இலக்கியக் களவு (திருட்டு)

ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெறுகின்ற போது அடைகின்ற நோக்களையும் வலிகளையும் நீங்கள் பட்டறிந்திருப்பீர்கள் அல்லது கேட்டறிந்திருப்பீர்கள். அது போலத்தான் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்கும் போதும் எத்தனையோ நோக்களையும் வலிகளையும் அடைகின்றான். இந்நிலை அவர் அப்படைப்பை வாசகரிடம் கொண்டு செல்லும் வரை தொடருகிறது.

அப்படியிருக்கையில், ஒரு படைப்பாளியின் ஓரிரு வரிகளையேனும் பிறிதொருவர் உரியவரின் உரிமையின்றிப் பயன்படுத்துவது தான் இலக்கியக் களவு (திருட்டு) என்று வரையறை செய்யமுடியும். இதனால், உண்மைப் படைப்பாளியின் திறமையைப் போலிப் படைப்பாளி தனதாக்க முனைகின்றார். இந்நிலை எழுதுகோல் ஏந்தியோரிடம் இருக்கக் கூடாது.

எடுத்துக்காட்டாக:
“நானென்று பேர்சொல்லி நடைபோடு
ஏனென்று கேட்போரை எடைபோடு!” என்ற அடிகளை உங்கள் யாழ்பாவாணன் தனது பதிவுகளில் இணைத்திருந்தால்; அவர் இலக்கியக் களவு (திருட்டு) செய்தார் என்று பொருள் கொள்ளலாம்.

யாழ்பாவாணன் இலக்கியக் களவு (திருட்டு) செய்யவில்லை என்றால் பின்வருமாறு பாவித்திருக்க வேண்டும்.
“நானென்று பேர்சொல்லி நடைபோடு
ஏனென்று கேட்போரை எடைபோடு!” என்று பாவரசர் கண்ணதாசன் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தூய தமிழை உலகெங்கும் பரப்பிப் பேண எத்தனையோ பேரறிஞர்கள் சொன்ன வழிகாட்டலை நாம் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. எனவே, எழுதுகோல் ஏந்திய எல்லோரும் இலக்கியக் களவு (திருட்டு) பற்றிய தெளிவைப் பெற்றிருத்தல் வேண்டும்.

இலக்கியக் களவு (திருட்டு) இன்றிய பதிவை மேற்கொள்ள:
எடுத்துக்காட்டாக நூலொன்றில் இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கிப் பாவித்திருந்தால்; அவ்வரிகள் உள்ள பக்க இலக்கம், நூலின் பெயர், ஆக்கியோன் பெயர், நூலை வெளியிட்டோர் பெயரும் முகவரியும் ஆகியன குறிப்பிடுதல் வேண்டும். ஆகக்குறைந்தது நூலின் பெயர், ஆக்கியோன் பெயர் மட்டுமாவது குறிப்பிடவேண்டும்.

எடுத்துக்காட்டாக அச்சுஏடு (பத்திரிகை/ சஞ்சிகை) ஒன்றில் இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கிப் பாவித்திருந்தால்; அச்சுஏட்டின் பெயர், வெளியிட்ட நாள்(திகதி), ஆக்கியோன் பெயர் ஆகியன குறிப்பிடுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக இணையத் தளமொன்றில் இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கிப் பாவித்திருந்தால்; பதிவின் தலைப்பு, பதிவின் இணையப் பக்க முகவரி, ஆக்கியோன் பெயர் ஆகியன குறிப்பிடுதல் வேண்டும். இவ்வாறு ஏனைய மின்னூடகங்களில் (வானொலி/ தொலைக்காட்சி) இருந்து ஓரிரு வரிகளை பொறுக்கினாலும் குறிப்பிடவேண்டும்.

இவ்வாறு இலக்கிய நேர்மையுடன் பதிவுகளை மேற்கொண்டு, சிறந்த படைப்பாளி என்ற நற்பெயரைப் பேணிக்கொண்டே உலகெங்கும் தூய தமிழை பரப்பிப் பேண முயற்சி செய்யலாம். இதே கோட்பாட்டுடன் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு முயற்சி செய்வோம்.

Advertisements