தமிழ் இனி மெல்லச் சாகுமா?

7500 இற்கும் கூடுதலாக இருந்த
உலகெங்கும் புழங்கிய மொழிகள்
செம்மையாகப் பேசுவோர் எவருமின்றி
வலுவிழந்து, புழக்கமின்றி, அழிந்து போய்
2000 இற்கும் குறைவான மொழிகளே
உலகெங்கும் புழக்கத்தில் உலாவுகின்றனவாம்!
உலகின் மூலை, முடக்கு எங்கும்
பரவிக் குடியிருக்கும்
தமிழர் நாப் பழக்கம்
பிற மொழிகளின் களஞ்சியமானால்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன் தோன்றிய மூத்த தமிழ்
இனி மெல்லச் சாகுமோ?
‘அம்’ இலிருந்து அம்மாவும்
‘அப்’ இலிருந்து அப்பாவும் என
வேர்ச் சொல்லில் இருந்து பிறந்த
செந்தமிழ் சொல்லெடுத்து
தமிழர் தங்கள் நாவால் பழக்கப்படுத்தினால்
ஆறு மொழிகளாயினும்
இறுதியில் தப்பிப் பிழைத்தாலும் – அதில்
எங்கள் தமிழ் மொழியும்
உலகெங்கும் புழக்கத்தில் இருக்குமே!
சொல் வளம் பெருகின்
மொழி வளம் சிறக்கும் என்றால்
செம்மைத் தமிழ் சிறந்து விளங்க
முன் நிற்க வேண்டியவர்களும் நாங்களே!

Advertisements