இலை மறை காயாக இருப்போரை அறிமுகம் செய்வோம்.

தமிழ் உலகெங்கும் வாழ்கிறது என்றால் தமிழுக்காகப் பல அறிஞர்கள் எத்தனையோ செய்திருக்கிறார்கள். தமிழை உலகெங்கும் பரப்பிப் பேண எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். இவ்வாறான அறிஞர்களுக்கு நாம் உதவ வேண்டும். அப்படி எம்மால் உதவ முடியாவிட்டால், அவர்களது பணிகளையாவது அறிமுகம் செய்ய முன்வாருங்கள்.

“வலைச்சரம்” என்று கூகிள் தேடற் பொறியில் தேடினால் “வலைச்சரம். வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப்படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்.” என்ற விளக்கத்துடன் மதிப்புக்குரிய சீனா(சிதம்பரம்) ஐயா அவர்களின் “வலைச்சரம்” என்னும் வலைப்பூவை(http://blogintamil.blogspot.com/) முதலாவதாகப் பார்க்கமுடிகிறது.

“வலைச்சரம்” என்னும் வலைப்பூவின் பணி இலை மறை காயாக இருப்போரை அறிமுகம் செய்யும் பணியாகவே எனக்குத் தென்படுகிறது. சிறந்த படைப்பாளிகளை ஆசிரியர்களாக்கி சிறந்த படைப்பாளிகளின் பதிவுகளை அறிமுகம் செய்வதால் இணைய வழி தமிழ் பேண உதவும் என நம்புகிறேன்.

நானும் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண https://yarlpavanan.wordpress.com/, http://paapunaya.blogspot.com/ போன்ற தளங்களில் சிறு முயற்சி செய்கிறேன். நானும் தமிழெனும் பெருங்கடலை நீந்திக் கடக்காத சின்னப்பொடியனே! எனது சிறு முயற்சிகளைப் பார்வையிட்ட மதிப்புக்குரிய அருணா செல்வம் (http://arouna-selvame.blogspot.com/) அவர்கள், சின்னப்பொடியனான எனது சிறு முயற்சிகளையும் “வலைச்சரம்” என்னும் வலைப்பூவில் ஏழலுக்கு (வாரமொரு) ஆசிரியராகப் பணி செய்த வேளை அறிமுகம் செய்துள்ளதை நினைவூட்ட விரும்புகிறேன்.

சில அறிஞர்கள் தமது தளத்திலும் சில அறிஞர்கள் எனது தளத்திற்கு வருகை தந்தும் தமது கருத்துகளை வெளிப்படுத்தி எனது சிறு முயற்சிகளை ஊக்குவிக்கிறார்கள். எல்லோருக்கும் எனது நன்றிகள். நானும் ஏனையோரது தளத்திற்குச் சென்று கருத்துத் தெரிவிக்கிறேன். இச்செயற்பாடு கூட உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் என நம்புகிறேன்.

“இலை மறை காயாக…” என்றால் என்ன? மாவிலைகளுக்குள் மாங்காய்கள் மறைந்திருப்பதாகக் கருதலாம். ஏன் இதனை நம்மாளுகள் ஒப்பிடுகிறார்கள்? நம்மிடையே பல அறிஞர்கள் மாவிலைகளுக்குள் மறைந்திருக்கும் காய்களாக அல்ல தமிழெனும் பெருங்கடலை நீந்திக் கடந்த பழங்களாக அதாவது பெரும் அறிஞர்களாக மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்ட ஒப்பிடுகிறார்கள்.

நாம் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண இலை மறை காயாக இருக்கும் அறிஞர்களை அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களது தமிழ்ப் பணிகளை உலகெங்கும் பரப்ப வேண்டும். இதற்காக நாம் ஒன்றுபட வேண்டும்.

நானும், எனது தளத்தில் பின்வரும் தலைப்புகளை நோக்காகக் கொண்டு நாடாத்தப்படும் வலைத்தளங்களை அறிமுகம் செய்யவுள்ளேன்.

வலைத் தளங்களில் தமிழைக் கற்பிப்போர்…

வலைத் தளங்களில் தமிழிலக்கியங்களை எழுதப் பயிற்றுவிப்போர்…

வலைத் தளங்களில் தமிழ் நூல்களைப் பேணிப் பரப்புவோர்…

வலைத் தளங்களில் தமிழறிஞர்களை அறிமுகம் செய்வோர்…

வலைத் தளங்களில் தமிழ்ச் சங்கம் நடத்துவோர்…

வலைத் தளங்களில் தூய தமிழ் பேண உழைப்போர்…

வலைத் தளங்களில் தமிழைப் பேணப் பரப்ப உதவும் கணினி மென்பொருள்களை அறிமுகம் செய்வோர்…

இன்னும் பலவேறு வழிகளில்

வலைத் தளங்களினூடாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முயல்வோரை…

என் இனிய தமிழ் உறவுகளே! மேற்படி தலைப்புகளில் நீங்கள் வலைத் தளம் நடாத்தினால் அல்லது உங்கள் நண்பர்கள் நடாத்தினால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். எனது தளத்தில் “இலை மறை காயாக…” என்ற தலைப்பிலான பக்கம் ஒன்றைச் சிறப்பாகத் திறந்து வலைத் தளங்களில் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முயல்வோரை அறிமுகம் செய்ய எண்ணியுள்ளேன்.

நீங்களும் உங்கள் வலைத்தளங்களில் இவ்வாறு முயற்சி செய்யுங்கள். இலை மறை காயாக ஒழிந்திருங்கும் அறிஞர்களை, வலைத் தளங்களை நாம் அறிமுகம் செய்யத் தவறுவோமாயின் தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதில் ஐயமில்லை. உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண இந்த வரலாற்றுத் தவறைச் செய்யாது இருப்போம்.

எல்லோரும் ஒன்றுபட்டால் தமிழுக்கு வாழ்வுண்டு. யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும். இலை மறை காயாக இருப்போரை வெளிக்கொணர்ந்து உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம். தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும் என்பதை விட, தமிழ் வாழ்ந்தால் தமிழன் உலகெங்கும் மார்பைத் தட்டித் தலையை நிமிர்த்தி நடைபோடலாம் என்பதை நினைவிற் கொள்வோம்.

Advertisements