள்ள பிறமொழிச் சொல்களை அகற்றி, தூய தமிழைப் பேண முன்வாருங்கள். இன்றைய நம்மாளுகளே நற்றமிழைப் பேணத் தவறினால், நாளைய வழித்தோன்றல்கள் எப்படி செம்மொழியாம் நம்ம நற்றமிழை நுகர முடியும்?

Advertisements

14 thoughts on “தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்

 1. வணக்கம்
  தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்.
  என்ற தலைப்பில்மிக சிறப்பாகவும் விரிவாகவும் எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்…இது
  ரூபன் &பாண்டியன் நடத்தும் தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப்போட்டிக்காக
  எழுதியதா?

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • ஆமாம்!
   இது ரூபன் & பாண்டியன் நடத்தும் தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்காக எழுதியது. மின்னஞ்சல் அனுப்பக் கால தாமதமாகியதிற்கு மன்னிக்ககவும்.

 2. ஆழமான சிந்தனையுடன்
  அரிய தகவல்களுடன் கூடிய
  அற்புதமான கட்டுரை
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

 3. நல்ல அலசல்… போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா… தங்களின் தகவலும் (mail) கண்டேன்… பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி விட்டேன்…

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா…

 4. நல்ல கட்டுரை நண்பர் யாழ்பாவாணன் அவர்களே, தங்களின் இனிய தமிழ்ப் படைப்புகள் தொடரவேண்டுமென விழைகிறேன், வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.

 5. வணக்கம் ஐயா
  ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..
  முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html

 6. வணக்கம்.
  ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
  தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..
  http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

  சான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்….
  மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
  சந்திப்போம்…..
  இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.