ஊடகங்களில் தமிழை வெளிப்படுத்துங்களேன்

நம்ம தமிழில் இருபத்தைந்து பிற மொழிகள் கலந்திருக்க… தமிழகத் தமிழ் ஊடகங்களில் பதினெட்டு மொழிகள் கலந்திருக்க… ஈழத்துத் தமிழ் ஊடகங்களில் எட்டிற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருக்க… நம்மாளுகளின் கைவண்ணத்தில் ஆன ஆங்கிலம் + தமிழ் = தமிங்கிலக் கவிதை ஒன்றைக் கீழே தருகின்றேன்…

ஹலோ!
உங்களைத் தான்…
பிளீஸ்!
கொஞ்சம் நில்லுங்களேன்…
ஐ லவ் யூ!
மெடம்…
நீங்க தான்
என் லஃவ் பாட்னர்!
பிளீஸ்!
எனக்கு நோ சொல்லாதீங்க…
நான் சுசயிட் பண்ணிடுவேன்!

இக்கவிதையினை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தால் எழுதியவரை வெள்ளைக்காரி விரும்பியிருக்கலாம். அதேவேளை ஆங்கிலத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.

இக்கவிதையினைத் தமிழில் பதிவு செய்திருந்தால் எழுதியவரைத் தமிழச்சி விரும்பியிருக்கலாம். அதேவேளை தமிழிற்கும் பெருமை சேர்ந்திருக்கும்.

இந்தத் தமிங்கிலக் கவிதையைப் பத்திரிகையிலோ இணையப் பக்கத்திலோ படித்தோ தொலைக்காட்சியில் பார்த்தோ வானொலியில் வாசிக்கக் கேட்டோ எவளாச்சும் எழுதியவரை விரும்புவாளா? ஆங்கிலத்திற்கோ தமிழிற்கோ பெருமை சேர்ந்திருக்குமா?

இன்றைய தமிழ்த் திரை இசைப் பாடல்களிலும் பல மொழிக் கலப்புத் தான்… பணத்திற்காகப் பாடல் வரிகளில் பிறமொழி இடைச் செருகலைச் செய்ய வேண்டி இருப்பதாகப் பாடலாசிரியர் ஒருவர் தெரிவித்த நினைவு…

ஊடகங்களில் எழுதுவோர் தமிழை வெளிப்படுத்துங்களேன்; தமிழை வெளிப்படுத்தாத ஊடகங்களிற்கு எழுதாமலாவது இருங்களேன். பணத்திற்காகத் தாய் மொழியில் பிற மொழியைச் சேர்ப்பது தாய் மொழியைக் கொல்வதற்கு ஈடாகுமே!

உலகெங்கும் தூய தமிழைப் பேணத் தமிழ் எழுத்தாளர்களே முதற் பங்காளிகள்! ஊடகங்களோ இரண்டாம் பங்காளிகள்! வாசகர்களோ பார்வையாளர்களோ கேட்போர்களோ மூன்றாம் பங்காளிகள்! எல்லோரும் ஓரணியில் இணைந்தால் உலகெங்கும் தூய தமிழைப் பேண முடியுமே! எனவே, எல்லோரும் தூய தமிழைப் பேண ஒன்றிணைய முன்வாருங்களேன்.

Advertisements