தமிழ் பற்றிச் சில வரிகள்

தமிழ் எங்கள் தாய் மொழி – அந்த
தமிழ் உலகின் மூத்த மொழி!

தமிழரின் தாயகம் குமரிக்கண்டம் என்றால் அதன் இருப்பே இந்தியா தான். அந்த (இன்றைய) இந்தியாவில் இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகிறதாம். அதிலும் தமிழ் தானாம் மூத்த மொழி.

உலகின் மூத்த மொழி நாம் பேசும் தமிழ் மொழியே! எமது அம்மா அன்பாக உணவூட்டும் போதும் எமது அப்பா எம்மை அணைத்து அமைதியாக அறிவூட்டும் போதும் ‘அ’, ‘அம்’, ‘அம்மா…’ என ஊட்டிய முதலறிவும் தமிழ் மொழியே! நாம் பிறந்தது வளர்ந்து முதலில் கற்ற தமிழ் மொழியே, எங்கள் தாய் மொழி!

இனிமையாகப் பேச நல்ல மொழி எங்கள் தமிழ் மொழியே! பள்ளிக்குச் சென்று படிக்கும் முன், வீட்டில் படித்த முதற் பாடமும் எங்கள் தமிழ் மொழியே! நண்பர்களுடன் கூடிப் பழகிய வேளை பேசிக்கொண்ட முதன்மொழியும் தமிழ் மொழியே! உண்மையில் தமிழ் எங்கள் தாய் மொழியே!

‘அ’ தொட்டு ‘ஔ’ வரையான உயிர் எழுத்துகளும் ‘க்’ தொட்டு ‘ன்’ வரையான மெய் எழுத்துகளும் இருநூற்றிப் பதினாறு உயிர்மெய் எழுத்துகளும் ‘ஃ’ எனும் ஆயுத எழுத்துமாக இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்டது எங்கள் தாய்த் தமிழ் மொழியே! இயல், இசை, நாடகம் எல்லாம் கொண்டது தமிழ் இலக்கியமே!

அகத்தியர் தான் தமிழ் இலக்கணம் வகுத்தாலும் தொல்காப்பியரின் இலக்கணமும் பழமை தான். அந்தத் தொல்காப்பியத்தில் ஐம்பத்தாறு இடங்களில் தனக்கு முன்னர் பலர் இலக்கணம் எழுதினரென்றும் அதனை வைத்தே தானும் இலக்கணம் எழுதியதாகவும் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளதாக அறிஞர் ஒருவர் சொன்னார்.

தமிழ் இலக்கியங்கள் ஏராளம் இருந்தாலும் கம்பரின் இராமாயணமே சுவை மிகுந்த இலக்கியமாம். புதுக்கவிதைக்கு முன்னோடி பாரதியார் கவிதைகளும் இன்றைய இளசுகளின் உள்ளத்தில் இடம்பிடித்த புதுக்கவிதைகளாக மூ.மேத்தாவின் கவிதைகளும் நல்லிலக்கியமாகப் பேசப்படுகிறது.

அன்று தமிழ் வளர்த்த கடவுள் முருகக் கடவுள் என்றும் சங்கம் வளர்த்துத் தமிழ் பேணியவர் எங்கள் தமிழ் மன்னர்கள் என்றும் பெரியோர் கூறுவர். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவாம். அதுவும் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் தான் பாண்டிய மன்னன் ஆட்சியில் தான் கடைச்சங்கம் இருந்ததாக அறியப்படுகிறது.

ஆனால், இன்று நூற்றுக்கு மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கியம் திருக்குறளே! இது தாய் மொழியாம் தமிழுக்குக் கிடைத்த பெருமையே!

 
“யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!” என்று பாவலர் பாரதியாரும்

“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்” என்று பாவலர் பாரதிதாசனும்

எங்கள் தாய் மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடியுமுள்ளனரே!

அடடே! இப்படி எண்ணிப் பார்த்தால் தமிழைப் பற்றி எத்தனையோ கோடி வரிகளில் எழுத முடியுமே! “தமிழ் என்பது கரை தேட முடியாத நெடுங்கடல். அதனை நீந்திக் கடந்தவரே தமிழறிஞர்!” என்று எனக்குத் தமிழ் புகட்டிய ஆசிரியர் சொல்லித் தந்தார். ஆமாம், தமிழ் தொன்மையான மொழி, செம்மையான மொழி என்று முழங்குவதை விடத் ‘தமிழ் பற்றிச் சில வரிகள்’ அதாவது தமிழ் மொழியை ஒட்டிய எத்தனையோ உண்மைகளைப் பகிர முன்வாருங்களேன்.

 

Advertisements

6 thoughts on “தமிழ் பற்றிச் சில வரிகள்

 1. நல்ல தொகுப்பு… நல்ல கருத்து…

  ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும்,
  ஒன்தமிழே சலசலத்து ஓட வேண்டும்…
  பாடையிலே படுத்து ஊரைச் சுற்றும் போதும்,
  பைந்தமிழால் அழும் ஓசை கேட்க வேண்டும்…

  எனக்கு பிடித்த வரிகள்…

  • “தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்!!” என்ற வலைப்பூவுக்கு அடிக்கடி வருவேன். தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம் கருத்துப்பகிர நிறைய இருப்பதால் வருவேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.