வாசிப்பை விரும்புவோம்

“தூய தமிழைப் பேணு என்று முழங்க வந்த யாழ்பாவாணா!
இருபத்தைந்து மொழிகள் தமிழில் கலந்திருக்கு என்றாய்!
இருபத்தைந்து மொழிகளை இனம் காண வழி கூறாயா!” என்று
உறவுகள் சிலர் என்னைக் கேட்க…
“வழியொன்று இருக்க விழி பிதுங்குவது சரியா உறவுகளே!
விழி பிதுங்கும் உறவுகளே வாசிக்கக் கற்றாலென்ன?
வாசிக்கக் கற்றுக்கொள்ள நூல்கள் இல்லையா?” என்று
நான் சொல்ல வந்த செய்தியை
தமிழறிய, பிறமொழி விலக்க, தமிழைப் பேண
“வாசிப்பை விரும்புவோம்” என்றொரு பதிவைத் தருகின்றேன்.

பொத்தகங்களுக்குள் உறங்கிக்கொண்டிருப்பது
வெறும்
தாள்களின் எண்ணிக்கை அல்ல
அறிஞர்களின் அறிவுமே!
பொத்தகக் கடைகளிலே
தூசிச் சேலையை உடுத்திக்கொண்டிருப்பது
பலரது அறிவைச் சுமக்கும்
அழகிய பொத்தகங்களே!
தெருப் பொத்தகக் கடைகளிலே
ஊமையாய் உறங்கிக் கிடக்கும்
பொத்தகங்களைத் திரும்பிப் பார்க்காதோர்
வருவாய் இன்றிய ஏழைகளா…
அறிவே இன்றிய மூடர்களா…
இல்லவே இல்லை
வாசிப்பை விரும்பாதவர்களே!
“வாசிப்பு” என்னும் தாகம்
இல்லாதவர்களாலேயே
தெருக்கடைப் பொத்தகங்களிலே
அட்டைப் பக்கத்திலே
இலையானும் கரப்பானும் நுளம்பும்
முட்டையிட்டுப் பீச்சியடிக்க
சிலந்தி வலை பின்னி விட
ஒட்டி உறங்கியிருக்கும் அழுக்கோடு
தூசிகளும் சேலைகளாயிற்றோ!
அட கடவுளே – கொஞ்சம்
இஞ்ச வந்து பாரப்பா…
தெருக்கடைப் பொத்தகங்களுக்கு
இந்த நிலையென்றால்
அவற்றுக்கு உயிர் கொடுத்த
அறிஞர்களின் நிலையை
என்னவென்று பாடுவேன்!
இனிய உறவுகளே
உங்கள் வழிகாட்டிகளாக
இன்றே
நல்ல பொத்தகம் ஒன்றை
வாங்கிப் படியுங்கள்!
வாசிப்பதால் – மனிதன்
அறிவாளியாகின்றான்…
உயர்வடைகின்றான்…
நிறைவடைகின்றான்…
எனவே தான்
வாசிப்பை விரும்பக் கற்றுக்கொள்வோம்!
வாசிப்பை விரும்புபவர்களாலேயே
தமிழறியத் தேடலைச் செய்யலாம்…
பிறமொழி விலக்கக் கற்கலாம்…
தமிழைப் பேணவழி தேடலாம்…
உலகெங்கும்
தூய தமிழைப் பேண
வாசிப்பை விரும்புங்கள் உறவுகளே!

Advertisements