செய்திக் கண்ணோட்டம் எழுதலாம் வாருங்கள்

தெருவெளித் தேர்தல் வேளை நன்றிக்குரிய நாய்கள் அமைப்பு(ந.நா.அ), அடுப்படிப் பூனைகள் அமைப்பு (அ.பூ.அ), ஆளுக்காள் அடிபடும் மக்கள் அமைப்பு (ஆ.அ.ம.அ) ஆகியன மோதிக் கொண்டன என்பது செய்தி.
நம்மாளுகளையும் நம்மவர்களின் உடைமைகள் களவு போகாமையும் காவல் காப்பது நாய்கள் என்று ந.நா.அ. ஐச் சேர்ந்தவர்களும் நெல்லுக் களஞ்சியத்தை நாடும் எலிகளைப் பிடித்துண்பதால் நம்மாளுகளுக்கு நன்மை செய்வது பூனைகள் என்று அ.பூ.அ. ஐச் சேர்ந்தவர்களும் நாய் கடிக்குமென அஞ்சி களவு எடுக்காமையும் பூனை குறுக்கால போனால் பின்வாங்கி கிடைக்க இருக்கின்ற நல்வாய்ப்புகளை இழக்கும் நம்மாளுகள் என்று ஆ.அ.ம.அ. ஐச் சேர்ந்தவர்களும் விறுவிறுப்பாகப் பரப்புரை செய்தனர்.
மக்கள் கருத்துப்படி தேர்தல் வந்தால் தலையைக் காட்டுபவர்கள், தேர்தல் முடிந்ததும் ஒடி ஒளிந்து விடுவார்கள், எவருக்கும் வாக்குப் போடமுடியாது என பெரும் எண்ணிக்கையான மக்கள் கருத்துகின்றனர். வாக்குப் போடுவது நமது உரிமை, அதனைச் சரியாகச் செய்யுங்கள் எனத் தலைவர்கள் சொல்கின்றனர். வாக்களிப்பதால் மக்களுக்கு நன்மை செய்தும் காவலர்களாக இருந்தும் பணியாற்றக் கூடிய ந.நா.அ. இற்கு வாக்களிப்பதால் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு உச்சப் பயனைப் பெற முடியுமென பலராலும் நம்பப்படுகிறது.
செய்திகளை உள்வாங்கி அச்செய்தி கூறும் உண்மைகளை வெளிப்படுத்தி, அச்செய்தியால் பயனாளர்களுக்குக் கிடைக்கின்ற நன்மைகளை எடுத்துச் சொல்வதாகச் செய்திக் கண்ணோட்டம் அமையும். அதாவது இதனை எழுதுவோர் செய்திக்குள் ஒளிந்து இருக்கும் உண்மையை அரங்கிற்கு வெளிக்கொணரும் வேலையைச் செய்ய வேண்டும்.
பத்திரிகைத் துறையில் இவ்வாறு அரசியல், இராணுவம், புலனாய்வு, ஊர் மற்றும் மக்கள் முன்னேற்றம் எனப் பல துறைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த துறையிலே ஆய்வுக் கட்டுரைகளை எழுதலாம். ஆனால், சான்றுகள் இன்றி சாட்டுக்கள் கூறமுடியாது. எனவே, தகுந்த சான்றுகளுடன் ஒப்பிட்டு, அலசி “இதனடிப்படையில் இவ்வுண்மை வெளிப்படுகிறது” என எழுதி முடிக்கலாம்.
ஏற்கனவே, ‘செய்தி எழுதலாம் வாருங்கள்’ என எழுதியிருக்கிறேன். எனது அடுத்த படைப்பாக ‘தாக்குரையும் திறனாய்வும் எழுதலாம் வாருங்கள்’ என எழுத இருக்கிறேன்.

Advertisements