வாசகர் உள்ளமறிந்து எழுதுவோம்

செய்தித் தாள்களை, நூல்களை, இணையப் பக்கங்களை என வாசிப்பவர் எல்லோரும் வாசகர்களே! இவற்றில் செய்திகளை, படைப்புகளை, பதிவுகளை எழுதுவோர் எல்லோரும் எழுத்தாளர்களே! எழுத்தாளர்கள் எப்போதும் வாசகர்களைச் சார்ந்தே எழுதவேண்டி இருக்கிறது. அதாவது, வாசகர் எவராவது எழுத்தாளர் எழுதிய பதிவுகளை வாசிக்க விரும்பாவிடின்; எழுத்தாளர் எதை எழுதியும் பயனில்லையே!

எழுதுவதால் எழுத்தாளருக்கு ஓர் உளநிறைவு ஏற்படவேண்டும். அதற்காகத் தான் விரும்பியதை எல்லாம் எழுதிவிட முடியாது. அதாவது, எழுத்தாளர் சில பொது ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
1. மாற்றார் உள்ளம் புண்படும்படி எழுதக்கூடாது. அதாவது மாற்றார் அடையாளம் சுட்டியோ மாற்றாரைத் தாக்கியோ மாற்றாரின் பதிவைக் குறைத்து மதிப்பிட்டோ என எழுதக்கூடாது.

2. மாற்றார் பதிவுகளில் இருந்து எதையாவது பொறுக்கி, தனது பதிவுகளில் இணைக்கக்கூடாது. தேவை கருதி அப்படி எழுதினால் எழுதியவரின் அடையாளம், எங்கிருந்து பொறுக்கியது எல்லாம் குறிப்பிட வேண்டும்.

3. எழுதியவர் தனது பதிவுகளை தான் விரும்பும் எந்த ஊடகத்திலும் வெளியிடலாம். ஆனால், அவ்வூடகங்களின் ஒழுங்கைப் பின்பற்றியே எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நண்பர்கள் தளத்தில் தமிழிலேயே பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு சில பொது ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கும் போது எழுத்தாளர் வெளியீட்டு ஊடகங்களுக்குக் கட்டுப்பட்டே எழுதவேண்டியுள்ளது. இதனால், எழுத்தாளருக்கு நிறைவு ஏற்படாமலிருக்கலாம்.

எப்படியிருப்பினும் ஓர் ஊடகம் வாசகர் உள்ளம் நிறைவடையக்கூடியதாகவே தனது வெளியீடுகளை அறிமுகம் செய்யும். அவ்வூடகம் முதன்மை நிலையை எட்ட, அது தேடிக்கொண்ட வாசகர் எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கிறது. அதற்காக அவ்வூடகம் வாசகர் விருப்பறிந்து செயற்படும்.

எனவே தான், எழுத்தாளரும் முதன்மை நிலையை அடைய வாசகர் விருப்பறிந்து செயற்படவேண்டியுள்ளது. வாசகர் ஏன் வாசிப்பை நாடுகிறான்? வாசிப்பதால் மகிழ்வோ நிறைவோ அறிவை அதிகரிக்கவோ பயனுள்ள பொழுதுபோக்காக்கவோ வாசகர் விரும்புவதனாலேயே, வாசிப்பை நாடுகிறான்.

எனவே எழுத்தாளர் எழுதும் போது வாசகர் பக்கம் சற்றுச் சிந்திக்கவேண்டும். ஒரு வாசகர் மொழி, சாதி, மத, இன, இட, நாடு வேறுபாடுகளுக்கப்பால் இருக்க முடியும். எல்லா வாசகர்களையும் எமது பக்கம் ஈர்த்துக்கொள்ள மொழி, சாதி, மத, இன, இட, நாடு வேறுபாடுகளைக் களைந்து வாசகர் விரும்புவதை முன்கூட்டியே அறிந்து எழுதவேண்டும்.

மூ.மேத்தா ஒரு தமிழறிஞர். அவரால் மரபுக்கவிதைகளை ஆக்கமுடியும். ஆயினும் புதுக்கவிதைகளை ஆக்கி, புதுக்கவிதைகளை எழுதத் தூண்டிய உலகப்புகழ் தமிழறிஞராக மின்னியதை எவரும் மறுக்க முடியாது. இன்றைய இளசுகளுக்குப் புதுக்கவிதை தான் பிடிக்குமென முன்கூட்டியே அறிந்து புதுக்கவிதைகளை ஆக்கி வெளியிட்டமையே இவ்வுலகப்புகழுக்குக் காரணம் என்பேன்.

இதனடிப்படையிலேயே, சில ஊடகங்கள் வாசகர் விருப்புகளைக் கருத்துக்கணிப்பு மூலம் பெற்று முன்னேறத் துடிக்கிறது. சில ஊடகங்கள் வாசகர் விருப்புகளை வெளியிடத் தனிப்பக்கமே ஒதுக்கியிருக்கிறது. அப்படியாயின், எழுத்தாளர் வெற்றிபெற்ற ஊடகங்களின் பின்புலம் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் பின்புலம் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

சில ஊடகங்கள் கேள்வி-பதில் பகுதிகளூடாக உடனுக்குடன் வாசகர் ஐயங்களுக்கு விளக்கமளிக்கிறது. முன்னிலை எழுத்தாளர்கள் தமது பதிவுகளை ஊடகங்களில் வெளியிட்ட பின்; அதற்கான திறனாய்வு(விமர்சனம்), தாக்குரை(கண்டனம்), மதிப்பீட்டுரை, கருத்துரை எல்லாவற்றையும் கவனித்துப் பதிலளிப்பதிலேயே கண்ணாயிருப்பர். இவை யாவும் வாசகர் உள்ளத்தில் இடம்பிடிக்கவே!

இன்றைய சூழலில் இணைய எழுத்தாளர்களே அதிகம். இவர்களில் புகழ் ஈட்டுவோர் எல்லோரும் வாசகர் கருத்துகளை உடனுக்குடன் கவனித்துப் பதிலளிப்பதிலேயே வெற்றி பெறுகின்றனர். வாசகர் ஊடகங்களுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களுக்கும் வேண்டியவர்களே!

எழுதுகோல் ஏந்திய எழுத்தாளர்களே! வாசகர் எதிர்பார்ப்புகளை, வாசகர் விருப்புகளை அறிந்து அவர்களது உள்ளம் நிறைவடையக்கூடிய வகையில் உங்கள் படைப்புகளை ஆக்குங்களேன். வாசகர் உள்ளமறிந்து எழுதுவோரே, உலகில் முன்னிலையில் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எழுதுங்கள் தோழிகளே!
எழுதுங்கள் தோழர்களே!
உலகெங்கும்
தூயதமிழ் பரப்பிப் பேண…
எழுதுங்கள் தோழிகளே!
எழுதுங்கள் தோழர்களே!
தமிழ் இனி மெல்லச் சாகாதென
உலகெங்கும்
தமிழ் மொழியை அழியாது பேண…
எழுதுங்கள் தோழிகளே!
எழுதுங்கள் தோழர்களே!
வாசகர் உள்ளமறிந்து
தமிழை உலகிற்குப் படிப்பிக்க…
எழுதுங்கள் தோழிகளே!
எழுதுங்கள் தோழர்களே!

Advertisements

2 thoughts on “வாசகர் உள்ளமறிந்து எழுதுவோம்

  1. பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.