யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு!

தனது கலைக்களஞ்சியங்கள் பக்கத்திலுள்ள மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்ற தளங்களில் நூல்களைப் பதிவிறக்கி Box.Com, Mega.Co.Nz போன்ற இணையச் சேமிப்பகங்களில் பதிவேற்றியுள்ளார். இது தான் அவரது மின்நூல் களஞ்சியம். இதனைவிட யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு?

நீங்க படித்தவங்க… உங்களை எதிர்க்க என்னிடம் போதிய அறிவு இருக்கவேணுமே! என்றாலும் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அது உங்கள் “யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு?” என்ற கேள்விக்குப் பதிலாக அமையுமென நம்புகிறேன்.

இரண்டல்ல… இருபதிற்கு மேற்பட்ட தளங்களில் இருந்து நான் விரும்பிய நூல்களைப் பதிவிறக்கினேன். பல இணையப் பக்கக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியும் இணைத்துள்ளேன். என்னிடம் உள்ள நூலைக்கூட ஒளிப்படமாக்கி (Scan செய்து) நூலாக்கியும் இணைத்துள்ளேன். சில சிறு நூல்களை இணைத்துத் தனி நூலாக்கியும் இணைத்துள்ளேன்.

இம்மின்நூல் களஞ்சியத்தில் ஆங்கிலம் மூலம் தமிழ் புகட்டும் நூல்களையும் இணைத்துள்ளேன். ஆக மொத்தமாக அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்களை இணைத்துள்ளேன். எனது அறிவுத் தேடலுக்குப் பயன்பட்ட பதிவுகளை, நூல்களை யாழ்பாவாணனின் மின்னூல் களஞ்சியமாகப் பகிர்ந்துள்ளேன்.

கணினி நுட்பத்தை அறிந்தவர்கள் தமிழ் மென்பொருள்களை ஆக்கி வெளியிடுகிறார்கள். இணைய நுட்பத்தை அறிந்தவர்கள் மின்னூல் களஞ்சியங்களை நடத்துகிறார்கள். உங்கள் யாழ்பாவாணனும் கணினி நுட்பங்களைத் தமிழுக்குப் பயன்தரும் வகையில் பாவிக்க முயலுகிறார் என்பதையே அவரது மின்நூல் களஞ்சியம் சுட்டி நிற்கிறது.

ஆளுக்காள் மின்நூல் களஞ்சியம் நடத்துவதால் உலகெங்கிலும் வாழும் தமிழருக்குக் கிடைக்க முடியாத நூல்களைக் கிடைக்கச் செய்யலாம். பழந் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பகிரலாம். சிறுவர் தமிழ் இலக்கிய நூல்களைக் கொடுத்து வாசிப்புத் திறனை ஊட்டலாம். இன்னும் இன்னும் நன்மைகள் தான் அதிகம்.

உங்களுக்கு மின்நூல் களஞ்சியம் நடாத்த விருப்பம் இருக்கா? உங்கள் வலைப்பூவில் மின்நூல் களஞ்சியம் என்ற பக்கத்தைத் திறவுங்கள். 4Shared.Com, SkyDrive.com, Box.Com, Mega.Co.Nz போன்ற ஏதாவது சேமிப்புத் தளத்தில் நீங்கள் திரட்டிய நூல்களைப் பேணுங்கள். இப்போது உங்கள் மின்நூல் களஞ்சியம் தாயார். வேணுமென்றால், யாழ்பாவாணனின் மின்னூல் களஞ்சியத்தில் உள்ள நூல்களைப் பதிவிறக்கி உங்கள் தளத்தில் இடுங்களேன்.

உங்களுக்கு மின்நூல் களஞ்சியம் நடாத்த விருப்பம் இல்லாவிடின், அதிக மின்நூல்களைப் பேணும் மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்றவற்றின் இணைய முகவரிகளை உங்கள் வலைப்பூவில் இணைத்து மாற்றாருக்கு உதவலாமே! யாழ்பாவாணன் கூட கலைக்களஞ்சியங்கள் என்ற பக்கத்தில் பயன்தரும் பல தளங்களின் இணைய முகவரிகளைத் தந்துள்ளாரே! இதனாலும் உலகெங்கிலும் வாழும் தமிழருக்கு நல்ல நூல்களைக் கிடைக்க வழிகாட்டுகிறோம் அல்லவா!

முதலிரண்டும் சரிவராட்டி, நீங்கள் விரும்பின் யாழ்பாவாணனின் மின்னூல் களஞ்சிய இணைய முகவரியைச் சமூக வலைத் தளங்களில் ஊடாக உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்களேன். உங்களிடம் நல்ல பயன்தரும் அச்சு நூல்கள் இருப்பின், ஒளிப்படமாக்கியோ (Scan செய்து) MS-Word கோப்பு ஆக்கியோ yarlpavanan@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். யாழ்பாவாணன் அதனை மின்னூலாக்கித் தனது மின்னூல் களஞ்சியத்தில் இணைத்துப் பேணுவாரே!

உலகெங்கும் தூயதமிழைக் கணினி நுட்பத்தாலோ இணைய நுட்பத்தாலோ பரப்பிப் பேண இயலுமானோரால் இம்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என நான் நம்புகிறேன். அல்லது இம்முயற்சிகளில் இறங்கிய மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் தளங்களையாவாது அறிமுகம் செய்துவைக்க முன்வாருங்கள். எப்படியாவது நாளைய வழித்தோன்றல்கள்; தமிழ் தெரியாது விழிபிதுங்காமல், தமிழ் இனி மெல்லச் சாகாமல் இருக்க மின்னூல் களஞ்சியங்கள் உதவுமென நம்புவோம்.

Advertisements