உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி

ஒரு படைப்பாளி நல்ல உளவியலாளனாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளியாக வந்து விட்டால்; தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஆயினும், உளவியலாளனாக இருந்தால் படைப்பின் பாத்திரங்களாக வருவோரின் உளநிலையை வெளிப்படுத்த உதவும்.

எழுதுகோல் ஏந்துவோரின் எண்ணத்தில் எப்போதுமே தனது படைப்புகள் யாவும் சிறந்தது என்ற உளப்பாங்கு இருந்து வருகிறது. அது அவர்களது உண்மைத் திறமைகளை வெளிக்கொணரத் தடையாகவுள்ளது. தான் எழுதுவதெல்லாம் சிறந்ததென எண்ணுவதால் மாற்றார் படைப்புகளைப் படித்து, மாற்றார் படைப்புகளை விடத் தனது படைப்புகளைச் சிறப்பாக ஆக்க முடியாது போகிறது.

தான் படைக்கும் படைப்புத் தான் சிறந்தது என்றும் மற்றவர்களுடையது கொஞ்சம் தரக்குறைவு என்றும் சிலர் எண்ணுகிறார்கள். அதனால், மற்றவர்களுடைய படைப்புகளைப் படித்து; மற்றவர்களுடைய எழுத்தாற்றல் நுட்பங்களை, கையாளும் குறுக்குவழிகளை, உருவாக்கும் பாத்திர அமைப்பை, கதைக் கருவை, கதை நகர்த்தும் முறையைக் (பாணியைக்) கற்றுக்கொள்ள முடியாது போகிறது. இதனால், தமது படைப்புகளின் தரம் குறைய வாய்ப்பு உண்டு.

ஒரு படைப்பாளி மற்றைய படைப்பாளி மீதான திறனாய்வை (விமர்சனத்தை) மேற்கொள்ளும் முன் மேலே நான் கூறிய மூன்று உளப்பாங்கையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய படைப்புகளைத் திறனாய்வு (விமர்சனம்) செய்யும் போது; படைப்புகளை ஆக்கியோன் மென்மேலும் சிறந்த படைப்புகளை ஆக்கத் தூண்டவும் மக்களுக்கு (சமூகத்திற்கு) நன்மை தரக்கூடியதுமான படைப்புகளை ஆக்கவும் தங்கள் திறனாய்வு (விமர்சனம்) பின்னூட்டமாக இருக்க வேண்டும். அதற்காக திறனாய்வுப் (விமர்சனப்) பக்கம் தலையைக் காட்டாமல் எந்தப் படைப்பாளியும் ஒதுங்கி இருக்க முடியாது. அதாவது, உங்களது திறனாய்வு (விமர்சன) ஆற்றல் தான் உங்களைச் சிறந்த படைப்பாளி ஆக்கிறது.

ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்ற போக்கில் சிலர் தாம் கையாளும் இலக்கிய வடிவம் தான் சிறந்தது மற்றைய இலக்கிய வடிவம் சிறந்ததல்ல என எண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாகக் கதையென்றால் பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும்; பா(கவிதை) என்றால் பத்து வரிகள் போதும்; கதையை விடக் பா(கவிதை) வாசிப்பவருக்கு வசதி என எந்தப் பாவலனும் (கவிஞனும்) எண்ணக் கூடாது. ஏனெனில், எல்லா இலக்கிய வடிவங்களும் சமவுரிமை பெற்றவை. அதாவது, தரத்தில் எல்லாம் சமனானவை. மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் துணைபுரியும் இலக்கியமே சிறந்தது. இதனால், இவ்வாறு சிறந்த இலக்கியத்தை ஆக்கியோருக்குப் பெயரும் புகழும் வந்து குவிகிறது.
சமகாலத்தில் சிலர் துளிப் பா (கைக்கூ) தான் சிறந்தது, புதுப் பா (புதுக் கவிதை) தான் சிறந்தது, இலக்கணப் பா (மரபுக் கவிதை) தான் சிறந்தது எனப் பட்டிமன்றம் அல்லது வழக்காடு மன்றம் நடாத்துவார்கள். இதற்கும் ஒரே பதில்; எல்லாப் பாக்களும் (கவிதைகளும்) சமனான தரம் வாய்ந்த இலக்கிய வடிவங்களே! களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்ட உதவும் பாக்(கவிதை)கள் மக்களை அல்லது வாசிப்பவரை எளிதாகச் சென்றடைகின்றது.

ஒரு நல்ல படைப்பாளி தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருந்தாலும் மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் தேவையான அவர்கள் பக்கத்தையும் அறிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக காதலியின் விருப்பத்தை காதலன் நிறைவேற்றுவது போல வாசகரின் விருப்பத்தைப் படைப்பாளி நிறைவேற்ற வேண்டும்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண முன்வரும் படைப்பாளிகளே! உளவியல் நோக்கில் மேலே கூறிய எல்லாம் நல்லம் தான். உங்கள் படைப்புகளைத் தூய தமிழாக எழுதினால், எவரும் விரும்பமாட்டார்கள். தூய தமிழாக எழுதலாம்; தூய தமிழ் சொல்களுக்கு ஈடான புழக்கத்திலுள்ள பிறமொழிச் சொல்களை அடைப்புக்குள் இட்டு எழுதினால் எவரும் வாசிக்க இலகுவாயிருக்கும். இவ்வாறு தான் இன்றைய இலக்கியங்களில் தூய தமிழை இழையோட வைக்கமுடியும்.

எல்லோரும் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண எழுதுகோல் ஏந்த முன்வாருங்கள். ஒரு படைப்பாளி தன்னையும் வாசகரையும் படித்த பின், வாசகர் மீது தனது எதனையும் திணிக்காமல் வாசகர் விருப்பிற்கேற்ப தனது எண்ணங்களைப் பகிர முன்வரவேண்டும். அப்போது தான் இலக்கியங்களூடாக தூய தமிழைப் பேண முடியும்.

 

Advertisements

2 thoughts on “உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி

  1. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்… வளர்க தமிழ்.

    • ஐயா!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான முயற்சியை மேற்கொள்கிறேன்.
      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.