செய்தி எழுதலாம் வாருங்கள்

இயற்கையை மீறிய ஒன்று அல்லது இயல்புக்கு மீறிய ஒன்று அல்லது திடீரெனப் புகுந்த புதிய ஒன்று எனப் பார்ப்பதற்கு அருமையாக உள்ள ஒன்றைச் செய்தி என்று கூறலாம். எடுத்துக்காட்டாக, நாய் மனிதனைக் கடிப்பது இயல்பு மாறாக மனிதன் நாயைக் கடித்தால் செய்தி.
ஒரு தென்னை கிளைவிட்டு இரண்டாகி இரண்டிலும் இளநீர் பிடுங்கிக் குடிப்பது; எனது பெண்டாட்டி வயிற்றில் பன்னிரண்டு பிள்ளைகள் கருவுற்றிருப்பதாக மருத்துவர் கூறுதல்; கடல் நீர் ஊருக்குள் நுழைந்து தூக்கத்தில் உள்ளவர்களைத் தட்டியெழுப்புதல் என எடுத்துக்காட்டாகப் பல செய்திகளைக் கூறலாம்.
அடடே! இப்பவே செய்தி எழுதப் புறப்பட்டு விட்டீர்களா? கொஞ்சம் நில்லுங்கள்! எழுதிய செய்தியால் எவரும் புண்படாதவாறு பார்த்துக் கொள்ளவும். எவரையும் சுட்டியோ தாக்கியோ எழுதாமல், பல பக்கத்தாலும் அணுகிச் சான்றுகளுடன் உண்மையை நடுநிலைமையாக நின்று நேரில் பார்த்தது போல எழுத வேண்டும். அப்படியான செய்தியே பெறுமதியானது.
பெறுமதியான செய்தியால் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது மக்கள் மத்தியில் பாரிய மாற்றம் நிகழலாம் அல்லது அரசில் பாரிய மாற்றம் நிகழலாம் அல்லது இயற்கை மாற்றங்களை முன்னறிந்து மக்கள் பாதுகாப்பு எடுக்கலாம். இதே போன்று இன்னும் பல நன்மைகள் கிடைக்கலாம்.
என் அறிவிற்கெட்டிய வரை செய்தி பற்றிய சிறு குறிப்பைத் தந்துள்ளேன். மேலும் “செய்திக் கண்ணோட்டம் எழுதலாம் வாருங்கள்” என அடுத்து எழுத இருக்கின்றேன். அதுவரை அறிஞர்களாகிய உங்களின் தாக்குரை மற்றும் திறனாய்வை எதிர்பார்க்கின்றேன்.

Advertisements