படைப்பாளிகளுக்கான வழிகாட்டல்

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? – என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சொன்ன பதில்:
“சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.
வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.
சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.
சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.
ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை.”
சான்று: http://tamilthathuvangal.blogspot.com/p/blog-page.html

படைப்பாளிகளைப் பயிற்றுவிக்கும் பதிவுகளை வழங்கும் எனக்கு; எதிர்பாராத வகையில் மேற்படி தளத்தில் கண்ணுற்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டலை எனது வாசகர்களுக்கும் பகிர விரும்புகிறேன்.

அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அவர்களின் இதழியல் நூல் ஒன்றில் “வாசகர் களிப்படையவே எழுத்தை வாசிக்கிறார்கள். எழுதுபவர் வாசகர் களிப்படையும் வண்ணம் எழுத வேண்டும்” என்றவாறு பொருள் தரக்கூடியதாக எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

உலகெங்கும் தூய தமிழைப் பேணிப் பரப்ப, புதிய படைப்பாளிகளை நான் பயிற்றுவித்தாலும் மூத்தோரின் வழிகாட்டல் ஒவ்வொன்றும் எனது மாணவர்களுக்குத் தேவை என்பதை நினைவூட்டுகிறேன்.

ஒரு முறை நான் நூல் ஒன்றை அச்சிட்டு வெளியிட எண்ணியிருந்தேன். அவ்வேளை மூத்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் அவர்களிடம் மதியுரை கேட்டிருந்தேன். “முதலில வாசகர் மட்டத்தில நல்ல மதிப்பீட்டைப் பெறுங்கள். அதாவது, அதிக பதிவுகளை ஊடகங்களில் வெளியிட்டுப் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

அவசரப்பட்டு நூலுருவாக்கி அச்சிட்டு வெளியிட்ட பின், அதனால் வரும் பின்விளைவுகளை சந்திக்கவும் வேண்டுமே! அதாவது அவ்வெளியீட்டின் விளைவாக வரும் தாக்குரைகளையும் திறனாய்வுகளையும் முகம் கொடுக்கத் தகுதி வேண்டும். வாசகர் அறியாத ஒருவரின் நூல் விலைப்படாது, தூசி படிந்தவாறு பொத்தகக் கடைகளில் தூக்கில் தொங்குமே!” என்று நூல் வெளியீட்டைக் காலந் தள்ளி வைக்குமாறு மதியுரை கூறியிருந்தார்.

உண்மையில் அவரது வழிகாட்டல் எவ்வளவு பெறுமதியானது என்பதை என் பட்டறிவினூடாகக் நான் கண்டுணர்ந்தேன். அது கூட உங்களுக்குப் பயன் தருமென நம்புகிறேன். சிறந்த நாவலாசிரியர் செங்கை ஆழியான் அவர்களின் நேர்காணல் (பேட்டி) ஒன்றைப் பத்திரிகையில் படித்தேன். “இலக்கியத்தில் எத்தனையோ துறையிருக்க; புனைகதை இலக்கியத்தைத் தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?” என்று பத்திரிகையாளர் கேட்டிருந்தார்.

“கவிதையில் சொல்லக்கூடிய செய்தியைக் கவிதையில் தான் சொல்லாம். ஆயினும், கவிதையில் எல்லாச் செய்திகளையும் சொல்லிவிட முடியாது. நான் சொல்ல விரும்புகின்ற செய்தியை கதைகளில் சொல்ல இலகுவாயிருந்தது. அதனால், புனைகதை இலக்கியத்தில் நாட்டம் கொண்டேன். எந்தவொரு செய்தியையும் கதைகளில் சொல்லிவிட முடியும்.” என்ற பொருளில் அவரும் பதிலளித்திருந்தார்.

ஒரு படைப்பாளி மக்களுக்கு அதாவது வாசகரூடாக நல்ல செய்தியைச் சொல்ல முனைகின்றார். அவர் அதனைச் சொல்ல இலக்கியத்தைக் கருவியாகக் கையாளுகின்றார். அவ்வேளை சொல்ல வரும் செய்தியை செங்கை ஆழியான் அவர்கள் புனைகதை ஊடாகச் சொல்ல வந்தது போல நீங்களும் கவிதையையோ நகைச்சுவையையோ வேறு எதனையோ கையாளலாம். ஆயினும், வாசகருக்குத் தெளிவாகச் செய்தியைச் சொல்லக் கூடிய உங்களால் இயன்ற இலக்கியத் துறையத் தெரிவு செய்யுங்கள். அப்போது தான் செங்கை ஆழியானைப் போன்று நீங்களும் வெற்றி பெறலாம்.

நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றிருந்த வேளை “ஒரு படைப்பாளி வாசகருக்குத் தெளிவாகச் செய்தியைச் சொல்வதிலேயே வெற்றி பெறுகின்றார். அதற்கு உதவியாகச் சிலர் நகைச்சுவையையும் இயல்பு வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளையும் கையாளுகின்றனர். எந்த நுட்பத்தைக் கையாண்டாலும் வாசகரை மகிழ்விக்கக்கூடிய படைப்பே வெற்றி பெறுகின்றது.” என்று ஓரறிஞர் தெரிவித்தார்.

அவ்விழாவில் “வெற்றி பெற்ற படைப்பாளிகளின் படைப்பைப் படித்து, அவர்களின் நுட்பங்களைக் கையாள்வதாலோ அவர்களின் எழுத்துநடையைப் (பாணியைப்) படியெடுத்துப் பாவிப்பதாலோ புதிதாக எழுத முளைக்கும் இளசுகள் எழுத்துலகில் முன்னேறலாம். ஆயினும், ஒவ்வொருவருக்கும் தனி எழுத்துநுட்பமும் எழுத்துநடையும் (பாணியும்) இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. இவ்வாறு முயன்ற இளசுகள் பிற்காலத்தில் எழுத்துலகில் தனியிடத்தப் பிடிக்கலாம்.” என்று ஓரறிஞர் தெரிவித்தார்.

“எல்லோரும் எழுதலாம் என எழுதுகோல் ஏந்தலாம். ஆனால், எழுத்துலகில் நிலைப்பவர் சிலரே! வாசகர் விருப்பறிந்து எழுதுவோரும் வாசகர் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதுவோரும் தானே வெற்றி பெறுகின்றனர்.” என்று நண்பர் ஒருவர் சொன்னார்.

நான் கற்றுக்கொண்ட சில அறிஞர்களின் கருத்துகளை இங்கு உங்களுடன் பகிர முயன்றிருக்கிறேன். உங்கள் சூழலில் நிகழும் நூல் வெளியீட்டு விழா, நாடக மற்றும் திரைப்பட வெளியீட்டு விழா, அரங்கேற்றங்கள், அறிமுக விழாக்கள் என எல்லா நிகழ்வுகளுக்கும் தவறாது செல்லுங்கள். அங்கு நீங்கள் ஒவ்வோர் அறிஞர்களின் வழிகாட்டலையும் அவர்களின் உரைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நூலை நான் வேண்டும் போது உள்ளடக்கத்தைப் படித்துப் பார்க்குமுன் அந்நூலுக்கான முகவுரை, அணிந்துரை, திறனாய்வுரை என எல்லா உரைகளையும் படிப்பேன். ஏனெனில், அவ்வுரைகளில் தான் உள்ளடக்கத்தின் குறைநிறை மற்றும் சிறப்பு எல்லாவற்றையும் அறிய முடியும். உங்களால் முடிந்தால் பலரது நூல்களில் உள்ள முன்னுரை, என்னுரை என்ற எல்லா உரைகளையும் படியுங்கள். அவற்றில் படைப்பாளிகளுக்கான வழிகாட்டல் பல இருக்கலாம்.

எழுத்தை எளிதாக வெளிப்படுத்தப் பட்டுணர வேண்டும் அல்லது பட்டுணர்ந்தாற் போல எண்ண வேண்டும் (அதாவது கற்பனை செய்ய வேண்டும்) அல்லது கண்டதும் கேட்டதும் என வெளிப்படுத்த வேண்டும் (அதாவது வருணனை செய்ய வேண்டும்); அதேவேளை அவ்வெழுத்து வாசகரைச் சென்றடைய இலகுவான ஊடகத்தைத் (கதை, கவிதை, நகைச்சுவை, பாட்டு, கட்டுரை, நாடகம், திரைப்படம், எனப் பல…) தெரிவு செய்ய வேண்டும்; அத்துடன் வாசகர் விருப்பறிவதிலும் வாசகர் புரிவதற்கான எழுத்துநடையையும் தெரிவு செய்ய வேண்டும். உங்கள் தெரிவில் இவை யாவும் சரியாக இருப்பின், உங்களை விடப் பெரிய படைப்பாளி எவரும் இருக்கமுடியாது.

Advertisements

2 thoughts on “படைப்பாளிகளுக்கான வழிகாட்டல்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.