பாடுபொருளும் பாவடிகளும்

உறவுகளே! உங்களை விட அறிவில் சிறியன் நான் என்பதில் உங்களுக்கு ஐயமிருக்காது. உலகெங்கும் தூய தமிழ் பேண உதவும் வகையில் http://paapunaya.blogspot.com/ என்ற தளத்தில் பா புனைய உதவும் பதிவுகளைப் பதிகின்றேன். இங்கு ஏனைய இலக்கியங்களை ஆக்க உதவும் பதிவுகளை மேற்கொள்ளவுள்ளேன்.

எனது “யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்” என்ற தளத்தில் (http://paapunaya.blogspot.com/) “பாடுபொருளும் பாவடிகளும்” என்ற பா பற்றி இங்கு கருத்துப் பகிர விரும்புகிறேன். பாடுபொருள் தான் பாவி(கவிதையி)ன் அடிகளின் நீளத்தையும் வெற்றியின் ஆழத்தையும் தீர்மானிக்கிறது என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்குப் பதிலாக இப்பாவைப் புனைந்தேன்.

உண்மையில் பாவி(கவிதையி)ன் அடிகளின் நீளத்தையும் வெற்றியின் ஆழத்தையும் பாவலனின் பாட்டுத்திறமே தீர்மானிக்கிறது. ஒரு போதும் பாடுபொருள் தீர்மானிக்காது. எடுத்துக்காட்டாக “பசி என்ற தலைப்பில் பா புனைக” என்று சொன்னதும் ஆளுக்காள் வெவ்வேறு அடி எண்ணிக்கையில் பா புனைவதைக் காண்பீர்.

 

எடுத்துக்காட்டு – 01:

சும்மா கிடந்த என்னை

பசி வந்து

வழிப்பறிக் கொள்ளையிட்டு

ஆங்கொருத்தியின்

உணவுண்ண வைத்ததே!

 

எடுத்துக்காட்டு – 02:

பசி வந்து நான் நோக

கெட்ட என் உள்ளம்

பிள்ளையாருக்குப் படைத்த பொங்கலை

களவாய் விக்காமல் விழுங்கு என்கிறதே!

 

எடுத்துக்காட்டு – 03:

பசி வந்து வாட்டியதன் வினை

உணவு வழங்கும் நாளில் (அன்னதானத்தன்று)

கோவில் வாசல் ஏறாதான் ஏறினான்!

 

எடுத்துக்காட்டு – 04:

பசி வந்து வாட்டினால் தானே

உழைப்பின் அருமை தெரிகிறதே!

 

எடுத்துக்காட்டு – 05:

பசி போக்க வழியின்றி உயிர் பிரிந்ததே!

 

உறவுகளே! “பசி” என்ற தலைப்பில் ஐந்தடி தொட்டு ஓரடி வரை ஐந்து எடுத்துக்காட்டுகளைப் பார்த்துவிட்டீர். இன்னுமா தயக்கம்? எடுத்துவிடுங்கள் உங்கள் பாட்டுத் திறத்தை! நறுக்கென நாலடிகளில் விரும்பிய பாடுபொருளில் மிடுக்கென உலகெங்கும் தமிழ் பரவப் பா புனைய முன்வாருங்கள்.

 

Advertisements

2 thoughts on “பாடுபொருளும் பாவடிகளும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.