தமிழ்ச்சாதி நாமென ஒன்றிணைய உடன்பாடிருந்தால்…

இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், சிங்கப்பூர்த் தமிழர், மலேசியத் தமிழர் என நாட்டுக்கு (153 நாடுகளில்) நாடு வாழும் தமிழர்; மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்கு நம்பிக்கையோடு ஒன்றிணைய உடன்பட வேண்டும். நாட்டுக்கு நாடு இயற்கை அமைப்பு வேறுபடலாம். ஆனால், மொழி, கலை, பண்பாடு வேறுபட வாய்ப்பில்லையே!

அவ்வவ் நாட்டு நலன் கருதி அந்தந்த நாட்டவர் வாழ்ந்தாலும் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பேண ஒருவருக்கொருவர் தமக்கிடையேயுள்ள ஐயங்களைப் போக்கி ஒன்றிணைய உடன்பாடிருந்தால் உலகெங்கும் அவற்றைப் பரப்பிப் பேணமுடியுமே! இவ்வுண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்படுத்த முன்வரவேண்டும். அப்போது தான் உலகெங்கும் தமிழை அழியாது பேணவும் தமிழரின் அடையாளங்களைப் பேணவும் முடியும்.

மேலுள்ள பகுதியைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்த போது “தமிழர்கள் மொழி, பண்பாடு அடிப்படையில் இணைந்திருந்தாலும் அரசியல், மதம் அடிப்படையில் பிரிந்துள்ளார்கள். இன்னும் நிறையக் கருத்துகளை எதிர்பார்க்கிறோம்.” என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாகக் கீழ்வரும் பகுதியை வழங்கினேன்.

அரசியலில் நன்மைகள் எவரிடமுள்ளதோ, அவர்கள் பக்கம் மக்கள் சாய்வர். ஓரணியில் ஒரே குடையின் கீழ் மக்களுக்குத் தொண்டு செய்ய முடியாதவர்களால், பிரிவினையையும் வேறுபாட்டையும் விதைத்து தமது தேட்டத்திற்காக மக்களைக் குழப்புகின்றனர். மக்கள் இவ்வாறானவர்களைத் தூக்கி எறிய வேண்டும்.

மதங்கள் எப்போதும் மக்களை ஆற்றுபடுத்தவும் மக்களுக்கு வழிகாட்டவும் துணை நிற்கின்றன. புதுப்புது மதக்குழுக்கள் தோன்றி மத வேறுபாடுகளையும் மத வெறியையும் தூண்டுகின்றன. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றும் மதம் மாறாமலும் எம் மதமானாலும் “நாம் தமிழர்” என்ற குடையின் கீழ் வாழ முயல வேண்டும்.

உடனடித் தேவைகளுக்கு அயலவரிடம் உதவி கேட்பது போல போர், கடற்கோள் வந்து பாதிப்புற்றால் அயல் நாட்டவரிடம் உதவியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறனவர்களும் “நாம் தமிழர்” என்ற குடையின் கீழ் உலகத் தமிழராக ஓரணியில் நிற்கலாமே!

அரசியல், மதம், நாடு என வேறுபாடுகளை விதைக்காமல் “நாம் தமிழர்” என எல்லோரும் ஒன்றுபட்டால் மொழி, கலை, பண்பாடு எல்லாவற்றையும் உலகெங்கும் பேணலாம் அதேவேளை உலகத்திலுள்ளவர்களைப் பின்பற்றவும் வைக்கலாமே.

Advertisements

4 thoughts on “தமிழ்ச்சாதி நாமென ஒன்றிணைய உடன்பாடிருந்தால்…

  1. ”..அரசியல், மதம், நாடு என வேறுபாடுகளை விதைக்காமல் “நாம் தமிழர்” என எல்லோரும் ஒன்றுபட்டால் மொழி, கலை, பண்பாடு எல்லாவற்றையும் உலகெங்கும் பேணலாம் …”
    உண்மை தான் இப்படிக் குரல் கொடுத்தபடியே இருக்க வேண்டியது தான்.
    .இறைவன் நல் வழி காட்டட்டும்.
    பணி தொடர இனிய வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.