எழுதுகோலும் ஊடகமும் சாவையும் தரலாம்

எழுதுகோல் ஏந்தலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம், ஊடகங்களில் போட்டு வெளியிடலாம் என்பது இயல்பான எண்ணம் தான். எழுதும் போது பிறரை நோகும் வண்ணம் எழுதக்கூடாது. அதேவேளை ஒரு பக்கப் பார்வையிலும் எழுதக்கூடாது.

எழுதுவதாயின் இருபக்கம் பார்த்து இருபக்கத்தையும் சாராது உண்மையைக் கண்டதாகவும் கேட்டதாகவும் பார்த்ததாகவும் அமையும் வண்ணம் எழுதவேண்டும். இதுவே நடுநிலைமை பேணும் ஊடகங்களின் செயற்பாடாகும்.

ஆம்! ஊடகங்களில் எழுதி வெளியிடுவது என்பது கத்தியின் கூர்முனை விளிம்பில் காலை வைத்து நடப்பது போலத் தான் இருக்கும். அரசு சார்ந்த, எதிர்க்கட்சி சார்ந்த, தனி நிறுவனம் சார்ந்த, எனப் பல ஊடகங்கள் இருக்கையில் எந்தப் பக்கமும் சாராத நடுநிலைமை பேணும் ஊடகங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது; நடுநிலைமை அல்லது தனிப் பக்கம் சார்ந்த ஊடகமெனப் பாகுபாடின்றியே அடியுடை வேண்டுகின்றன. இதனால் பல ஊடகவியலாளர்கள் புண்பட்டிருந்தாலும், அதைவிடப் பலர் சாவைக் கூடத் தழுவியுமுள்ளனரே!

நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால் செய்தி தானே! செய் + தீ = செய்தீ என்றால் மனிதன் நாயைக் கடித்த செயல் தீ போன்று ஊரெல்லாம் பரவுவதே! இவ்வாறு செய்தி பரவ நல்ல ஊடகம் தேவை. அதற்குத் தான் நடுநிலைமை ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன.

நடுநிலைமை ஊடகங்களை நம்புவோர் அதிகம். அதனால் அவை அதிகம் விற்பனையாகின்றன. அதனால் தான் நடுநிலைமை ஊடகங்களில் வெளிவரும் செய்திகள்; தீ போன்று எங்கு பரவுகின்றன. மேலும், அதிக படிகள் விற்பனை ஆவதால் விளம்பரத்தால் அதிக வருவாயும் பெறுகின்றன.

ஊடகங்களின் நிலைமை இப்படியிருக்க; ஊடகங்களில் தூய தமிழ் பேணுவதென்பது ஒரு பக்கம் சார்ந்ததாகவே இருக்கும். இதன் காரணமாகவே ஊடகங்கள் தூயதமிழ் பேண ஒத்துழைப்பதில்லை. ஊடகம் என்பது அதிக மக்களின் விருப்பிற்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும். தூயதமிழில் ஊடகங்கள் இறங்கினால்; மூன்றாம் நாள் அவை இழுத்து மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

எனவே, தூயதமிழ் பேணும் பணியைச் சார்ந்த ஊடகங்களை இலாப நோக்கற்ற வகையில் தொடங்கினால் தான் உலகெங்கும் தூயதமிழைப் பேண முடியும். தற்போது அதிகமானோர் வலைப்பூக்களைப் படிப்பதால், என்னைப் போன்று நீங்களும் வலைப்பூக்களை, வலைத் திரட்டிகளைத் தூய தமிழைப் பேணப் பயன்படுத்தலாம்.

வலைப்பூக்கள், வலைத் திரட்டிகள் எல்லாம் ஊடகங்கள் தானே! அப்படி என்றால் நாமும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுமே! ஆமாம்! ஆதாவது, தாக்குரைக் கருத்துகள் வரலாம்; வாசகர் (Visitor) எண்ணிக்கை குறைவடையலாம்; திறனாய்வுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரலாம்.

இவற்றிற்கு முகங்கொடுக்க அதிகமானோர் விரும்புவதை வழங்கவும் வேண்டும் அதனைத் தூயதமிழில் வழங்கவும் வேண்டும். பெரிய ஊடகங்கள் இவ்வாறு மேற்கொள்ள, விளம்பரக்காரர் ஒத்துழைக்காமையாலேயே அவ்வூடகங்கள் இதற்குப் பின்நிற்கின்றன. நமக்கென்ன தூயதமிழ் பேணும் பணியைச் செய்ய விருப்பமிருக்கையில் இலவச வலைப்பூ, வலைத்திரட்டி வழங்குவோர் இருக்கையில் அச்சமென்ன?

உலகெங்கும் தூயதமிழைப் பேண முடிந்தால், தாய்த் தமிழை அழியவிடாது பேணமுடியுமே! வசதி அல்லது பங்காளிகள் ஒத்துழைப்பு இருப்பின் இலாப நோக்கற்ற வகையில் தூயதமிழ் பேணும் பணிக்கெனத் தனி ஊடகம் ஒன்றைத் தொடங்கலாம். அடிப்படைக் கணினி அறிவுடைய ஏனையோர், இணையத் தளங்களைப் பாவித்தும் உலகெங்கும் தூயதமிழைப் பேண முன்வரலாம்.

இணைய வழியிலோ இலாப நோக்கற்ற ஊடகங்களைத் தொடக்கியோ தூயதமிழைப் பேண முற்படுகையில் கருத்திற் கொள்ளவேண்டிய குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். உங்கள் தாக்குரைகளையும் திறனாய்வுகளையும் எதிர்பார்க்கிறேன்.

Advertisements

4 thoughts on “எழுதுகோலும் ஊடகமும் சாவையும் தரலாம்

 1. ஊடகவழியாகத் தூய தமிழ் பேணும் தங்களின் தொண்டு தொடரட்டும். ஊடகத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் மொழியே நம் விழி என எண்ணித் தூய தமிழ் பேணினால் தமிழ் மொழியும் இனமும் தன்னுரிமையுடன் தழைக்கும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

  • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே!
   தங்கள் வேண்டுதலின் படி என் பணி தொடரும். தங்களுடைய கோட்பாட்டை (தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!) நான் விரும்புகிறேன்.
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

 2. தமிழென ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழி இல்லை
  தவிர்த்திடின் பிறச்சொல்லை – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  பிற மொழிகள் தமிழில் கலப்பதை தவிற்க வேண்டும் இதை ஊடகங்கள்
  கட்டாயம் செய்ய வேண்டும் என்பதொரு சட்டம் செய்ய வேண்டும்
  இதை தமிழ்நாட்டை தமிழன் ஆளும் போது மட்டும் தான் செய்ய முடியும்
  வாழ்க தமிழ் , வளா்க தமிழ்

  • தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
   தமிழ் பேணும் ஊடகங்களை
   தமிழில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களை
   அரசும் மக்களும் விரும்பிப் பாவிக்கலாம்.
   இதனால்
   ஊடகங்கள் தமிழ் பேண முன்வரலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.