தமிழை அழியாமல் பேண முன்வாருங்கள்.

அன்று தமிழர் வணிக நோக்கில் வெளியிடங்களிற்கு சென்று வருகையில் பிற மொழியையும் கொண்டு வந்ததால், அவை தமிழில் கலந்து தமிழை அழிக்கத்தொடங்கின. இதில் தமிழர் எல்லோருக்கும் பங்குண்டு.
இன்று பணத்திற்காக தமிழில் பிறமொழி கலக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக: திரையிசைப் பாடல்கள், விளம்பரங்கள், போன்ற எல்லா வழிகளிலும். மேலும், மேலைநாட்டு ஈர்ப்புக் காரணமாகவும் தமிழில் பிறமொழி கலக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக: அழகுநடையிற்காக(ஸ்டையில்), பிறர் மதிக்க வேண்டுமென்பதிற்காக (எடுப்பாக மின்ன/ ஈகோ) எனப் பல வழிகளிலும். குறிப்பாகத் தமிழ் எது? வடமொழி எது? என்ற தெளிவின்மையாலும் தமிழில் வடமொழி அதிகம் கலக்கப்பட்டுப் பேசப்படுவதாலும் தமிழ் அழிகிறது. பல தமிழறிஞர்கள் தமிழ்-வடமொழி வேறுபாட்டை விளக்கியுள்ளனர்.

இதனடிப்படையில் பார்த்தால் நூற்றில பத்து தமிழை வளர்க்கிறார்கள், எஞ்சிய நூற்றில தொண்ணூறு தமிழை அழிக்கிறார்கள் என்றே கருதமுடிகிறது. எத்துறையைப் பற்றியிருப்போரும் தமிழை வளர்க்கலாம் அல்லது தமிழை அழிக்கலாம். ஆனால், மக்கள் மத்தியில் நல்ல தமிழை எடுத்துச்சொல்லி வழக்கப்படுத்த முன்வருவோரே தமிழை வளர்ப்பவர்கள் என்பேன். ஏனையோர் தமிழை அழிப்பவர்களே!

உலகத் தமிழ் உறவுகளே! உலகெங்கும் தமிழை அழியாமல் பேண என்ன என்ன வழிகளைக் கையாளலாம் என்றாவது கூறுங்களேன். உண்மையில் சிலர் தமிழை அழியாமல் பேண முயன்றாலும் வெற்றிகிட்டாது. மக்கள் மத்தியில் நல்ல தமிழை எடுத்துச்சொல்லி வழக்கப்படுத்துவதால் மட்டுமே தமிழை அழியாமல் பேண முடியுமென நம்புகிறேன். அதாவது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது போல மக்களாயம்(சமூகம்/Society) உணர்வோடு ஒன்றுபட்டு நல்ல தமிழைப் பேண முன்வர வேண்டும்.

நானொரு சிறியன்! என்னை விடப் பெரியோர்களாகிய உங்களிடம் தக்க மதியுரை(ஆலோசனை)யைக் கேட்டு நிற்கிறேன். அதாவது, எவரெவர் வழியாக மக்கள் மத்தியில் நல்ல தமிழை எடுத்துச் சொல்லலாம்? மக்களாயம்(சமூகம்/Society) உணர்வோடு ஒன்றுபட்டு நல்ல தமிழைப் பேண முன்வர வைக்க என்ன செய்யலாம்? அப்படி முன்வர மக்களாயம்(சமூகம்/Society) உடன்பட்டால் எப்படி நெறிப்படுத்துவது?

இவ்வண்ணம்
தங்களிடம் மதியுரை(ஆலோசனை)யைக் கேட்டு நிற்கும்
உங்கள் யாழ்பாவாணன்

Advertisements